பெரிய மாமா..!

 


எனது ஊரில், எனது பெரிய மாமா முதன் முதலில் அரச வேலைக்குச் சென்றவர்..! அவர் ஒரு தபால் அதிகாரி. அவர் வேலைக்குச் சென்ற பிறகே எனது தாயாரின் குடும்பம் தலைதூக்கியது..!

அவரது முயற்சியால் நிலபுலன்கள் வந்தன..! பணம் வந்தது..! சகோதரங்கள் படித்தார்கள்..! அனைவரும் அரச வேலைகளில் அமர்ந்தார்கள்..!

தற்போது, அரச அதிகாரிகள், விஞ்ஞானிகள், பொறியலாளர்கள், வைத்தியர்கள், கணக்காளர்கள், பட்டதாரிகள்,  ஆசிரியர்கள் எனப்பலர் எமது குடும்பத்திற்குள்  வந்தார்கள்..! ஒரு சாதாரன விவசாயக் குடும்பத்திற்கு ஊரில் ஒரு மரியாதை வந்ததற்கு முதல்  காரணம், அம்மாவின் பெரிய அண்ணனாகிய எனது பெரிய மாமா தான். அவர் சொல்லுவார் “தனது ஒரு மாதச்சம்பளத்தில் 4 பவுண் நகை வாங்க முடியும் என்று..!” அந்த அளவிற்கு இலங்கையின் பொருளாதாரம் 1960 களில் இருந்துள்ளது..!

ஆனால், அவரது கல்வித்தகுதி  என்று பார்த்தால், கல்விப் பொது சாதாரண தரத்துடன் வேலைக்குச் சென்றவர்.  ஆனால், அந்தப்படிப்பை ஆங்கில மொழிமூலம்  படித்தவர்..! மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்..! எல்லோரிடமும் அன்பாகவும் அளவோடும் பழகக்கூடியவர். குடும்ப உறவுகள் தாண்டி, ஊருக்கே பல நன்மைகளைச் செய்தவர். பின்னர், அவரது குடும்பத்தோடு கொழும்பில் வாழ்ந்து, மனைவி இறந்த பிறகு,  தற்போதுவரை கனடாவில் வசித்து வருகின்றார். அவரது பிள்ளைகள் அனைவரும் அவர்களின் குடும்பத்தோடு வெளிநாடுகளில் வசிக்கின்றார்கள். அவர் பலருக்கு தன்னால் இயன்ற உதவிகள் செய்தபடியால், பிள்ளைகள் நிம்மதியாகவும், நிறைவாகவும் வாழ்கின்றார்கள். செய்த நல்ல உதவிகள், திரும்பி அவர்களை நிறைவாக வாழ வைக்கும் என்பதற்கு மாமாவின் வாழ்க்கை சான்று..!

சில நாட்களுக்கு முன்னர், கொழும்பில் நடந்த  தலைமையகக்கூட்டத்திற்கு போய்வரும்போது, பெரிய மாமாவீட்டிற்கு போனேன். அவரும் கனடாவில் இருந்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னர் தான் அங்கு வந்தவர். அவரது வயது 87ஐ தாண்டிவிட்டது. நானே ஓய்வெடுக்கும் வயதை நெருங்கும்போது, அவர்கள் எவ்வளவு முதுமையாக இருப்பார்கள்..! இருந்தாலும் மனவுறுதியும், சிறுவயதில் பட்ட அனுபவங்களும் அவர்களை இன்னும் திடமாகவே வைத்துள்ளது..!

இன்னும் எவ்வளவு காலத்திற்கு பூமியில் அவர்கள் இருப்பார்களோ இறைவனுக்குத் தான் தெரியும். நான் பொதுவாக நம்புவது, கடமை இருக்கும் வரை இறைவன் ஓய்வு கொடுப்பதில்லை என்று..! மரணம் என்பது என்னைப்பொறுத்தவரை பெரும் ஓய்வு..! அதைப்பெற, கொடுத்த கடமைகளை முடிக்க வேண்டும். என்னைப்பொறுத்தவரை, அரசு கொடுத்த கடமைகளை முடிக்கவே இன்னும் ஏறக்குறைய ஐந்து வருடங்கள் இருக்கின்றன. ஏனைய கடமைகளை முடிக்க இறைவன் எவ்வளவு காலத்திற்கு விசா வழங்கியுள்ளார் என்பது அவருக்குத்தான் தெரியும்.

சரி, மாமாவீட்டிற்கு சென்றபொழுது பல பழைய கதைகளைச் சொன்னார்..! எமது குடும்ப நிலை பற்றிச்சொன்னார். தற்போது, எனது உழைப்பும், வளர்ச்சியும், சமூகத்துடன் பழகும் முறை பற்றியும் பெருமையாகச் சொன்னார்..! நான் படித்து, ஒரு கல்விச்சமூகத்தில் இருப்பதை பெருமையாகச் சொல்லி, எனது வாழ்க்கையின் வெற்றியைப் பாராட்டினார்.

