சமையல் ராணி..!
இன்று ஞாயிற்றுக்கிழமை. வழமைபோல் திருகோணமலை போகும் போது, இன்றும் பஸ்ஸில் இரு நபர்களைச்
சந்தித்தேன்..! அதில் ஒருவர் பெண். இன்று தான் முதன் முதலில் சந்தித்தேன்..! இன்னொருவர்,
ஏறக்குறைய 25 வருடங்களுக்கு முன்னர் நான் சந்தித்துள்ள, உயர் தர வகுப்பில் கணிதம் படிப்பிக்கும் ஒரு ஆசிரியர்..! ஒரு காலத்தில், வடக்கு கிழக்கில்
உயர் தரக் கணிதத்திற்கான வளவாளராக இருந்தவர்..! அது மாத்திரமன்றி, திருகோணமலையிலுள்ள
ஒரு கோவிலின் பிரதம குருக்கள்..!
எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது..! இந்தக்காலப் பெண்கள், ஆண்களின்
வேலைகள் எல்லாவற்றையும் செய்ய முனைய, தற்போது பல ஆண்கள் பெண்களின் வேலைகளையே செய்கின்றார்கள்..! இது தான்
உண்மை..! ஆனால் இந்தபெண் அவ்வாறு இல்லாமல்,
தான் ஒரு பெண்ணாக சமையலில் அசத்த வேண்டும் என்பதற்காக இந்தக்கற்கை நெறியில் இணைந்துள்ளார்..!
இதற்குக் கட்டணமாக ரூபா.60,000 என்றும், 6
மாதங்களின் பின்னர் ஐந்து நட்சத்திர அல்லது
நான்கு நட்சத்திர ஹோட்டலில் 6 மாதப்பயிற்சி
எடுக்க முடியும் என்றும், அப்படி எடுக்கும்போது நல்ல சம்பளத்துடன் வேலைக்குப்
போகலாம் என்றும் சொன்னார்..! அத்துடன், இந்தச்சான்றிதழ்களை வைத்துக்கொண்டு வெளிநாடுகளுக்கும்
செல்ல முடியும் என்றும், ஏறக்குறைய ஐந்து வருடங்களில் பெரிய செப்பாக (Chef) வரமுடியும் என்றும் நம்பிக்கையுடன் சொன்னார்.
அந்தப்பெண்ணின் முயற்சியைப் பாராட்டினேன். பிடித்த துறையில் தான் உண்மையில் அதிகம் சாதிக்க முடியும் என்றும், உமது சமையல் மற்றவர்களுக்கும் பிடித்துக்கொண்டால், சில சமயம் பெரிய நிலைக்கு கொண்டு செல்லும் என்றும் KFC இன் நிலைக்குச் சென்றால் கூட ஆச்சரியப்படமுடியாது என்றும், அவருக்கு நம்பிக்கையூட்டினேன்.
இந்த இளவயதுப்பெண்ணிற்கு இன்னும் கலியாணம் சரிவரவில்லை..!, அண்ணாவும் இறந்துவிட்டார்..! அப்பாவும் இல்லை..! அம்மாவிற்கும் ஏலாது..! அடுத்த அண்ணனும் உதவுவதில்லை..! இந்தச்சூழலில் ஒரு சாதாரண பெண் என்றால் விரக்தி நிலைக்குச் சென்றிருப்பார். ஆனால், இந்தப்பெண் தான் தோட்டம் செய்வதாகவும், தையல் செய்வதாகவும், தமது வீட்டிற்குப் பெயின்ட் அடிப்பதாகவும் என்று பல வேலைகளைச்செய்து என்னை ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருந்தார்.
நாம், யாருடனும் ஒப்பிட்டுக்கொண்டு எமது வாழ்க்கையைக் கொண்டுசெல்லக்கூடாது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான சூழ்நிலையே
அமைந்துள்ளது. அவரவருக்குத்தான் தெரியும் அவர்களது நிலை பற்றி..! எமது வாழ்க்கையை
நாம் தான் வாழ வேண்டும். அதனை மிகவும் ரசித்து, சந்தோசமாக வாழவேண்டும். இவ்வாறு கதைத்துக்கொண்டிருக்க, ஏறக்குறைய இரண்டு
மணித்தியாலங்கள் போனதே தெரியவில்லை..!
பல சாப்பாடுகளுக்குரிய சமையல் குறிப்புக்கள் சொன்னார்..! நான் எனக்கு
எழுதிப்போடச் சொன்னேன் “எனது மனைவி, பிள்ளைகளுக்கும்
தெரியப்படுத்தி அவற்றைச்செய்து பார்க்க..”
அத்துடன் முடியும் என்றால் யூடியூப்பில் வீடியோவாகப் போடச்சொன்னேன்.
சில சமயம் இன்னொரு பூர்ணாக்காவாக வரலாம்..!
