விழிக்க வேண்டிய மக்கள்..!
கடந்த 12 நாட்களுக்கு பிறகு ஊருக்குத் திரும்பும் மகிழ்ச்சியில்
பஸ் தரிப்பிடத்தில் நிற்கும் போது, ஒரு பள்ளிக்கூட மாணவரும் பஸ்ஸிற்காகக் காத்திருந்தான்.
அருகிலுள்ள ஒரு ஊருக்குப் போகின்றான் என நினைத்துக்கொண்டு எங்கே போகின்றீர்கள் என்று
கேட்கப் “பருத்தித்துறை” என்றான். நானும் இன்று
அந்த பஸ்ஸைப் பிடிக்கத்தான் வந்துள்ளேன் என்று சொல்லிக்கொண்டு அவனுடன் கதைக்கத்தொடங்கினேன்.
9ம் ஆண்டு படிக்கும் மாணவன் நீண்ட காலம் பருத்தித்துறை கற்கோவளம்
பகுதியில் வசித்துவந்துள்ளார். அவரது தந்தையார் அண்மையில் ஓமான் போனதால் தாயாரின் ஊரான
திருகோணமலையில் தற்போது இருக்கின்றார். அன்புவழிபுரத்திலுள்ள கலைமகள் வித்தியாசாலையில்
படிக்கின்றார். படிப்பில் ஆர்வமுள்ளவர். அவரது குடும்பத்தில் அவர் தான் மூத்தவர். சின்ன
பையன் என்றாலும் தனியாகத் தனது அப்பம்மா வீட்டிற்குச் செல்கின்றார். அங்கே அத்தையும்,
அப்பம்மாவும், அத்தையின் பிள்ளையும் இருக்கின்றார்கள்.
தனக்கு விஜய் பிடிக்கும் என்றும், பஸ்ஸில் எந்நேரமும் போனுடன்
ப்ளூருத் இயர்பட்டை காதில் வைத்திருந்தார்..! ரூபா.1000 இற்கு ப்ளூருத் இயர்போனை வாங்கியதாகச்
சொன்னார். இருந்தாலும் நான் கேட்கும் கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்துக்கொண்டு வந்தார்..!
ஒரு இடத்தில், பஸ் நடத்துனர் ரிக்கெட் கொடுக்கும் போது, நடத்துனரைத் தெரியும் என்றும்
தனது அப்பாவும் கோண்டாவில் டிப்போவில் வேலைசெய்தவர் என்றும், தற்போது நோ பே (No Pay) லீவில் ஓமான்
சென்றுள்ளார் என்பதையும் அறிந்துகொண்டேன். பஸ் நடத்துனரும், அவரது தந்தையார் இ.போ.சவில் வேலை
செய்ததால், குறைவான தொகையுள்ள ரிக்கெட்டைக்கொடுத்தார்.
உண்மையில் அரச சேவைக்கான கட்டணத்தை யார் என்றாலும் சரியாக
அறவிட வேண்டும். இங்கு நடத்துனர், அந்த பையனிடம் குறைவான கட்டணத்தைப்பெற்று அந்தப்
பையனுக்கு உதவியதாகப் புரிந்துகொண்டேன்.
இதேவேளை எனது தந்தையாரின் நினைவும் வந்தது..! எனது தந்தையாரும்
இ.போ.சவில் தான் வேலை செய்தவர். அந்நேரம் இ.போ.சவில்
வேலைசெய்த பலர் எனக்குப் பழக்கம். பல முறை நானும் அச்சுவேலிக்கு எனது அப்பம்மா வீட்டிற்குச்
செல்லும்போது ரிக்கெட் எடுப்பதில்லை..! உண்மையில் இது ஒரு பிழையான நடவடிக்கை தான்.
இருந்தாலும் அரச ஊழியர்களின் பொருளாதார நிலையிலுள்ள குறைபாடுகளும் இவ்வாறான செயற்பாடுகளுக்குக்
காரணமாக அமைகின்றன என்று நினைக்கின்றேன். இப்படியான அரச பேருந்து நடத்துனர், மற்றும்
சாரதிக்கு மக்கள் பணம் என்பது அனைவரது பணம் போன்றது தான் என்றும், அதனை இவ்வாறு தவறாகப்
பயன்படுத்துவது குற்றமாக மாற வாய்ப்புண்டு என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அரசை
ஏமாற்றினால், வேறுவழியில்லாமல் அரசும் எம்மை ஏமாற்றும்..! என்ற யதார்த்தத்தையும் புரிந்துகொள்ள
வேண்டும். அரசைப் பலவீனப்படுத்தினால், மக்களின் அனைத்துச் செயற்பாடுகளும் பலவீனப்படும்.
ஆகவே நாம் அனைவரும் அரசைப் பலப்படுத்த முனைய வேண்டும்.
இந்த பஸ்ஸின் சாரதியும், தனது சொந்த வாகனம் போலவே அரச பஸ்ஸைச்
செலுத்தினார்..! தொலைபேசியைப் பயன்படுத்திக்கொண்டே வண்டியைச் செலுத்தினார். இடையிடையே
கோவில் பிரசாதம் கொடுத்துப் பணம் பெற்றவரையும், கச்சான் வித்துப் பணம் பெறுபவரையும்
உள்ளே விட்டார். குறிப்பாக, வெளியாட்கள் பணம் சேர்க்கவும், வழி ஏற்படுத்திக்கொடுத்தார். ஒரு விதத்தில் இந்நடவடிக்கை மக்களுக்கு உதவியாக
இருந்தாலும், இன்னோர் விதத்தில் பயணிகளுக்கு அவை சங்கடமாகவும் அமையலாம்.