எனது தாயாரின் திருமணத்தை செய்து வைத்தவர், அவர் தான்.  எனது தந்தையுடன் இறுதிவரை நட்பாக இருந்தவரும் அவர் தான். ஒரு கட்டத்தில் தந்தை வெளிநாடு போய் ஏமாந்து, திரும்பி ஊருக்கு வரத்தயங்க, அவருக்கு தைரியம் கொடுத்து, திரும்ப ஊருக்கு கூட்டிவந்தவரும் அவர் தான். நான் கொழும்பு சென்றால் என்னுடைய சகல அலுவல்களையும் செய்ய, தேவையான இடங்களுக்குக் கூட்டிச் செல்பவர் அவர் தான். எனது தாயாரை, ஒரு வேலையில் இணைத்து, எமது வாழ்வு மேலோங்கக் காரணமானவரும் அவர்தான்..! அவ்வளவு விடயங்களை அவர் செய்தாலும், அவருக்கு உடனேயே நல்ல பெயர் கிடைப்பதில்லை..! என்ன நல்லது செய்தாலும்,  அதிலுள்ள நல்லவற்றை விட்டு விட்டு குறைகளை மாத்திரம் தூக்கிப்பிடித்து, அவரைக் கவலைப்படுத்துவதையே  பலரும் செய்துள்ளார்கள்..! ஆனால் அவர் அதைப்பற்றி அலட்டிக்கொள்வதில்லை. தன்னால் முடிந்ததைச் செய்தேன் என்ற உணர்வோடு இருப்பார். யாருக்கும் தீங்கு செய்ய வேண்டும் என்று நினைத்துச் செய்வதில்லை. ஆனால் சில காரியங்கள், தீங்காக அமைந்துவிடுவதுண்டு..!

அதற்கு யாரையும் குறைசொல்ல முடியாது. எனது திருமணத்தில் கூட அவரது பங்களிப்பு உண்டு..! அவரது நண்பரே, எனது மனைவியின் தந்தை.

எனது தாய் வழிக்குடும்பத்திற்கு எவ்வளவு நன்மைகள் செய்தாரோ அதேயளவு நன்மைகளை, அவரது காதல் மனைவி குடும்பத்திற்கும் செய்துள்ளார்..! அவரது மனைவியை அன்று ஒரு அழகியாகவே கதைப்பார்கள்..! அவ்வளவு  முகப்பொலிவும்  நல்ல நிறமாகவும் இருப்பார்..! ஒரு பறவையின் பெயர் சொல்லியே அவரை எல்லோரும் அழைப்பார்கள்..! அவரிடம் நான் உணவு உண்டிருக்கின்றேன். ஒரு கட்டத்தில், என்னுடன் கதைக்கும்போது “உமது மாமா என்னுடன் தற்போது அன்பாக இருப்பதில்லை..!” என்று கவலைப்பட்டுள்ளார். தலையில் சில முடிகள் நரைத்ததைப் பார்த்து மேலும் கவலைப்பட்டுள்ளார். தனது கணவனைக் கவரமுடியாமல் போய்விட்டதே என்று கலங்கியுள்ளார்..! சில வருடங்களில், புற்றுநோயால் பூமியை விட்டே மறைந்துள்ளார்..!

இறுதிவரை அவரை மிகக்கவனமாக பார்த்தார் எனது மாமா. கடைசிக்காலங்களில், மனைவியின் அனைத்து கடமைகளையும் அவரே செய்தார்..!

அவர் சொல்லிய நிறைய விடயங்கள் மனதில் இருந்தாலும், இம்முறை சந்திப்பில் ஒருவிடயம் சொன்னார் எனக்குத் தூக்கிவாரிப்போட்டது..! அதனை எனக்குச் சொல்லவேண்டிய அவசியம் கிடையாது. இருந்தாலும் தனது சகோதரியின் மூத்த மகன், அவனுக்கு முழு உண்மையும் தெரிய வேண்டும் என்று விரும்பியுள்ளார்..! அவரது பிள்ளைகளுக்கே தெரியுமோ தெரியாது..! அது, அவரது மனைவி கர்ப்பமாக இருக்கும் காலத்தில், அவரது மகள் வயிற்றில் இருந்தபோது, அவரது மனைவியின் சகோதரிக்கு திருமணப் பேச்சு வந்துள்ளது..! குறிப்பிட்ட நாட்களுக்குள் கலியாணம் செய்ய வேண்டும். மாமாவும், மனைவியுமே தத்தம் கொடுத்து அந்தத் திருமணத்தை முன்னின்று நடத்த வேண்டும். இல்லை என்றால் அந்தத்திருமணம் நடைபெறாது போகவும் வாய்ப்பு உண்டு. குறிப்பாக மாமா தான் அந்தக் குடும்பத்தின் தலைவராக இருக்கவேண்டிய சூழல்..! அவரது மனைவியின் தாயாருடைய பேச்சுக்குக் கட்டுப்பட்டு, குழந்தை இயல்பாக பிறக்க இருக்கும் காலத்திற்கு ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்னரே பிள்ளையை வெளியே எடுத்துள்ளார்கள்..! அதனால் அவரது மனைவியின் அடிவயிற்றில் பல காயங்கள் ஏற்பட்டு அதனைச் சரிசெய்ய பல தையல்களையும் போட்டிருந்தார்கள்..! இது ஏறக்குறைய 1983 களில் நடந்துள்ளது. அன்றில் இருந்து மாமாவிற்கும், அவரது மனைவிற்கும் குடும்ப வாழ்க்கை  போய்விட்டது..! அந்த வாழ்க்கைக்குப் போனாலே இரத்தமும், வலியும் தான் விளைவாகும்..! அந்த சூழல் வந்த காலத்தில் இருந்து ஏறக்குறைய 20 வருடங்களில், மாமாவின் மனைவி போய்விட்டார்..!  தற்போது அவரது அந்த மகளுக்குத் திருமணமாகி மூன்று பிள்ளைகளுடன் கனடாவில் நன்றாக இருக்கின்றார். இம்முறை இலங்கை வரும்போது, அந்த மகள் குடும்பத்துடனே வந்தார். அவரது மகளும் கண்டியைச் சேர்ந்த சகோதர இன ஆணையே திருமணம் செய்துள்ளார்..!

