ஒலி வேலி..!

 

 



இந்தப்பூமியில் பல விதமான வாழ்வியல் நுட்பங்கள் இருக்கின்றன. அவை பொதுவானதாகவும், சில விசேட தன்மைகள் கொண்டதாகவும் இருக்கின்றன. பொதுவான நுட்பங்களைப் பொறுத்தவரை பலரின் கவனத்தைப்பெற்று, நடைமுறையில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும். ஆனால், தனிப்பட்ட வாழ்வியல் நுட்பங்கள் சில நபர்களிடம் மட்டுமே இருக்கும். பலரால் அதைப் புரிந்து கொள்ள முடியாமலும்  அல்லது ஏற்றுக்கொள்ள முடியாமலும் இருக்கலாம்.

பொதுவாக நித்திரை கொள்ளவேண்டும் என்றால் இருட்டாகச் சூழல் இருக்க வேண்டும் என்று தான் பலர் விரும்புவார்கள். அல்லது அவ்வாறாகப் பழக்கப்பட்டவர்கள் அதிகம் இருக்கின்றார்கள்..! ஆனால் சிலர், நல்ல வெளிச்சத்தில் நிம்மதியாக உறங்கும் இயல்பைக்கொண்டவர்கள் இருக்கின்றார்கள்..! அதற்குப் பல காரணங்கள் உண்டு. முதலாவது காரணம், திடுக்கிட்டு எழும்பும்போது தடுமாறத்தேவையில்லை..! சூழல் தெளிவாகப் புரியக்கூடியதாக இருக்கும். அதேவேளை இந்தப்பழக்கத்தால் மின்சார செலவுகள் சற்று அதிகமாக ஏற்படலாம்.

இருட்டை விட வெளிச்சத்தில் நுளம்புத்தொல்லைகள் குறைவு..! நுளம்பு வலையில்லாவிட்டாலும் ஓரளவிற்கு உறங்க முடியும். அதேபோல், விச ஜந்துக்களின் பயமும் கிடையாது. குறிப்பாக பேய் பிசாசு என்று எதற்கும் பயமே வராது..! ஏனென்றால் மூளை தெளிவாகச் சூழலை அவதானிக்கும். முடிவுகள் தீர்க்கமாகவும் உண்மையாகவும் இருக்கும்.

தலைப்பிற்கு வருவோம். ஒலி வேலி என்பது கற்பனையான, ஆனால் நமது மூளைக்கு அதிக குவியத்தை ஏற்படுத்த உதவும் ஒரு நுட்பம்..! பொதுவாக நான் படிக்கும்போது, வீட்டில் பலர் இருக்கும் சூழலில் ஏதாவது எனக்குப்பிடித்த பாடல்களை அல்லது ஒலிகளை போட்டுவிடுவேன்.  மற்றவர்கள் நினைப்பார்கள் அவன் பாட்டுக்கேட்டுக்கொண்டு இருக்கின்றான் என்று..! உண்மையில் அந்நேரத்தில், நான் ஆழமாக சில விடயங்களைக் கற்றுக்கொண்டிருப்பேன். அந்த ஒலி வேலி இல்லை என்றால், வீட்டில் வரும் ஒவ்வொரு ஒலிச் செய்திகளும் எனது கவனத்தையும், முயற்சியையும் பாழாக்கி விடும். இந்த நுட்பம், எனக்குப் பல தடவைகள் உதவியிருக்கின்றன..! குறிப்பிட்ட பாடலோ அல்லது ஏதாவது இசையோ எனக்கு ஒரு வித மனதிற்கு மகிழ்ச்சியான ஒலியாக இருப்பதாகவே உணர்வேன். தவிர அதில் உள்ள விடயங்களில் கவனத்தை விட மாட்டேன். சில வேளைகளில் யாராவது பாட்டின் வரியைக்கேட்டால் எனக்குத் தெரியாது என்று, உண்மையைப் பேசிவிடுவேன். சில வேளைகளில் அருகில் நின்று தொடர்ந்து அந்த ஒலிகளைக் கேட்டவர்கள் அந்த ஒலி தொடர்பான விடயங்களில் நிபுணத்துவம் பெற்றிருப்பார்கள். ஆனால் எனக்கு அவை சத்த அரண்கள் மட்டுமே..!

சில நெருக்கமான நகர்புற வீடுகளில் குளியல் அறைகள் வீட்டின் நடுவிலே இருக்கும். அந்த நேரம் அவரச உபாதைகளைக்கழிக்க அப்படிப்பட்ட அறைகளுக்குள் சென்றால் அந்த சத்தங்கள் வெளியே இருப்பவர்களை முகம் சுழிக்க வைக்கும். இந்த இடத்திலும் ஒலி வேலிகள் எழுப்புவேன். தண்ணீர் சத்தம் அல்லது இருமல் சத்தம் என வசதிக்கு ஏற்ப தேவையற்ற ஒலிகளை தாண்டி வெளியே ஏற்கக்கூடிய ஒலிகளை வெளிவிடுவேன்.

உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக குளியறைச்சுவருக்கு கண்ணாடி போடமுடியாது தானே..! அது தானே நாகரீகம்..!

சில பேருக்கு காலையில் எழுந்தால் தான் படிப்பு வரும் என்பார்கள். சிலர் இரவிலேயே அது வரும் என்பார்கள். சிலர் எந்த நேரத்திலும் படிக்கலாம் என்பார்கள். இங்கு முக்கியமானது ஒவ்வொரு நபர்களும், அவர்களது வாழ்வியல் பழக்க நுட்பங்களும் தான். அவரவர் தமக்கு ஏற்ப நிபந்தனைகள் அற்ற நிலையில் இவற்றைச் செய்யலாம். ஆனால் பரீட்சை பகலில் குறித்த நேரத்தில் தான் காலை மாலை என நடைபெறும். அந்நேரத்தில் எழுதக்கூடியமாதிரிப் பழகியிருந்தால் பொதுவான பரீட்சைகளில் வெற்றிபெற முடியும். எனக்கு இரவு தான் மூளை வேலை செய்யும் என்று பழக்கப்படுத்திவிட்டால், பகலில் நடக்கும் எல்லாப் பரீட்சைகளிலும் கோட்டைவிடவேண்டியே வந்துவிடும்.

எப்படியான வாழ்வியல் நுட்பங்கள் இருந்தாலும், பொதுவான வாழ்க்கையில் வெற்றிபெற, அதற்கு ஏற்ப எம்மைத் தாயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

எனக்கு ஒலி வேலிகள் பல விடயங்களைக்கற்கவும், நினைவு படுத்தவும் உதவியுள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மை.




ஆ.கெ.கோகிலன்

23-11-2024. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!