அமரன்..!

 


 


மனித உணர்வுகளை அழகாகச் சொல்லும் சில படங்களில் இந்தப்படத்தையும் ஒன்றாகச் சேர்க்கலாம்..! உண்மையாக நடந்த சம்பவம் என்றாலும் சரியான திரைக்கதையால் தான் அவற்றை பார்வையாளர்களுக்குச் சரியாகக் கடத்த முடியும். அந்த வகையில் இந்தப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பாராட்டிற்கு உரியவர்.

படத்தின் கதை என்னவென்றால், இந்தியன் ஆமியில் வேலைசெய்வதே கனவாகக் கொண்ட இளைஞனுக்குக் காதல் வருகின்றது..! அது அடுத்த மாநிலத்தைச் சேர்ந்த, வேறு மதத்தைச் சேர்ந்த, வேறு மொழியைச் சேர்ந்த பெண் மீது வருகின்றது. .! அதே காதல் அவளுக்கும் வருகின்றது..! பல போராட்டங்களின் பின், காதல் கைக்கூடிப் பரிசாக ஒரு மகளும் வருகின்றாள். அந்த சமயத்தில் காஷ்மிரில் தேர்தல் வர, அந்தக்கடமைகளில் ஈடுபடும்போது, ஆமியில் இணைந்து கப்டனாகி, பின்னர் மேஜராகி, இறுதியில் தீவிரவாதியை அழித்து, நாட்டுக்காகத் தன்னையே இழக்கின்றான் அந்த காதல் நாயகன்.

இந்தக்கதை, சொல்லப்பட்ட பார்வை, அந்தக்காதலியின் உணர்வுகளூடே பயணிக்கின்றது..! சாதாரண ஆண்களுக்கே கண்ணீர் வருகின்றது என்றால், பெண்களின் நிலை உண்மையில் ஆச்சரியமான திரைக்கதை..!

சிவகார்த்திகேயன், மேஜர் முகுந்த்தாக மாறிவிட்டார்..! அவர் காதலியான ரேபேக்கா என்ற மலையாளப்பெண்ணாக சாய்பல்லவியும் மாறி, வாழுவதாகவே தோன்றியது..!  சாய் பல்லவி,  நடிப்பில் சிகரம் தொட்டுள்ளார் என்றே சொல்ல வேண்டும். பல காட்சிகளில்  கைதட்டத்தோன்றுகின்றது. இந்தப்படத்தில் நடித்ததற்காக சிவகார்த்திகேயனுக்கும், சாய்பல்லவிக்கும் விருது கிடைத்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அவ்வளவு உழைப்பு அவர்கள் இருவரிடமும் இருந்து வெளிப்பட்டுள்ளது..!

 

படத்தில் பலர் நடித்துள்ளார்கள். எல்லாம் சிறப்பாக இருந்தன..! தொழில்நுட்பங்களும் அவ்வாறே அமைந்தன.  சற்று நீளமான படம் என்றாலும், போரடிக்காமல்  உணர்வுகளுடன் கூட்டிச்செல்வதால், கதையை ஏற்க முடிகின்றது..! உண்மையில் ஒரு இராணுவ வீரனின் தியாகம் என்பது எவ்வளவு மகத்தானது என்பது அனைத்து மக்களுக்கும் புரிகின்றது. அதே நேரம் அன்பே சிவம் என்ற தத்துவத்தை வார்த்தைகளில் காட்டாமல், வாழ்க்கையில் காட்டித் தீவிரவாதிகளின் நியாயமான கோரிக்கைகளை பேச்சுவார்த்தைகளூடாகத் தீர்த்து, அந்தப்பகுதிகளில் குண்டுகள் வெடிக்காமல்,  மக்களின் மனங்களில் அன்புச்சுடர்களை ஏற்ற இறைவனையும் இயற்கையையும் வேண்டுவதுடன் நாட்டின் கொள்கைகளிலும் காலத்திற்கு ஏற்ற, உலகினை ஆபத்திற்குள் தள்ளாத, சரியான மாற்றங்களை ஏற்படுத்தி, அனைத்து உயிரிழப்புக்களையும், ஆணவப்பார்வைகளில் இருந்து நோக்காமல், அன்புப் பார்வைகளில் இருந்து நோக்கி, அவற்றைத்தடுக்க வேண்டும்.

அன்பே சிவம்..!  அனைவர் முடிவும் சவம்..!

 




ஆ.கெ.கோகிலன்

23-11-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!