எமது மனைவி பிள்ளைகளும் இப்போது யூடியூப்பில் பல விடயங்களைக் கற்று
செய்து பார்க்கின்றார்கள். நான் வழமையாக பித்தளைப்பொருட்களை மினுக்க பல இயற்கைப்பொருட்களைப்
பயன்படுத்துவேன். இருந்தாலும் பலன் பெரிதாக இருப்பதில்லை. இன்று எனது மனைவி இந்தவிடயத்தில்
தூள் கிளப்பியிருந்தார்..! ஏதோவோர் வீடியோவைப் பார்த்துவிட்டு, பித்தளை விளக்குகளையும்,
தட்டுகளையும் புதியதாக அதுவும் மிகப்பள பளப்பு
மிக்கதாக மாற்றியிருந்தார். அவரை இன்று மனந்திறந்து
பாராட்டினேன்.
இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில், மனையியலில் பட்டம் பெற்ற பெண்களுக்குத் தனி மதிப்பு இருக்கின்றது..!
இந்தப்பெண்ணையும் பட்டம் பெற ஊக்குவித்தேன். அத்துடன் புதிய சாப்பாடுகளைக் கண்டுபிடிக்கவும்
சொன்னேன். உடனே தனது கண்டுபிடிப்பு ஒன்றைச் சொன்னார்..! அது “கரணைக்கிழங்கு வடை..!”
நானும், எனது நண்பர் கண்டுபிடித்த “முருக்கங்காய் ஊறுகாய்” பற்றிச் சொல்லி, அவரைச்செய்து
பார்க்கச் சொன்னேன்.
முயற்சிகள் ஒரு நாளும் தோற்பது
இல்லை. இன்று இல்லாவிட்டாலும், நாளை நம் வாழ்வை அவை மாற்றும்..! ஓமந்தையில் அந்தப்பெண், என்னிடம் விடைபெற்று இறங்கியதும்,
பக்கத்தில் இருந்த, முன்பு அறிமுகமான கணித ஆசிரியருடன் கதைக்கத்தொடங்கினேன்.
அவர் தற்போது ஓய்வு பெற்று நிம்மதியாக, கோவிலோடு இருக்கின்றார்..!
அவருக்கு கீழ் நான்கு ஐயர்கள் வேலை செய்கின்றார்கள்..! தனது கோவிலைத் தனியாரே நடத்துகின்றார்
என்றும், தனக்கு மாதச்சம்பளம் தருவதாகவும் சொன்னார். தான் தற்போது ஆசிரியர் வேலையில்
ஈடுபட நேரமில்லை என்றும் சொன்னார். எந்த உயர் பதவியையும் எடுக்காமல் தான் மறுத்துவிட்டதாகவும் சொன்னார்.
“குருக்கள் பட்டம்” எங்கே பெற்றீர்கள் என்று கேட்க, தான் யாழ்ப்பாணத்தில்
இணுவில் மற்றும் சுன்னாகம் போன்ற பகுதிகளில் பெற்றதாகச் சொன்னார்..! அதுவும் குருகுல
முறையில் படித்ததாகச் சொன்னார்.
சமஸ்கிரத மொழியை ஏன் மக்கள் தமது பேச்சு மொழியாகப் பயன்படுத்துவதில்லை
என்று சிறுபிள்ளைத்தனமாகக்கேட்க, அவர் மௌனம் சாதித்தார்..! புரிந்தது.! இறைவன் மொழி
அனைவருக்கும் புரிந்தால், பின்னர் எப்படி ஐயர் மாத்திரம் பூஜை செய்ய முடியும்..? அனைவரும்
அந்த மொழியில் இறைவனுடன் கதைக்கத்தொடங்கிவிடுவார்கள்..!
பின்னர், இந்தியாவிலுள்ள “ஓதுவார்கள்” பற்றிக்கேட்டேன்..! ஐயா, காலை
3.00 மணி பஸ்ஸில் திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் போய், அங்கே ஒரு மரண வீட்டில்
கலந்துவிட்டு, மாலை 4.15 பஸ்ஸில் ஏறி வர, நான் இவ்வாறு கேள்விகள் கேட்க ஐயா மீண்டும் மௌனமாகிவிட்டார்..!
ஆனால் இலங்கையிலும் புலவர், பண்டிதர், சாமி, சன்நியாசி, சைவக்குருக்கள்,
பூசாரி என வரமுடியும் என்றும் அது தொடர்பான படிப்புக்கள் இங்கும் இருக்கின்றன என்றும் சொல்லிவிட்டே மௌனமானார்..!
ஐயாவுடன் கதைத்ததால் அடுத்த இரண்டு மணிநேரமும் சுவாரசியமாக எனக்குப்
பறந்தது..! எனது இடம் கிட்டவர, ஐயாவிடம் விடைபெற்று
இறங்கினேன்.
நான் இறங்கியதும், ஐயா “அப்பாடா..!”
என நிம்மதியாக இருந்திருப்பார். நல்லவேளை அவர் களைப்பால் மௌனமாகியதால், இவ்வளவோடு முடிந்தது..!
இல்லை என்றால், அவரும் இழுத்துவிட்டால், உலக மதங்கள் அனைத்தும் வந்து இந்து சமயத்தோடு
உருண்டு பிரண்டிருக்கும்..! நல்லவேளை ஒருவர் மௌனமானதால், அமைதி தொடர்ந்து இருந்தது..!
ஆ.கெ.கோகிலன்
08-12-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக