உண்மையானவன்..!
நாம் நூறுவீதம் உண்மைபேசினால்
எம்மை எல்லோரும் பைத்தியம் என்று தான் சொல்வார்கள். ஏன் என்றால் அறிவு என்பதிலும் ஒருவித
உண்மை மறைப்பு இருக்கத்தான் செய்கின்றது..! அதனை இன்னொரு விதத்தில் கூறுவதாயின் நடந்ததை
நடந்த மாதிரிக்கூறாமல் கொஞ்சம் சபை நாகரீகம் கருதிப் பட்டும் படாமல், நசூக்காகச் சொல்வதையே
பெரிதும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
ஆனால் நான் இதற்கு எதிரானவன். யார் என்ன நினைத்தாலும் பராவாயில்லை.
உண்மை என்றும் உண்மை தான். நான் உண்மையாக இருந்தால் யாருக்கும் பயப்படத்தேவையில்லை.
மாத்தி மாத்தி சொல்லத்தேவையில்லை. எப்போதும் சிரிக்க முடியும்..! யாரையும் கோபிக்கத்தேவையில்லை..!
பிழையைப் பிழையென்று சொல்வதே தவிர, திருத்திக்கொண்டால், நாம் தான் அவர்களை முதலில்
பாராட்டுவோம்.
நேற்று யாழில் நடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில்
பல விடயங்கள் வெளிவந்தன..! அதில் வைத்தியர் அர்சுனாவின் கேள்விகள் பலரைக் கஷ்டப்படுத்தியுள்ளது.
உண்மைகள் நிச்சயம் சுடும்..! தவறுகள் இல்லாமல் இருந்தால், எப்போதும் தப்பலாம். ஆனால், அவை இல்லை என்றால், அதற்குரிய தண்டனைகளை அனுபவித்தே
ஆகவேண்டும். அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல.
நானும் யாழில் பணிப்பாளராக இருக்கும்போது ஒவ்வொரு மாதமும்
கூட்டம் வைப்பேன். அரச அதிபர் ஒழுங்கமைக்கும் ஒருங்கமைப்புக் கூட்டத்திற்கும் செல்வேன்.
ஆனால் நான் எனது கூட்டத்தில் எல்லோரும் என்னுடன்
கதைக்கக்கூடிய வகையில் தான் அதனை ஒழுங்கமைப்பேன். இது சில சமயங்களில் பெரும் விவாதமாகவும்,
சத்தமான கலவரச் சூழலாகவும் தெரியும். இருந்தாலும், நான் அதனை ஏற்றுக்கொண்டு, என்னால்
இயன்ற தீர்வுகளை வழங்க முற்படுவேன். அல்லது அங்கு சொல்லப்படுகின்ற நல்ல தீர்வுகளை எடுத்து,
நடைமுறைப்படுத்த முனைவேன். அப்படியே ஆறுவருடங்கள் ஆச்சரியப்படும் வகையில் ஓடிவிட்டன.
ஆனால், ஆச்சரியமான மாற்றங்களை ஏற்படுத்த என்னால் முடியவில்லை. அதற்கு காலமும், நாட்டு
நடப்புக்களும், கொரோனாவும் ஒத்துழைக்கவில்லை.
இருந்தாலும் ஒரு விடயம் மனதில் நிறைவாக இருக்கின்றது. அது, என் அறிவுக்கு எட்டிய
வகையில் நிறுவனத்தின் பெயரைச் சொல்லி எந்த ஊழல்களையும் செய்யவில்லை. ஆனால் சில சமயம்,
அன்பான சில உபசரிப்புக்கள் எமக்கு கிடைத்திருக்கும்..! அவையும் இலஞ்சங்கள் தான். ஆனால்
கொடுப்பவர்களின் மனதை நோகடிக்கக்கூடாது என்பதற்காக ஓரளவிற்குப் பொறுத்துள்ளேன். உதாரணத்திற்கு
வருட ஆரம்பத்தில் சிலர் கலெண்டர் தருவார்கள். அதனைப் பணம் கொடுக்காமல் வாங்குவோம்.
சிலர் தின்பண்டங்களைக் கொண்டுவருவார்கள். அவர்கள் மனதை நோகடிக்காமல், ஏற்றுக்கொள்வோம்.
நாமும் ஏதாவது நிகழ்வுகளுக்காக அவ்வாறு செய்வோம். இவை எல்லாமே தவறுகளுக்கு வழிவகுக்கும்.
அதனால் இயன்றவரை, தொடர்ந்து அதற்கு இடம் கொடுப்பதில்லை..!
இன்று பத்திரிகைகளைப் பார்க்கும்போது, கேள்விகள் கேட்பது
தவறு என்பது போலவும், அமைதியாக நல்ல பிள்ளைபோல் இருப்பதே சரி என்பது போலவும் சொல்கின்றார்கள்.
அது தவறு.
மருத்துவ ஊழல்கள், கணக்கியல் ஊழல்கள், சட்டவூழல்கள், கல்வி
ஊழல்கள், ஊடக ஊழல்கள், என பலவாறு ஊழல்கள் வியாபித்துள்ளன..! இவற்றைச் செய்வதும் மக்களே..!
அதனால் பாதிப்படைவதும் மக்களே..! சிலர், தாங்கள்
மாத்திரம் நன்றாக வாழச்செய்யும் தவறுகள், பலரைப் பாதிக்கின்றன..! உணர்ந்து திருத்திக்கொண்டால்,
நாமும் முன்னேறுவோம். நாடும் முன்னேறும். மாறாக, மறைப்போம் என்றால் நாமும் மாட்டுவோம்,
அத்துடன் நாடும் அழிவடையும்.
உணர்ந்து நடப்போம். உண்மையாக இருப்பது கடினம். உண்மையானவர்களை
மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். கவிஞர்கள் போல், பொய் பேசுபவர்களை, வேண்டும் என்றால்,
அவர்களது நாகரீக வார்த்தைகளுக்காகப் பாராட்டுங்கள். ஆனால், பொய் சொன்னதற்காக தண்டனை
வழங்குங்கள். அப்போது தான், முறைமை சீர்படும். நாடும் நலமாக இருக்கும். மக்களும் நிம்மதியாக இருப்பார்கள்.
ஆ.கெ.கோகிலன்
15-12-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக