சற்று முறைப்பு..!

 


சில விடயங்கள் அனுபவத்தினால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். சிலர் தமது செயல்களில் உள்ள ஓட்டைகளை மறைக்க இன்னொரு நல்ல செயலைச் செய்வது போல் நடிப்பார்கள்..! மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

எமது நிறுவனத்தைச் சுற்றி நிறையப் புற்கள், பூண்டுகள் என்பன வளர்ந்துள்ளன. ஆனால் அவற்றை சுத்தப்படுத்த எமது துப்பரவுப்பணியாளர்களால் முடியவில்லை. எவ்வளவு தூரம் கதைத்தும் பயனில்லை. அவர்களுக்கு பல வாய்ப்புக்கள் கொடுக்கப்பட்டும் இன்னும் சரியான செயற்பாடுகள் நடைபெறுவதாக இல்லை.  இனி, அவர்களை நிறுத்தி வேறு ஓர் நல்ல ஒப்பந்தகாரரிற்கு  கொடுக்க நினைக்கின்றேன். இருந்தாலும் ஒவ்வொருவரும் வரும்போது வெட்டிப்புடுங்குவதாகச் சொல்லிவிட்டு, பின்னர் தமது பழைய நிலைக்கே செல்கின்றார்கள்..! இதனைக் குறையாகச் சொல்ல முடியாவிட்டாலும், மக்களின் எண்ணங்களில் இப்போது சரி, பிழை என்பதன் வரையறைகளே வேறுபட்டுள்ளன..!

விதிமுறைகளை மீண்டும்  மீண்டும் சொல்லி வழிப்படுத்த வேண்டியது நமது கடமையாக இருக்கின்றது.

இந்தச்சூழ்நிலையில் ஒரு துப்பரவுப்பணியாளர் கந்தளாயில் இருந்து எமது நிறுவனப் புற்களை எடுக்க ஒருவரைக் கூட்டிவருவதாகவும், அதற்கு அனுமதி தரும்படியும், பதிவாளர் உதவியுடன் கேட்டார். நான் அதனை மறுத்துவிட்டேன். எந்த விடயங்களைத் தனியாருக்குக் கொடுப்பது என்றாலும் அதற்கு ஒரு முறையுண்டு. அதனைப்பின்பற்றுவோம். எமது புற்பகுதிகளை வெளியாட்களுக்கு மேய்சலுக்கு வழங்கினால், அதனை ஒரு முறைப்படி செய்ய வேண்டும். அதற்காக ஒரு ஒப்பந்தம் போடவேண்டும். ஒரு தொகைப்பணம் நிறுவனத்தின் கணக்கிற்கு வாங்க வேண்டும். அது அரச பணமாக மாறவேண்டும். அத்துடன், ஏதாவது தவறுகள் செய்தால் அதற்கான தண்டங்களும் அங்கே சேர்க்கப்பட வேண்டும். அதன் பிறகே இவ்வாறான விடயங்களைச் செயற்படுத்த முடியும். தனியாக தாம் நினைத்த வகையில் இதனை யாரும் செய்ய முடியாது. செய்யவும் கூடாது.

அடுத்து, எமது மாணவர் ஒருவர், எமது நிறுவனக்கட்டுப்பாடுகளைத் தவிர்த்து, வேறுவழியில் அமைச்சுக்களையும், தலைமையகத்தையும் தொடர்புகொண்டு, தேவையில்லாத சிறிய விடயங்களைத் தெரியப்படுத்தி, அவர்களின் வேலைகளுக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளார்..! அதற்கான விசாரனை ஒழுங்குகளுக்குரிய கடித்தை  பதிவாளருடம் கொடுத்து, அதனை அனைவருக்கும் நேரத்துடன் அனுப்பச்சொல்ல, அவரும் “ஓம்” என்று சொல்லிவிட்டு, இன்று, மறந்துவிட்டேன் என்றார்..! இப்படியான மனிதர்கள் அலுவலக வேலைகளில் இருக்கும்போது, அவர்களை வழிப்படுத்தவும் நமக்கு  மேலதிகமாக நேரம் தேவைப்படுகின்றது.