பஸ், கொடிகாமத்திற்கு முதல் தரிப்பிடமான “மரத்தடியில்“ இறங்கினேன்.
பலர் எம்முடன் இறங்கி, யாழ் பஸ்ஸைப் பிடிக்கக் காத்திருக்க , ஏறக்குறைய அரை மணித்தியாலம்
கழித்து, தனியார் வண்டி வந்தது. அதில் ஏறி
ரூபா.150 பணம் கொடுக்க, யாழ்ப்பாணத்தில் விட்டார்கள்.
கொடிகாமம் நிறசமிக்கைப் பகுதியில் இறங்க நான் தீர்மானிக்க,
பஸ் சாரதியும், இன்னொருவரும் சேர்ந்து மரத்தடியில் இறங்கச் செய்தார்கள். பரவாயில்லை.
சில நிமிடங்கள் விரயமானாலும் மாலை 6.00மணிக்குள்
யாழ்ப்பாணம் வந்துவிட்டேன். ஏறக்குறைய 6 மணித்தியாலங்கள் எடுத்தன. திருகோணமலையில் இருந்து
கொடிகாமம் வரை ரூபா.830 உம், கொடிகாமத்தில் இருந்து யாழ்ப்பாணம் ரூபா.150 உம், யாழ்ப்பாணத்தில்
இருந்து வீட்டிற்கு வர, மோட்டர் சைக்கிளின் தரிப்பிடப்பணமாக ரூபா.550 உம் கொடுக்க வேண்டி
வந்தது.
இன்று மதியம் புறப்பட்டதற்கு முக்கிய காரணம், எனது மோட்டார்
சைக்கிள் தரிப்பிடத்தில் நிற்பதால், அண்மையில் பெய்த மழையில் ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டிருக்கும்
என்று நினைத்தேன். நல்ல வேளை அப்படி ஒன்றும் நடக்கவில்லை..! மாலை 6.30இற்குள் வீடு
வந்துவிட்டேன். இங்கு வந்ததும் கடந்த 12 நாட்கள் நடந்த சம்பவங்களை மனைவி, பிள்ளைகள்
அடுக்கினார்கள்..! மழையில் பட்ட துயர்களைப்
பகிர்ந்தார்கள். நடக்கும் க.பொ.த உயர் தரப்பரீட்சை பற்றிக் கதைத்தார்கள். நாளை நடக்க
இருக்கும் பொது உளச்சார்பு பரீட்சை பற்றிக்கதைத்து, சில கேள்விகளுக்கு விடையை என்னிடம்
எதிர்பார்த்தார்கள்..! நானும் என்னால் இயன்றதைச் சொன்னேன். தொடர்ந்து அவற்றைப் படிப்பிக்காமல் விட்டதால் பல
விடயங்களை மறந்துவிட்டன.
மற்றும் இன்று காலை மூதூரில் என்னுடன் பணியாற்றிய ஒரு அரச ஊழியரின் மகள் வந்திருந்தார்..!
அவருடன் ஒரு போட்டோ எடுத்து, அவரது தந்தைக்கு காட்டுப்படி, அந்தப்பெண்ணிடம் சொன்னேன்.
அந்தப் பெண்ணின் தந்தையின் தம்பி, 2000 ஆண்டில் திருகோணமலையில் ஒரு கணினிக் கல்வி நிறுவனத்தை
நடாத்தினார்..! நானும் அதில் படிப்பித்தேன்.
எனக்கு பட்டதாரிப் பயிலுனர் ஆசிரியராக இருக்கும்போது, கிடைத்த மாதச் சம்பளம்
ரூபா.2495.00..! ஆனால் ஒன்றரை மணித்தியால ஆங்கில மொழிமூலமான கணினி வகுப்பிற்கு ரூபா.450
வாங்கியுள்ளேன்..! இரண்டாவது மில்லேனியம் பிறந்த காலப்பகுதியில் ஒரு பவுண் நகையின்
பெறுமதியும் ஏறக்குறைய ரூபா.5000 இற்குள் தான் இருந்தது..!
யுத்தம் இல்லை என்றாலும் நாடு இவ்வளவு பொருளாதாரப் பின்னடைவிற்குக்
காரணம் நாம் எல்லோரும் தான். நாம் விடும் தவறுகளும் நாட்டைப் பெரிதும் பாதிக்கின்றன.
சரியான உழைப்பை நாட்டிற்குக் கொடுத்து, நாட்டுக்குரிய வரிகளை ஏமாற்றாமல் கட்டினாலே
போதும். நாடு வளமாக மாறியிருக்கும். அதனால் மக்கள் வாழ்க்கை வளமாகும். நாடு நன்றாக
இருந்தால் தான், நாம் நன்றாக இருக்க முடியும்.
ஒரு தனியார் பஸ் அவ்வளவு அழகாகவும் துப்பரவாகவும் இருக்கும்
போது ஏன் இ.போ.சபையின் பஸ்கள் இவ்வளவு மோசமான நிலையில் இருக்கின்றன..? மக்களே காரணம்..!
ஆ.கெ.கோகிலன்
06-12-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக