ஒளி எல்லை..!

 




எமது கண்ணைப்பொறுத்தவரை, அதற்கு ஒரு பார்வைப்புல எல்லையுண்டு..! அந்த எல்லை வரையே சாதாரண ஒரு மனிதனால் பார்க்க முடியும்..! அதேபோல் ஒளி அலைகளை உள்வாங்கக்கூடிய  கண்களின் தன்மையும்,  ஓர் அளவிற்கே உண்டு..! குறிப்பாகச் சொல்லக்ககூடிய விப்ஜியோர் (VIBGYOR) எனப்படும் நிறங்களை மாத்திரமே எம்மால் பார்க்க முடிகின்றது..! அந்த நிறங்களின் ஒளி அலைகளே கண்களுக்குள் செல்ல இயலுகின்றன..! அதைத்தாண்டிய ஊதாக்கடந்த பகுதி அல்லது செந்நிறக்கீழ் பகுதி என்று சொல்லக்கூடிய பகுதியிலுள்ள அலைகளைக் கண்களால் உணரமுடியாது..! அப்படி உணர முடியுமாயின் பல அலைகள், எமது கண்களுக்குள் மாட்டும்..!



யோசித்துப் பாருங்கள், நுணுக்குக்காட்டியளவிற்கு எமது பார்வை வீச்சம் இருந்தால், மக்களோடு இணையவோ அல்லது உணவுகளை உண்ணவோ மனம் வராது..! ஒரு புண்ணைப்பார்த்தால், வாழ்க்கையே வெறுத்துவிடும். அவ்வளவு நுண்ணுயிர்கள் இந்தப் பூமியில் படைக்கப்பட்டு இருக்கின்றன..! இறைவனுக்குத் தான் தெரியும், எல்லாவற்றிற்கும் ஒரு அளவு உண்டு என்பது..!

இன்னும் சில காலங்களில் ஒளி எல்லைகளும், ஒளி வேலிகளும் வரலாம்..! இயற்கையாக இருக்கும்  அல்லது அமைக்கும் வேலிகள் அல்லது எல்லைகள் சில வேளைகளில் தேவைப்படாது..! ஒரு லைட்டின் (Light) மூலம் எமக்கான எல்லையை நிர்ணயிக்க முடியும்..! அந்த எல்லைக்குள் மாத்திரம் எமது வேலைகளைச் செய்ய முடியும். அதைத்தாண்டிய பகுதி, வேறு ஒருவருடையதாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்குள் போக முடியாது. ஒளி வேலி மற்றும் ஒளி எல்லைகள் இரவில் வெள்ளோளி மூலமும் பகலில் கருவோளி மூலமும் ஏற்படுத்தலாம்..!

 


சூரிய ஒளி படும் பிரதேசம் முழுக்க ஆள ஆசைப்பட்ட மன்னர்கள் பற்றி அறிந்திருப்போம்..! அது கூட ஒளி எல்லைக் கொள்கை தான்..!

அண்மைய காலங்களில் கணினி விசைப்பலகைகளும் (Computer Keyboard) ஒளிவடிவத்தில் வருகின்றன..!  நிற ஒளிகளை வைத்தே, ஒளியூடகத்துறை பாரிய அளவிற்கு வளர்ந்துள்ளது..! அதற்கு கணினி மூலம் ஒளி விளைவுகளை (Visual/Light Effects) ஏற்படுத்தி, உண்மையில் நடைபெறமுடியாத ஆனால் கனவுகளில் அல்லது  கற்பனைகளில் நடக்கக்கூடிய விடயங்களை மற்றவர்களுக்கு ஒளியூடக வாயிலாகக் கடத்த முடியும்..!

சரி, ஒளி எல்லையை உருவாக்க, இரவில் ஒரு வெள்ளொளியை குறித்த ஒரு காணியின் மையத்திலுள்ள செங்குத்து வழியே குறித்த உயரத்தில் ஒரு ட்ரோன் மூலம் அல்லது ஒரு தூண் மூலம் ஒளிமுதலை வைத்து, ஒளி எல்லையை  உருவாக்கலாம்..!  அதே புள்ளியில் ஒரு தடுப்பை வைத்து, சூரிய ஒளிக்கதிர்களைக் குறித்த இடத்தில் விழாமல் செய்து கறுப்பு ஒளியை அல்லது நிழல் போன்ற நிறத்தை வைத்து பகலில் எல்லையை வரையறுக்கலாம்.  மதில்கள் அல்லது பௌதீக வேலிகள் எல்லா இடங்களிலும் தேவைப்படாது..! தேவைப்பட்டால், வைக்கலாம். இல்லை என்றால் செலவு குறைந்த ஒளிவேலிகளையும், ஒளி எல்லைகளையும் அமைக்கலாம்..!

இறைவனால் படைத்த உயிர்கள், ஒரு நூறு வருடங்கள் வாழ்வதே அபூர்வமாக இருக்கும்வேளை, மனிதர்களால் படைக்கும் கட்டடங்களும், பொருட்களும் ஆயிரம் வருடங்களுக்கு இருக்கவேண்டும் என்று நினைப்பது மிகப்பெரிய முட்டாள் தனம்..! நாம் கட்டும் வீட்டில், எமது பிள்ளைகளின் பிள்ளைகள் வசிப்பார்களா என்பதே மிகப்பெரிய கேள்விக்குறி..? இந்த நிலையில், எல்லாம் நீண்டகாலம் இருக்க வேண்டும் என்றும், உறுதியான பௌதீக வேலிகள் அல்லது எல்லைகள் வேண்டும் என்று  நினைப்பதும் எனக்குத் தவறாகவே தெரிகின்றது..!

பச்சை குத்தி, உடலின் பாகங்களை அழகுபடுத்தும் மனிதர்கள், இன்னும் சில காலங்களில் இலத்திரனியல் தோல் அங்கிகளை உடலில் போட்டு, வேண்டிய நேரம், வேண்டிய உருவங்களை மக்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் காட்டும் வகையில், வாழ்க்கை வந்துவிடும்..!

அதேபோல் நாக்கைப் பிளப்பதும், கண்ணை முதுகில் வைப்பதும், வாயை வயிற்றில் வைப்பதும் படத்தில் சாத்தியப்பட்டது போல், விஞ்ஞானத்தின் ஊடாக நிஜத்திலும் சாத்தியப்படுத்தி,  மனிதப் பிறவிகளை விநோத பிறவிகளாகவும் காட்ட முடியும்..! இதனையும் சேதமில்லாமல்  செய்ய, ஒளியூடகம் உதவும்..!



எதிர்காலம், பல விநோதங்களைக் காண இருக்கின்றது..! அதற்கு கண்களைக் கவனமாகப் பேண வேண்டும்.  கண்கள் இல்லாவிட்டாலும், மூளைக்கு உணர்த்த,  நுண்ணறிவு தொழில்நுட்ப உதவிகளுடன் கூடிய பரிமாற்றும் கருவிகளும் நிறைய வந்துவிடும்..!

விசித்திர வாழ்வியலும், விநோத மனிதர்களும் இன்னும் கொஞ்சக்காலத்தில் உலகில் உச்சம் பெறுவார்கள்..!

 

ஆ.கெ.கோகிலன்

21-12-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!