ஒரு மொழி..!

 


 


இந்த உலகில் எத்தனையோ மொழிகள் இருக்கின்றன..! இவை எப்படித்தோன்றியது என்று யோசிக்கும் போது விளங்குவது, ஒவ்வொரு சமூகக் குழுக்கள் தங்களுக்கிடையே உணர்வுகளைப் பரிமாற, தகவல்களைப் பரிமாற, கலாசாரங்களை வெளிப்படுத்த, அந்த அந்த சமூகக்குழுவிலுள்ள அறிவான  அல்லது ஆற்றல்மிக்க மனிதர்களால்  உருவாக்கப்பட்டதென்றே தோன்றுகின்றது. எந்த மொழி என்றாலும் அதற்கு ஒரு தோற்றுவாய் உண்டு. ஆனால் நீண்ட காலப்புழக்கத்தால் சில தோற்றுவாய்கள் மறைந்து விட்டன..! ஆய்வுகளிற்கும் கிட்டாத வகையில் அவை இருக்கின்றன. சில வேளைகளில் இனிவரும் ஆய்வுகளில் அவை வெளிக்கொணரப்படலாம்.

இவ்வாறு எத்தனையோ மொழிகள் தோன்றியதன் பின்னர், ஒரு இனக்குழு இன்னோர் இனக்குழுவுடன் சேரமுடியாத, தொடர்பாட முடியாத செயற்கைத் தடையை மனிதனே போட்டுக்கொண்டான். எந்த விலங்குகளுக்கும் அவ்வாறான தடைகள் இல்லை..! இலங்கைப் பூனையை அமெரிக்காவில் விட்டாலும், அந்த நாட்டுப்பூனையுடன் அதனால் தொடர்பாட முடியும். காரணம் அவை இறைவனின் மொழியுடனே இருக்கின்றன. சைகையா அல்லது சத்தமா அல்லது அவற்றின் உடல் அசைவுகளா எப்படியும் இருக்கலாம்..!

அறிவான மனிதனுக்கு அறிவாலே ஆப்படிக்கப்பட்டுள்ளது..! உலகே பல பிரிவுகளாக மாறிவிட்டது. அதற்கு அடிப்படைக்காரணம் நவீன விஞ்ஞானங்கள் தொடர்பான அடிப்படை அறிவுகள் இன்மையாலும், தொலைதொடர்பு வசதிகள் இன்மையால், தேவைகள் அனைத்தையும் அந்த அந்த குழுக்களிற்கு உள்ளேயே பூர்த்திப்படுத்த முனைந்தமை  தான்..!

ஆனால் இன்று இவை எல்லாம் கேள்விக்குறியாக்கப்பட்டுக்கொண்டு வருகின்றன..? இந்த உலகம் ஒரு மொழியின் கட்டுப்பாட்டில் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு..! வல்லரசுகளின் போட்டிகள் உச்சமாகி, அதன் வெளிப்பாடுகளூடாக ஏற்படும் போர்கள் முடிவடையும்போது, விஞ்ஞானமும், விவேகமும் சேர்ந்து அந்த முடிவிற்கு வரவேண்டிய நிலை வரப்போகின்றது..!

அந்நேரம் குறித்த  ஒரு மொழியைத் தவிர அனைத்தும் ஆவணமாக்கப்படும்..! அவை மனிதனின் முரண்களையும், சமூதாய விரிவாக்கத்தையும் வெளிப்படுத்துவதுடன், வேற்றுமைகளையும் ஏற்படுத்துவதால், பயனுள்ள விடயங்கள் பல தாண்டி, ஒரு சாதாரண தொடர்பாடலுக்காக ஆயுட்காலத்தில் பெரும்பங்கை மக்கள் செலவழிக்க வேண்டியிருப்பது என்பது அறிவிலித்தனமாகும். இந்த கருத்து, வலுப்பெறும் சூழலிலே  ஒரேயொரு மொழிக்கொள்கை என்ற உச்ச நிலை உலகில் ஏற்படும்..!

ஆதனால் அனைத்து மொழி ஆக்கங்களும், அனைத்து ஆய்வுகளும், கண்டுபிடிப்புக்களும் குறித்த ஒரு மொழிக்குக் கொண்டுவரப்படும். அதுவே உலகில் ஒரே மொழியாக இருக்கும். யாரும் அதனை ஏற்காமல் இருக்க முடியாது.

அதன் பிறகு உலகின் பரிமாணங்கள், அண்டத்தில் இருக்கும் ஏனைய உலகுகளுடனேயே இருக்கும்..! தற்போது இருப்பதுபோல், உலகில் இருக்கும் நாடுகளும் அல்லது  நாட்டில் இருக்கும் பகுதிகளும் இருக்கப்போவதில்லை..!  எமக்குப் போதிய ஆயுள் இருந்தால், இதனைப் பார்க்கலாம். இல்லை என்றால் அடுத்த அடுத்த மீள் வருகைகளின் போது அறிந்து கொள்ளலாம்..! இந்த பூமியை விட்டு எதுவும் வெளியே போகாது..! அதேபோல் போனதும் திரும்பாமல் இருக்காது..! அதற்கு பிரபஞ்சம் இடம் கொடுக்காது..! இது தான் நான் நினைக்கும் எதிர்காலச் சூழல்..!

இந்த எண்ணம் பலிக்கும் என்றால், எதிர்காலத்தில் மொழிப்பிரச்சனைகளோ அல்லது இனப்பிரச்சனைகளோ அல்லது சாதிப்பிரச்சனைகளோ ஏற்பட வாய்ப்பே இல்லை. ஆனால் உலகின் பொது விதிகளின் கீழ் அனைவரும் இயங்க வேண்டியிருக்கும். அது சர்வாதிகாரமாகவே அமையும். சரி, பார்ப்போம் யார் இந்த உலகை ஆளப்போவது என்று..?

 


ஆ.கெ.கோகிலன்

23-11-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!