தமது கடமைகளை முறைப்படுத்த, சில சமயங்களில் மறந்தால், அதனைத் தவிர்க்க நிறைய நுட்பங்கள் உண்டு. என்னளவிற்கு மறதியுள்ளவர்கள் யாராவது இருப்பார்களா  தெரியாது..!  இருந்தாலும், அது மற்றவர்களைப் பாதிக்காத வகையில், பல நுட்பங்களை வாழ்வில் பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றேன். இவ்வாறு எழுதுவது கூட அதில் ஒன்று தான்..!

ஒவ்வொருவரும் தமது நிலையை உணர்ந்து, அது ஏனைய பொதுவான வேலைகளைப் பாதிக்காமல் இருக்க, வழிமுறைகளைக் கண்டறிந்தால் அதற்கு தீர்வு உண்டு. ஆனால், நான் ஏன் செய்து காட்ட வேண்டும் என்று நினைத்தால், அதற்கு தீர்வே இல்லை..! காலம் சில படிப்பினைகளைத் தரும். அப்போது பார்க்க வேண்டியது தான்.

அடுத்து, வழமையாக எனது வகுப்பிற்கு வராமல் வெளியே சிற்றூண்டிச்சாலைப்பக்கம் சுற்றும் ஒரு இளைஞர், நான் வகுப்புக்குள் நுழையும்போது முறையாக மாட்டினார். நான் உள்ளே செல்ல, அவர் “வருத்தம்” என்று சொல்லி மருந்துபோட வெளியே செல்ல, அவரையும், ஏனைய அனைத்து மாணவர்களையும் வைத்து, சுய முகாமைத்துவம், நேர முகாமைத்துவம், நிறுவன நோக்கம், மாணவர்கள் கடமை, விரிவுரையாளர்கள் கடமை என்று விரிவுரைகளூடாக மிகப்பெரிய மடைமாற்றங்களைச் செய்தேன் என்றாலும், சிலர் காதை மூடிக்கொண்டு இருந்ததை, நான் எனது மனக்கண்ணால் பார்த்தேன். சரி மூடிக்கொண்டு இருப்பவனுக்கு ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் புரிந்தவர்கள், மற்றவர்களில் அக்கறையிருந்தால் அந்த விடயங்களைப் புரிய வைப்பார்கள் என்று நம்புகின்றேன்.

எப்போதும் நான்  எல்லோரிடனும் அன்பாகப் பழகவேண்டும் என்றே விரும்புவது உண்டு. யாரையும் கஷ்டப்படுத்த எனக்கு விருப்பமில்லை. ஆனால் அவரவர்கள் தமது வேலைகளை செய்யாது சொதப்பி, சிக்கல்களை ஏற்படுத்தினால், பின்னர் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம். இது எனது ஒரு கடமையும் கூட..! அனைவரும் தமது கடமைகளை உணர்ந்து, யாரிடமும் எந்தக் கெட்டபெயரும் வாங்காமல், நாட்டின் நன்மைக்காக, மக்களின் விருத்திக்காக, தமது கடமைகளைச் செவ்வனே செய்து முடிக்க தங்களால் இயன்ற அர்ப்பணிப்புக்களை வழங்க வேண்டும். ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது பிழையான அரசியல் வாதிகளைக் குறைசொல்வதில் மாத்திரம் இல்லை. மாறாகப் பிழையான எமது இயல்புகளையும் சரிப்படுத்துவதில் தான் அதிகம் தங்கியுள்ளது..! எல்லோரும் ஒன்றாக முயன்றால், நாடு முன்னேறுவது நிச்சயம். அந்த நல்ல எண்ணத்துடன் அனைவரும் உழைக்க வேண்டும். அதுவே அனைவருக்கும் நல்லது.

 

ஆ.கெ.கோகிலன்

04-12-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!