தாம்பத்திய உறவு இல்லாமல் ஒரு ஆண் சமூகத்தில் நேர்மையாக வாழுவது என்பது மிகக்கடினம்..! ஆன்மீகம், யோகா மற்றும் கல்வித்தேடல் என்பவற்றின் ஊடாக தமது உடல்தேவைகளைக் கட்டுப்படுத்தியுள்ளார். இதைச்சொல்லும் போது, எனக்கும் மிகக்கஷ்டமாக இருந்தது.

ஒரு பெண்ணைத் திருமணம் செய்யும்போது, கடைசிவரை காப்பேன் என்ற உறுதிமொழியைக் கொடுத்துவிட்டு, இடையில் தடம் மாறுவது என்பது ஒருவருடைய நேர்மைக்கு இழுக்கு. நல்ல மனிதர்கள் அற்ப சுகங்களுக்காக வாழ்வை நாசமாக்கமாட்டார்கள். மாமா அந்த வகையில் இருப்பது, எனக்கும் ஒரு முன்மாதிரியாகத் தோன்றுகின்றது..!

இறைவழிபாடு இச்சைகளை அடக்கும்..! உடற்பயிற்சிகளும் உடலை ஆரோக்கியமாக்கும். நல்ல வாழ்வியல் முறைகளே எம்மை நல்ல மனிதர்களாக்கும். மாமா அதைச்செய்து காட்டியிருக்கின்றார்.

இறுதியாக, அவர் எமக்கு கொண்டுவந்த பொருட்களைப் பொதிபண்ணிவிட்டு, இரண்டு வேறுபட்ட சுவையுள்ள தேநீர்களைத் தன்கையால் தயார்படுத்தி எனக்குத் தந்து, கூடவே பிஸ்கேட்களையும் உண்ணத்தந்தார். அந்த சத்து நிறைந்த தேநீர்கள், இரவு உணவுத்தேவையை  தவிர்த்தது..! இறுதியாக, அவரது 5ஆவது மாடி வீட்டில் இருந்து,  லிப்ட் உதவியுடன் இறங்கி, எனக்கு ஒரு ஆட்டோவை பிடித்துத்தந்து, வெள்ளவத்தை கடற்கரையிலுள்ள யாழ் பஸ்கள் நிற்கும் இடத்திற்கு அனுப்பிவிட்டே திரும்ப வீடு சென்றார்.

அவரைச் சிறுவயதில் இருந்தே பார்க்கின்றேன். ஆரம்பத்தில் ஒரு ஸ்கூட்டரில் தான் வீட்டிற்கு வருவார்..! அந்த நேரத்தில் எமது வீடுகளிலுள்ள மிகப்பெரிய வாகனமே “சைக்கிள்” தான்..! அதனால் அவரை நான் “ஸ்கூட்டர் மாமா” என்று தான் அழைப்பேன். இன்றுவரை அந்தப்பெயரே தொடர்கின்றது..!

கம்பீரமாகப்பார்த்த அவரைத் தற்போது ஒரு கூனல் கிழவனாகப் பார்க்க மிகக்கவலையாக இருக்கின்றது. இருந்தாலும் அவரும் தனது வயதைப்பற்றிக் கவலைப்படாமல், ஒரு இளம் பையன் மாதிரித் தொப்பிபோட்டு, சாப்பாத்துப்போட்டு வெளிக்கிடும்போது, எமக்கும் நம்பிக்கை வருகின்றது..! வயது என்பது எண்கள் மட்டும் தான்..! ஆரோக்கியம் என்பது எமது கையில் தான்..! நாம் தான் உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருந்து, எமக்குத் தரப்பட்ட கடமைகள் இருக்கும் வரை

வாழ்வை நீடிக்க முடியும்..! எமது குடும்பத்திற்கு இந்த விடயத்திலும் மாமா, ஒரு முன்மாதிரியாகவே இருக்கின்றார்..!

 

ஆ.கெ.கோகிலன்

15-12-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!