நாமறியோம்..!
இன்று மழை சற்று ஓய்ந்து இருந்தது..! இரவு முழுக்கத் தொடர்ந்த மழை
இன்று பகலிலும் தொடர்ந்தால், நிலைமை இன்னும் மோசமாகப் போகும் என்பது இறைவனுக்கும்,
இயற்கைக்கும் தெரிந்துள்ளது. அதனால் சற்று மழைக்கு ஓய்வு விட்டுள்ளார்கள்..! பார்ப்போம்
நிலைமை எப்படி மாறுகின்றது என்று..?
இந்தக்கிழமை ஊரில் இருந்து திருகோணமலை வரும்போதே ஏறக்குறைய 10 நாட்கள் தொடர்ந்து தங்கவேண்டும் என்ற திட்டத்துடன் தான் வந்தேன். தற்போதைய நாட்டுச்சூழல் குறிப்பாக, இயற்கையும் அதற்கு ஏற்பவே அனைத்தும் நடப்பதாக எனக்குத் தோன்றுகின்றது..! ஊருக்குப் போகும் பாதைகளில் வெள்ளம் இருப்பதாலும், சில பாலங்களில் திருத்தங்கள் செய்யவேண்டிய தேவை இருப்பதாலும், இவ்வாறான சூழல்கள் உருவாகின்றன.
காலை மாணவர்களுக்கு படிப்பிக்கச் செல்லும் போது ஏறக்குறைய மொத்த மாணவர்களில் நாலில் ஒரு பகுதியினர் மாத்திரமே வகுப்பிற்கு வந்திருந்தார்கள்..! பல இடங்களில் தண்ணீரால் பல்வேறு பிரச்சனைகள் வந்துள்ளன..! சில இடங்களில் போக்குவரத்துக்கள் சேதமாகியுள்ளன..! சில இடங்களில் குளிர் காய்ச்சல், தடிமன், இருமல் போன்ற நோய்களும் பரவுகின்றன..!
நான் ஒரே இடத்தில் இருப்பதால் பிரச்சனைகள் பெரிதாக இல்லை என்றாலும்
சில உடல் உபாதைகள் வயது காரணமாக இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை நமது சீரான செயற்பாடுகள்
ஊடாக கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டியது தான்.
மழை காரணமாகவோ என்னவோ தெரியவில்லை.
தற்போது ஓரளவிற்குப் பசி எழுகின்றது..! கடந்த வாரங்களில் உணவே எடுக்க முடியவில்லை.
நெஞ்சுவரை உணவு நிற்பதாகவே உணர்ந்தேன். மழைக்குளிர் எனது உடல் நிலைமையை சற்று மாற்றியுள்ளது.
மழைச்சூழல் காரணமாக உறவுகள் வீடுகளுக்கும் செல்லவில்லை. காலை எனது
ஒன்றைவிட்ட தங்கை கோல் எடுத்தாள். நிலைமைகளை விசாரித்தாள். மாலை, சொல்லிக்கொள்ளாமல்
எனது இருப்பிடத்திற்கு இரவு உணவோடு வந்துவிட்டாள்..! நான் என்ன செய்ய..? தனது வீட்டிலிருந்து,
சமைத்து அன்போடு கொண்டுவந்தவளை
எப்படி வேண்டாம் என்று சொல்வது..? ஏன் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே
எனக்கேட்க, நீங்கள் மறுப்பீர்களே தவிர எப்போது கொண்டுவரச்சொல்லியிருக்கின்றீர்கள் எனக்கேட்க,
எனக்குப்பதில் இல்லை. பின்னர், அவர் கொண்டுவந்ததைப் பெற்றுக்கொண்டு, எனக்குரிய இரவுச்சாப்பாட்டை
அவரிடம் கொடுத்து அனுப்பினேன். பொதுவாக நான், உணவு விரயப்படுத்துவதை வெறுப்பவன். இன்று
எத்தனையோ இடங்களில் உணவு சமைக்க முடியுமா என்பதே தெரியாது..! மக்கள் அவ்வளவு துன்பங்களை
முகம்கொடுக்கும் போது, நாம் குறைந்த பட்சம் உணவை விரயப்படுத்தாமலாவது இருக்க வேண்டும்.
முடியுமென்றால் ஒரு சிலருக்காவதுஉணவைக் கொடுக்கலாம்.
நன்மை செய்யாவிட்டாலும் தீமையாவது செய்யாமல் இருக்கலாம் தானே..!
எனது நிறுவனத்தில் பணிபுரியும் பயிற்சிப் பயிலுனர் ஒருவர், தனது குடும்பச்
சூழலால் இன்றுடன், வேறுவேலைக்கு, குறிப்பாக மாதச்சம்பளத்துடன் ஒரு வேலைக்குச் செல்கின்றார்.
அவர் கடந்த சில மாதங்களாகப் பல உடல் ரீதியிலான பாதிப்புக்களால் துன்பப்பட்டார்..! எனது மகளின் வயதுகளை ஒத்த பிள்ளைகள் நோய்களால் பாதிக்கப்படும்போது
மனம் மிகவும் கவலையாக இருக்கின்றது. அந்தப்பெண்ணுக்கு தந்தையின் பாதுகாப்பும் இல்லை.
வேலைக்குச்செல்லாத தாயும், இரு சகோதரங்களையும் பார்க்கவேண்டிய சூழலில் இருக்கும் அந்தப்பெண்ணுக்கு
இறைவனின் கருணை தான் வேண்டும். வாழ்வில் வரும் கஷ்டங்களை முறியடிக்க, படைத்தவனை விடுத்து
வேறு யாரிடம் மன்றாட முடியும்.
நான் திருகோணமலையில் இருக்கும்போது, எனது வீட்டிற்கு கிட்டவுள்ள ஒரு பாடசாலை அதிபரின்
மகள் தற்போது எனது நிறுவனத்தில் வேலைசெய்கின்றார். அவரது சிறு வயதில், நான் அவரைப்
பலமுறை பார்த்துள்ளேன். இன்று அவருக்கு ஒரு நாற்சான்று கொடுக்கும்போது, சிறுவயதில்
இருந்தே தெரியும் என எழுதினேன். அவரே “எப்படித்தெரியும்..?” என்று கேட்டார். நான் அதற்கான
காரணத்தைச் சொன்னேன். ஏற்றுக்கொண்டார். என்ன
முன்பு பார்க்கும்போது மிகவும் திறமையாகவும், துடுக்காகவும் இருந்தவரை , காலம் அமைதியாக்கிவிட்டது..!
இது தான் வாழ்க்கை..! யாருக்கு என்ன நடக்கும் என்பதை யாராலும் சொல்ல முடியாத நிச்சயமற்ற
உலகில் இருந்துகொண்டு, கோடி ஆண்டுகள் வாழ்பவர்கள் போல் திட்டங்கள் போடுவதும், ஆட்களை வைத்து, ஆட்களைப் பழிவாங்குவதும், பதவிகளைப்
பறிப்பதும், பணத்தால் எதையும் வாங்க முற்படுவதும் என்று மிக அறியாமையில் இருக்கும்
மக்களைப் பார்க்க மிகவும் வேதனையாக இருக்கின்றது. அவர்களிடம் சொல்லித் திருத்துவதை
விட, அவர்களாகவே உணர்ந்து திருந்தச்செய்வதே மேல். காலம் என்பது ஒரு பிரபஞ்ச ஆசிரியன்..!
ஆ.கெ.கோகிலன்
28-11-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக