நாம் தனி ரகம்..!

 


நான், யாழ்ப்பாணத்திலுள்ள உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் பணிப்பாளராகக் கடமையாற்றும்போது சில கொள்கைகளை எமது ஊழியர்களுக்குத் தெரியப்படுத்தி இருந்தேன். அவை முதலில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.  ஒவ்வொரு விடயங்களையும், கதைத்து அது தொடர்பாக விவாதித்து, சரியான முடிவை எடுத்த பின்னரே நடைமுறைப்படுத்த வேண்டும். அரச விதிமுறைகளை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும். லீவுகளை மிகக் குறைவாகவே எடுக்க வேண்டும். எல்லாவற்றையும் தாண்டி, எமது கடமைகளை யாரும் குறை  சொல்லாத வகையில் செய்ய வேண்டும். 

அதுமாத்திரமன்றி, கால மாற்றத்தால் எல்லோர் கைகளிலும் மோபைல் போன்கள் உள்ளன..!  சீசீரீவி கமெராக்கள் பெரும்பாலான இடங்களில் இருக்கின்றன. சரியான முறையில் நடக்க வேண்டும். இல்லை என்றால் இவை எங்கும் போகலாம்..! இதைத்தாண்டி, ஏதாவது பிரச்சனைகள் அல்லது முரண்பாடுகள் இருந்தால், பொதுக்கூட்டங்களில்  அவற்றை எழுப்பும்படி சொல்லியுள்ளேன். பொதுக்கூட்டங்களை ஒவ்வொரு மாதமும் நடத்துவது வழக்கம்..! 

கொரோனாவிற்குப் பிறகு, சில நடைமுறைகளில் மாற்றம் உலக அளவில் ஏற்பட்டதால், அதற்கு ஏற்ப கூட்டங்களைக் குறைத்துள்ளேன் அல்லது தவிர்த்துள்ளேன்.  சில சமயங்களில் மிகக்காரசாரமான விவாதங்கள் நடைபெறும்..! சிலசமயம் அவை கத்தல், கதறல், கண்ணீர் என்ற அளவிற்கும் போய்விடுவது உண்டு..! எல்லாருக்கும் உண்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்கும்போது, எமது நிறுவனத்தில் யாரும் எனது அணுகுமுறையைப் பாராட்டவில்லை. பதிலாகக் குறைகளே சொன்னார்கள்..! ஏன் மற்றவர்களுக்கு கதைக்க வாய்ப்பு கொடுக்கின்றீர்கள்..? ஒருவரையும் கதைக்கவிட வேண்டாம் எனப்பலர் என்னிடம் தெரிவித்தார்கள்..! எனக்கு அந்த கருத்தில், உடன்பாடு இல்லை.



எனக்கு பணிப்பாளர் என்ற பதவி முக்கியம் கிடையாது. ஆனால், நான் ஒரு சரியான பணிப்பாளராக இருக்க வேண்டும். உரிய காலம் வரை என்னால் முடிந்த சேவைகளைச் செய்ய வேண்டும். அதன் பின்னர், இடமாற்றம் வந்தாலும் ஏற்கத்தயாராகவே இருந்தேன். நான் நினைத்த மாதிரியே அது நடந்தது..! சின்னக்கவலை ஒன்று இருந்தது. ஆனால் பின்னர், எனக்கு நடந்தது சரியான செயலே என்பதை  உணர்ந்து கொண்டேன்.

இவ்வாறு நான் உண்மையாக இருந்தும் சிலருக்கு, எனது நிர்வாகம் பிடிக்காமல் போகக்கொரோனாவும், நாட்டுச்சூழலும், வளர்ச்சியற்ற தன்மையும், வேறுசில தனிப்பட்ட காரணங்களும் இருக்கலாம்..!

எனது நிலை இவ்வாறு மந்தமாக இருக்கும்போது, யாழ் மருத்துவமனை பணிப்பாளருக்கு அந்நேரம் சிறந்த பணிப்பாளர் விருது கிடைத்து, பத்திரிகைகளில் புகைப்படங்களும், புகழ் மாலைகளும் விழுந்துகொண்டிருந்தன..!

எனக்கு உண்மையில் பொறாமையாக இருந்தது..! யாழ் மருத்துவமனைப் பணிப்பாளர் மாதிரி வர, என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பேன். பின்னர்,  இயற்கை எல்லாரையும்  ஒரேமாதிரிப்படைக்கவில்லை..! ஆகவே ஒரேமாதிரியான வெற்றிகளை அல்லது அடைவுகளை பெறவேண்டிய தேவையில்லை என்பதை உணர்ந்தேன்.

சில வருடங்கள் ஓடின..! நான் இடம்பெயர்ந்துவிட்டேன்..! எனது சேவைக்காலத்தை, எனக்குச் சொல்லப்பட்ட விதிப்படி, செய்து முடித்ததில், திருப்தி..!

ஆனால், தற்போது அந்த விருதுபெற்ற பணிப்பாளர், அதே பத்திரிகைகளால் தற்போது மிகவும் தரக்குறைவாக விமர்சிக்கப்படுகின்றார்..! இதற்கு சில மருத்துவமனை முறைகேடுகளும் காரணமாக அமைந்துவிட்டன..!

அப்போது, அவரது புகழைப் பார்த்து சற்றுப் பொறாமைப்பட்டேன். இப்போது அவர் முகங்கொடுக்கும் சவால்களைப்பார்த்து ஆச்சரியப்படுகின்றேன்.

யாரையும் யாருடனும் ஒப்பிடத்தேவையில்லை..! எமக்கு உரியவை நிச்சயம் வந்தேயாகும்..! 

பொறுமையாக, எமது வேலையை இயன்றவரை நிறைவாகச் செய்வோம்..! வெற்றி வரும்போது  கர்வம் கொள்ளாமல், கவனமாக இருப்போம்.  தோல்விகள், வலிகளைக் கொடுத்தாலும், அவை பல பாடங்களை எமக்குப் புகட்டுகின்றன..! வெற்றிகள், மகிழ்ச்சிகளைக் கொடுக்கும்போது பாடங்களைக் கற்கத் தவறுகின்றோம்..! அதனாலும், பின்னர் தோல்விகளைச் சந்திக்கின்றோம்..! உயர்வோ அல்லது தாழ்வோ, அதனை வாய்ப்பாகவும் அனுபவப் பாடமாகவும் பார்க்கப்பழக வேண்டும். நிச்சயம் வாழ்க்கை நிறைவாகும்..!

 


ஆ.கெ.கோகிலன்

06-12-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!