உறவினர் மகனின் பிறந்தநாள்..!

 



இந்த வாரம் வெள்ளி இரவு வந்து சனி நின்றுவிட்டு ஞாயிறு போகலாம் என்று நினைக்க உறவினர் ஒருவரினது மகனின் பிறந்த நாள் அழைப்பிதழ் வீட்டில் இருந்தது.  அதே அழைப்பிதழ் அம்மா, தம்பி வீட்டிற்கும் கொடுக்கப்பட்டிருந்தது.

சரி, கலந்துகொள்வோம் என்ற முடிவுடன், திங்கட்கிழமை மாலைக்கு திருகோணமலை செல்லும் பஸ்ஸை புக்பண்ணிவிட்டு, வழமைபோல் வீட்டு வேலைகளைச் செய்துகொண்டிருக்க, முன்பு என்னுடன் வேலைசெய்த, யாழ் நிறுவன ஊழியர் ஒருவரது சில வேலைகளும் இருந்தன. அதனையும் செய்து முடித்து, ஒரு கப்பல் வாழை மரத்தையும் நட்டுவிட்டு, குளித்து முழுகிச் சாப்பிட்டு, பின்னர் சிறு தூக்கம்போட்டுவிட்டு, மாலை நானும் மனைவியும் அம்மாவீடு சென்று தம்பி மனைவி மற்றும் பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு உறவினர் இடமான அச்சுவேலிக்கு சென்றோம்.

வழமையாகப் போகும் பாதையில் போகாமல், வேறு பாதையால் போகத்தீர்மானித்தோம்.

நாட்டின் ஜனாதிபதி மாறியதால் பல மாற்றங்கள் நடந்துள்ளன..! அதில் ஒன்று, பலாலி வீதி திறக்கப்பட்டது..! அந்த வசாவிளான் வீதி ஊடாக அச்சுவேலிக்கு விரைவாகச் செல்ல முடியும். சரி, இந்தமுறை அந்த வீதியைப் பயன்படுத்துவோம் என்று அந்தத் திசையில் பயணிக்கத் தீர்மானித்தோம்..!

அம்மாவீட்டில் இருந்து, தம்பி குடும்பத்தினருடன் வெளிக்கிட மாலை 6.00க்கு கிட்ட ஆகியிருக்கும். 

மாலை மறைந்து இருட்டு வர, வசாவிளான் பகுதிக்குள் நுழையத் திடிரென கடும் மழை பெய்யத்தொடங்கியது..! முதலில் மழையை ரசித்துக்கொண்டு சென்றாலும், ஒரு நிலை தாண்டி அந்த மழையைப் பார்க்க ஒருவித பயம் வரத்தொடங்கிவிட்டது..! சுற்றி வர வீடுகள், வாகனங்கள் இல்லை. காடுகள் மாதிரி இரு பக்கமும் மரங்கள் பயமுறுத்திக்கொண்டிருந்தன..! “மேகவெடிப்பு” மாதிரி மழை கொட்டிக்கொண்டிருந்தது. ரோட்டே  தெரியவில்லை..! ஹெட்லைட்டைப் போட்டுக்கொண்டு, வைப்பரையும் அதிவேகத்தில் போட்டுக்கொண்டு வீதியைப் பார்த்தால், ஒன்றும் தெரியவில்லை..! மனைவி அருகில்  இருந்துகொண்டு, காரை நிறுத்தி, ஒரு இடத்தில் நிற்போம் என்றார். அந்த இடத்தில் நிற்க எனக்கு மனமில்லை. கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன்னர் அடிக்கடி பாவித்த பாதை தற்போது எனக்கு முற்றாக மறந்துவிட்டது..! அங்கே “கல்லடி வேலர்” என்ற ஒருவரது உறவினரான தங்கேஸ்வரன் என்பவன் எனது தந்தையாரை வெளிநாட்டிற்கு அழைத்துச்செல்வதாகக் கூறி அவரிடமிருந்து ஏறக்குறைய அன்றைய மதிப்பில் ரூபா50,000 இற்கு மேல் கொடுத்திருப்பார்..!  அந்தப்பணம் தற்போது 1 கோடிக்குச் சமம்..!  அந்தக்கள்ளன், வசாவிளானில் இருப்பதால் அந்த ஊரே எனக்குப் பிடிப்பதில்லை..! பணம் தின்னி..!  சின்ன வயதில் ஏற்பட்ட வெறுப்பு, இப்போது 55 வயதை தாண்டிவிட்டேன்..! இன்னும் மறையவில்லை..! எமது குடும்பம் 15 வருடங்களுக்கு மேலாகப்பட்ட துன்பங்களுக்கு, அந்த நபரே பிரதான காரணம்.  யாரையும் நம்பக்கூடாது என்ற படிப்பினை வந்தது, அதனால் தான்..!  “நம்ப நட..! நம்பி நடவாதே..!”

 

நினைவுகள் சற்றுக் கலைந்தாலும், மழைவிடுவதாக இல்லை..!  ஒரு சந்தர்ப்பத்தில் றோட்டின் மத்தியிலுள்ள வெள்ளைக்கோடு மாத்திரமே இடையிடையே மங்கலாகத் தெரிந்தது. வீதி முழுக்கத் தண்ணீர்..! எங்கும் ஒரே புகார்..!  தம்பி குடும்பத்தினரும் சற்று பயந்து இருந்தார்கள்.  காரை நிறுத்தாமல் ஓட்டியதால், ஒரு கட்டத்தில் குடிமனைகள் வந்தன. ஆட்களும் நடமாடினார்கள். பதட்டம் சற்றுத் தணிந்தது. பின்னர் ஒருவாறு முன்பு வந்த அனுபவப்படி,  பிறந்த நாள் வீட்டிற்கு ஏறக்குறைய 6.30 இற்குள் சென்றுவிட்டோம்.

அங்கே, அப்பாவின் உறவுகளைக் கண்டு கதைத்தது சந்தோசம்.  எமது நிறுவனத்தை ஒத்த, இன்னோர் உயர்கல்வி நிறுவனப் பணிப்பாளர், மற்றும் ஊழியர்களும் அங்கே வந்திருந்தார்கள்..!  மிகச்சிறப்பாகக் கொண்டாட உறவினர் முயன்றாலும், மழை செய்த வேலை  அனைவரையும் சங்கடத்தில் மாட்டிவிட்டது..!

அங்கே இருந்த அப்பாவின் சகோதரி முறையான ஒருவரை “அக்கா” என்று சொல்ல, அவர் முறைசொல்லி அழைக்கச்சொல்ல பின்னர் “அத்தை” என்று அழைத்தேன்..! அவர் மகிழ்ச்சியடைந்தார்.  அதேபோல், அங்குள்ள ஒருவர், பகிடியாக  “வீட்டுக்காரர் எல்லோருக்கும்  பிறந்தநாள் விழாவிற்குச் சொல்லும் போது கூடவே மழைக்கும் சொல்லிவிட்டார்” என்றார். அது தான் “மழை” தனது பூரண வருகையை உறுதிப்படுத்தி, அனைவரையும் குளிர்ச்சிப்படுத்தியுள்ளது.

பின்னர், எனக்கு தெரிந்த பலருடன் கதைத்துவிட்டு, படம் எடுத்து, எமது அன்பளிப்பையும் வழங்கிவிட்டு, அவர்கள் தந்த உணவான பிட்டு பிரியானி மற்றும்  இடியப்ப பிரியானி என்பவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கொண்டு போதிய கோழி இறைச்சியையும் எடுத்து உண்டுவிட்டு, அப்பாவின்  தங்கையை ஏற்றி, அவரது வீட்டில் இறக்கிவிட்டு, தம்பி குடும்பத்தை அம்மாவீட்டில் இறக்கிவிட்டு வீடு வர இரவு 8 மணியாகிவிட்டது.  இன்று வழமைபோல், திருகோணமலை போகாவிட்டாலும் பலருக்கும் உதவியதால் மனதில் ஒரு திருப்தி. மற்றும் நாளை மகளின் உயர் தரப்பரீட்சை தொடங்குவதால், அவருக்கும் ஒரு வாழ்த்தை சொல்லித் தைரியப்படுத்த வேண்டிய தேவையும் எனக்கு இருக்கின்றது.

காலநிலை சாதகமாக இருந்தால் நாளை திருமலைப்பயணம் சாத்தியப்படும். பார்ப்போம் “வர்ணபகவானின் அருளை..!”

 

ஆ.கெ.கோகிலன்

24-11-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!