பரதேசி..!

 



2013இல்  வெளிவந்து பெரிதும் பேசப்பட்ட திரைப்படத்தை பார்க்க எனக்கு இப்போது தான் நேரம் கிடைத்தது..!

அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அந்தநேரம் இந்தப்படத்தின் முடிவு ஒரு எதிர்மறையான தன்மையைக் கொண்டிருந்தது. அதைச்சகிக்கும் பக்குவம்  அப்போது எனக்கு இல்லை.

ஏறக்குறைய எனக்கு 50 தாண்டிய பிறகு தான் சில ஞானங்கள் வந்தன..! இப்போது இந்தப்படத்தைப் பார்க்கும் போது ஏன் அன்று பார்க்கவில்லை எனத்தோன்றியது..?

வழமையாக, பாலாவின் படங்கள் என்றாலே காட்சிகள் செதுக்கப்பட்டே இருக்கும். இங்கும் அது நிரூபணமாகியுள்ளது..!

ஆங்கிலேயர்கள் எம்மை அடிமைப்படுத்திய காலத்தில், அவர்களுக்குக் கீழ் வேலைசெய்த எமது மக்கள், தங்கள் இனத்தில் பற்றுப் பாசம் அற்று மிருகங்களாக இருந்ததனை நினைக்க மிக வேதனையாக இருக்கின்றது. தமிழனுக்கு எதிரி வெளியில் இல்லை..! தமிழனுக்கு எதிரி தமிழனே..! இந்தத்தலைவிதியை யார் மாற்றி அமைக்கின்றார்களோ அன்றில் இருந்தே தமிழினம் உலகத்தின் மதிக்கப்படும் ஒரு மூத்த இனமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும். ஆங்கிலேயர்கள் எம்மை அடிமைப்படுத்தியதன் காரணம் பொருளாதாரச் சுரண்டல்..! ஆனால் எமது மக்கள், எமது மக்களை அடிமைப்படுத்தியதன் காரணம் சாதியம் அல்லது தாம் பெரியவர் என்ற ஆணவம்..!

படத்தைப்பார்க்கும் போது ஆங்கிலேயனுக்கு அடிக்கத்தோன்றவில்லை. அவனுக்கு வால்பிடிக்கும் அடிமை அடிபிடிகளைக்காணவே கையுதறுகின்றது..! சில படங்கள் நமது உள் உணர்வுகளை வெளியே கொண்டுவந்துவிடும். எவ்வளவு தான் அறிவால் கட்டுப்படுத்தி வைத்தாலும், உணர்வுகள் கொப்பளித்தால் கனல்களைக் கக்காமல் இருக்க முடியாது. அவ்வளவு தூரம்  அமைதியாக என்னால் சாமிபோல் இருக்க முடியாது.

பொதுவாக, யாரையும் வேதனைப்படுத்துவதை, நான் ரசிப்பதில்லை. எனக்கு அது பிடிக்காது. அதேபோல் உருவக்கேலிகள் செய்பவர்களையும் நான் மதிப்பதில்லை. அதர்வாவின் கதாபாத்திரம் எனக்கு பல இடங்களில் கவலையையே கொடுத்தது..!

அந்த அப்பாவிக்கு உணவு கொடுக்காமல், எல்லோரும் விளையாடும் இடம் எனக்கு உண்மையில் பாலா மேல் கடும் கோபம் வந்தது..! அப்பாவிகளைப் படத்தில் கூட அழவைப்பது எனக்குப் பிடிக்காது.

படத்தின் கதை என்பது ஏழைமக்களின் வாழ்க்கை தான்..!  பொருளாதாரத்தை ஈட்ட, இருப்பிடத்தை விட்டு இடம்பெயர, அங்கே தொழிலுக்காக அடிமை விலங்கிட்டு, இறுதிவரை வெளியேற முடியாமல், அடைத்து வைத்திருக்கும் வேதனை மிகுந்த வாழ்வே கதைக்கருவாக இருக்கின்றது..!

ஏறக்குறைய 10 வருடங்களுக்கு முன்னரே  கொரோனா மாதிரியான தொற்றுநோயைப்பற்றி பேசியதுடன், அதில் ஒருவர் முகக்கவசத்துடன் வருவது, தற்போது பார்க்க ஆச்சரியமாக இருந்தது..!

என்ன தான் நன்றாக எடுக்கப்பட்டாலும், அந்த மக்களுக்கு ஒருவிடிவை ஏற்படுத்தக்கூடிய முடிவை எடுக்க, பாலா ஏன் யோசிக்கவில்லை என்பது படத்தின் வெற்றி, அவருக்கு முக்கியமாகப்படவில்லைப்போலும்..!

அந்த மக்கள் ஏதாவது நியாயமான காரணங்களால், விடுவிக்கப்பட்டிருந்தால் இந்தப்படம் இன்னும் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும்.

படத்தைப்பார்த்துவிட்டு வலியோடு திரும்பப் பலருக்கு விருப்பம் வராது.

நடிப்பு, தொழில்நுட்பங்கள் எல்லாம் நன்றாக இருந்தன..! குறைசொல்ல ஒன்றுமில்லை.

இயக்குனர் பாலாவின் படம் என்ற அவரது தனித்துவ முத்திரை, அங்கே தெரிந்தது உண்மை..!

 


ஆ.கெ.கோகிலன்

13-11-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!