லப்பர் பந்து..!
சில படங்கள் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரிய வெற்றியைப்
பெற்றுள்ளன. அந்த வகையில் இந்தப்படம் தயாரிப்பாளருக்கு பெரிய வெற்றியைக்கொடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்தில் அப்படி என்ன இருக்கின்றது என்பதைப் பார்க்க
ஆசைப்பட்டு படத்தைப்பார்த்தேன். படம், அப்படியே கட்டிப்போட்டுவிட்டது..! ஒரு சாதாரண
கிரிக்கெட் விளையாட்டையும், குடும்பச்சூழலையும் தொடர்பு படுத்தி, அதற்குள் காதல், பிரிவு, பாசம், அன்பு, விட்டுக்கொடுப்பு, ஒற்றுமை என அனைத்து
உணர்வுகளையும் காட்டியதுடன், இறுதியில் தாம் போட்டியில் தோல்வியுற்றாலும், திறமையானவன்
வெல்வதையும், அவனுக்கான அங்கீகாரங்கள் கிடைப்பதையும் உறுதிசெய்து, வெற்றியைத் தாண்டி
ஒரு அறத்தை இந்தப்படம் சொல்கின்றது..!
அட்டைக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ்கல்யான் என இரண்டு நாயகர்கள் இணைந்து நடித்து, படத்திற்கு
ஒரு பெறுமதியைச் சேர்த்துள்ளார்கள்.
அதுமாத்திரமன்றி, படத்தில் நடித்த அனைத்து நடிகர் நடிகைகளும்
கதாபாத்திரங்களாக வாழ்ந்துள்ளார்கள். படத்தில் கெத்து என்ற மனிதரின் மனைவியாக நடித்தவர்,
மிகச்சிறப்பாக நடித்துள்ளார்..! மிகவும் ஒரு ஆளுமையான நடிகையாகத் தெரிந்தார்.
சில காட்சிகள் கண்களில் வியர்வையைக் கொண்டுவந்தது..! மனைவியின்
சாரிகளில் தூக்கம் வராமல் மாறி மாறிப்படுப்பதும், பின்னர் மனைவி, அவரை மன்னித்து வீடுவந்தது மாத்திரமன்றி, அவற்றைத்
தோய்து மீண்டும் அடுக்கிவைத்த காட்சி எளிமையாக இருந்தாலும், குடும்ப உணர்வை சிறப்பாக
வெளியே கொண்டுவந்தது.
காதல் சடு குடு படத்தின் சாயலில் படம் இருந்தாலும் இங்கு
களம் வேறாக இருந்ததால் ரசிக்க முடிந்தது.
படத்தில் அனைத்து தொழில்நுட்பங்களும் தரமாக இருந்தன.
தமிழரசன் பச்சைமுத்துவின் இயக்கம் சூப்பர். எனக்கு குறைசொல்ல
ஒன்றும் தெரியவில்லை. இரு நாயகர்களுக்கும் இந்தப்படம் நிச்சயம் மறுவாழ்வு கொடுக்கும்.
ஆ.கெ.கோகிலன்
03-11-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக