வாரச்சுக துக்கம்..!

 


வழமைபோல் 4.15 இற்கான பஸ் புக்கிங் ஓப்பின் செய்யாத படியால்  இரவு 7.00 மணி பஸ்ஸிற்கு  புக்பண்ணினேன்.

அதற்கேற்ப சரியான நேரத்தில் பஸ் ஏறி எனக்குரிய சீற்றில் உட்கார அன்று என்னுடன் வந்த கணிதத்துறை தொடர்பான  பணிப்பாளரும் எனக்குப் பின்னுள்ள சீற்றில் உட்கார்ந்து வந்தார்.

கனகராயன்குளத்தில் இருக்கும் ஒரு இரவுச்சாப்பாட்டுக்கடையில் ஏறக்குறைய இரவு 9.15 மணியளவில் பஸ் நிற்க, சாப்பிட இறங்கினோம்.  எனக்கு அருகில் இருந்தவர் மருதடி ஈசண்ணையின் ஒரு உறவினர். அவர் ஹரிதாஸ் என்ற ஒரு இலாபநோக்கற்ற அரசு சாராத நிறுவனத்தில் மனிதவள முகாமையாளராக இருக்கும் சமயம் அவர் ஒரு கட்டடத்துறைப்பொறியியலாளரும் கூட..!

அவரிடம் சாப்பிட இறங்கவில்லையா என்னக் கேட்க, அவர் வேளைக்கே சாப்பிட்டுவிட்டேன் என்றார். பின்னர் நானும், கணித்துறைப்பணிப்பாளரும் சேர்ந்து  உண்டோம்.  அப்போது, அவர் தான் இன்று மீன் வாங்கி சமைத்ததாகவும், சும்மா சாப்பிட்டுப்பார்க்கத்தர, நானும் எனது பங்கிற்கு கோழி இறைச்சிக்கறியில் கொஞ்சத்தைக்கொடுத்தேன்.  நீண்ட காலத்திற்குப் பிறகு இப்படிப் பங்கிட்டு சாப்பிட்டது மகிழ்ச்சியாக இருந்தது..!  நான் 25 வருடங்களுக்கு முன்னர், மூதூரில் ஆசிரியராக இருக்கும் போது, இவ்வாறு தான் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து சாப்பிடுவது வழக்கம். அந்த எண்ணம் நினைவிற்கு வந்தது..! அந்த எண்ணத்தை ஏற்படுத்திய அந்த பணிப்பாளரான நண்பருக்கு நன்றி சொன்னேன்.

பஸ் திரும்ப வெளிக்கிட, மனிப்பாய் எஞ்யினியருடன் கதைத்துக்கொண்டு வந்தேன். திருகோணமலையில் காணியில் முதலீடு செய்வது, வங்கியை விட இலாபகரமானது என்றார்..! அத்துடன் காணிகள் வாங்கும் போது, கடந்த 30 வருடங்களுக்கு  அதன் உரிமையாளர்கள் விபர வரலாற்றைப் பெறுவது அவசியம் என்றும், வரலாறு சரியென்றால் உறுதியில்லை என்றாலும் காணியை வாங்கலாம் என்றும், காணிக்குரிய வரலாற்றை பிரதேச செயலகத்தில் எடுக்கலாம் எனவும் சொல்லி, என்னைத் திருகோணமலைவாசியாக மாற்ற முயன்றார். பார்ப்போம் கோணேஸ்வரர் என்ன நினைக்கின்றார் என்று..?

இரவு 11.45 அளவில் பஸ் நிறுவனத்தை அடைய, அந்த இருவரிடமும் விடைபெற்று இறங்கினேன். அதன் பின்னர் குளித்து உறங்கப்போக 12.15 ஆகியிருக்கும் என்று நம்புகின்றேன்.

அடுத்த நாள் விடிந்ததே தெரியவில்லை. உடற்பயிற்சியும் இல்லை. வழமைபோல் அலுவலகம் போக, மழை பெய்துகொண்டிருந்தது. இன்று கிரிக்கெட் போட்டிகளை ஒழுங்கமைத்து இருந்தார்கள். மழைதொடர்ந்து பெய்வதால், என்ன செய்வது என்று தெரியாமல், சில மணிகள் குழம்பி, பின்னர் தெளிந்து, எப்படி என்றாலும்  இன்றும் நாளையும் போட்டிகளை வைத்து முடிப்பது என்று இறுதி முடிவை எடுத்து, அதற்கேற்ப செயற்பட்டார்கள். இறைவன் அருளால் மழைவிட்டுத்தந்தது..! இரண்டு நாள் போட்டிகளும் சிறப்பாக நடந்து முடிந்தன.  நானும் இடையிடையே சென்று கலந்து வந்தது, மனதிற்கு ஒரு மகிழ்ச்சியைத் தந்தது. மாணவர்களுக்கும் இவ்வாறான புறப்பாடவிதான செயற்பாடுகள் தேவையானதே..! கொரோனாவிற்குப் பிறகு இப்படியான விடயங்கள் தடைப்பட்டுவிட்டன..! மீண்டும் அவற்றைத் தொடங்கி, தொடர்ந்து நடாத்தவேண்டும்.

எமது ஊழியர் ஒருவருக்கு பிள்ளை பிறந்து 31 நாட்கள் தாண்டியும், என்னால் போக முடியவில்லை. கடந்த புதன் கிழமை ஒருவாறு, மாலை போய் வந்தேன். அந்த ஊழியரின் கணவர் எனது மாணவர் என்பதால் இன்னும் அதிக அக்கறை இருந்தாலும், இவ்வளவு நாளும் போகமுடியாமல் இழுபட்டுவிட்டது.

வியாழன் வழமைபோல் அதிக வேலைகள் வந்து சேர்ந்தன. கன்ரீனும் இன்று திரும்ப வர, மூன்று வேளையும் வடிவாகச் சாப்பிட, திரும்பவும் வயிற்றுக்குள் கட முட தொடங்கிவிட்டது..! இரவு சாப்பிட்ட நூடில்ஸ் எனக்கு இரவு 12.00 வரை நித்திரையே வராத அளவிற்கு நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தியது..! இந்தச்சிக்கலில் நான் சிரப்பட, ஒரு தொலைபேசி அழைப்பு வந்து மேலும் மனதைக்கஷ்டப்படுத்தியது..! அது, மாலை என்னிடம் விடைபெற்றுச் சென்ற எமது நிறுவனக்கணக்காளர் மொறவேவாவிற்கு கிட்ட மாடு முட்டி விபத்துக்குள்ளாகி, திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அடி பலமாகப்பட்டதால், எலும்பு முறிவுகளும் ஏற்பட்டிருக்கலாமென அந்தச்செய்தி, இடியாகச் செவிக்குள் இறக்கியது..! சரி நடப்பது, நடந்தேயாகும். என்னால் செய்ய கூடியவற்றைச் செய்ய தீர்மானித்து, அதற்கேற்ப, இன்று வெள்ளிக்கிழமை மதியம், அவரை திருகோணமலை தள வைத்தியசாலையில் போய் பார்த்துவிட்டு வந்தேன். அவசர சிகிச்சைப்பகுதியில் இருப்பதால் எல்லோரும் போக முடியாது. எனக்கு ஒரு 5 நிமிடங்கள் தந்திருப்பார்கள். அதற்குள் அவரைப் பார்த்து, ஓரிரு வார்த்தைகள் கதைத்துவிட்டு வெளியே வந்தேன். அவரது உறவுகள் பதட்டத்துடனே நின்றார்கள். காலம் என்ன செய்யும் என்று யாரும் அறிய முடியாது..?  நடப்பதை பார்த்து, ஏற்க வேண்டியது தான். விருப்பம் என்றால் எதிர்த்து அல்லது தவிர்த்துப் பார்க்கலாம். எனக்கு அவ்வாறு செய்வதால் பெரிய பலன்கள் கிடைப்பதில்லை..! வருவதை ஏற்பது சிறப்பானதாக இருப்பதாக நான் நம்புகின்றேன். குறிப்பாக, இவ்வாறான எண்ணத்தால் பல முரண்பாடுகளைத் தவிர்க்க முடியும்.

வயிற்றுப்பிரச்சனையால் இன்று உணவை மிகவும் குறைத்தேன்..! ஓரளவிற்கு சுகமாக இருப்பதாக உணர்ந்தேன்.

இந்தக்கிழமை தொடர்ந்து நிற்கவேண்டிய சூழல் இருந்தாலும், மகளுக்கு வருவதாக வாக்குக்கொடுத்துவிட்டு வந்தேன். அதனால் மாலை 2.45 மணி பஸ்ஸில் புறப்பட்டு கடும் மழைக்கூடாக யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தேன்..!  பஸ் சாரதி மிகவும் சிரமப்பட்டு பஸ்ஸை ஓட்டிவந்தார்..! வீடு வர சரியாக இரவு 8.00 மணி தாண்டிவிட்டது..! பின்னர் வழமைபோல் அனைத்தும் நடந்தன..!

ஒரே மாதிரியான வாழ்க்கைப்போக்கில், சின்ன சின்ன மாற்றங்களே சுவாரசியங்களைத் தருகின்றன. அதனைத் தவறவிடமல், ஏற்று வாழ்வினை இன்னும் மகிழ்வுடன் கொண்டுசெல்லலாம்.  

 


ஆ.கெ.கோகிலன்

22-11-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!