வெட்டி வார்த்தைகள்..!
கடந்த ஞாயிறு வெளிக்கிட வேண்டிய நான், மகளின் பரீட்சை காரணமாக ஒரு
நாள் பிந்திப்போகத் தீர்மானித்தேன். ஆனால் அதையும் தாண்டிக் கால நிலை பெரிய சிக்கலை
ஏற்படுத்தியது..! தொடர் மழை நாட்டில் பல கஷ்டங்களை மக்கள் மேல் போட்டது..!
இன்று காலை எழும்பும்போதே எப்படியாவது மாலை திருகோணமலைக்குப் போகவேண்டும்
என்று நினைத்தேன். அங்கு இரண்டு பாடங்களைப் பொறுப்பு எடுத்ததால் பாடத்திட்டத்தை முடித்து,
மாணவர்களுக்கு நம்பிக்கை வழங்க வேண்டும். இன்னும்
இரு வாரங்களில் செமஸ்டர் முடிகின்றது. அதற்கு இடையில் ஏறக்குறைய அரைப்பங்கு விடயங்களை
இன்னமும் படிப்பிக்க வேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கிறது.
நேரங்கள் விரைவாக நகர, மதியம் வரை வீட்டு வேலைகளைச் செய்தேன். பின்னர்
குளிக்க வெளிக்கிட, மழை வரத்தொடங்கியது..! மகளுக்கு முன்னமே சொன்னேன் “மழை வந்தால்,
நான் சாரதியாக உன்னை பாடசாலைக்கு அம்மாவுடன் கூட்டிச் செல்கின்றேன் என்று..!” ஆனால் சொன்னமாதிரி, சூழல் மாறி மழைவர, அவ்வாறே செய்தேன்.
குளிக்காமல், சுவாமியை கும்பிடாமல் ஒரு சாரதியாகப் போய், மகளைப் பாடசாலையில் விட்டுவிட்டு வந்தேன். வீட்டிற்கு வந்ததும்
குளித்து, சுவாமி கும்பிட்டு, வெளியில் வர இரண்டாவது மகள் தனியார் வகுப்பிற்குச் சென்றாள்.
அதைத்தொடர்ந்து மனைவியும், பரீட்சை எழுதச்சென்ற மகளைக் கூட்டிவர மோட்டார் சைக்கிளில் சென்றார்.
சரியாக 3.30 மணி அளவில், நானும் இரண்டு மழைக்கவசங்களை அணிந்துகொண்டு
மிகவும் சிரமப்பட்டு காலணிகளையும் அணிந்துகொண்டு வெளிக்கிட்டேன்.
வழமையாக வெளியே செல்லும்போது, மனைவி, பிள்ளைகள் என்னை வழியனுப்பி விட்டுப்படலையை
மூடி விடுவார்கள். இம்முறை அனைத்தையும் நான் செய்தேன். ஒருவாறு, இரவுணவிற்குப் பாணையும்
வாங்கிக்கொண்டு, மாலை 4.00 மணி அளவில் யாழ் சைக்கிள் பாக்கிங்கிற்கு வந்துவிட்டேன். பின்னர்,
வண்டியை நிறுத்திப் பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொண்டு, பஸ் ஸ்டான்டில் கீழ் மழைக்கவசத்தைக்
கழட்டி பையில் வைத்துவிட்டுத் திரும்ப, அருகில் உள்ளவர் நான் கீழ் சிப் போடாமல் இருப்பதைக் காட்டி அதனைப் போடச் சொன்னார்..!
நானும் அவருக்கு நன்றி சொல்லி அதனைப் போட்டேன்.
பஸ், மழை பெய்துகொண்டிருக்க, சரியாக மாலை 4.15 இற்கு வெளிக்கிட்டது.
இன்று பஸ்ஸில் பலருடன் கதைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நுணாவில் பகுதியைச் சேர்ந்த
நபர் ஒருவர், வவுனியாவில் திருமணம் செய்து, ஒரு பிள்ளையின் தந்தையாக இருக்கின்றார்.
ஹாட்வெயர் கடையில் தற்போது வேலை செய்யும் அந்த
நபர், வவுனியாவரை எனக்கு கம்பனி தந்தார்.
அதன்பிறகு, புதிதாக நியமனம் பெற்ற இரண்டு ஆசிரியர்களும், இரண்டு பல்கலைக்கழக
மாணவிகளும் கம்பனி தந்தார்கள். அதில் ஒரு மாணவி “ஆதித்தியா” என்னும் பெயருடையவர், இன்று தமக்கு மருத்துவபீட அறிமுகவகுப்பு
நடந்ததாகச் சொன்னார். எனது நண்பரின் மகளும்
இன்று அந்த வகுப்பில் கலந்துகொண்டார் என முதலே அறிந்தேன். அவருக்கும் இந்தப்பெண்ணை
தொலைபேசி மூலம் அறிமுகப்படுத்தினேன். சில சமயம் ஏதாவது உதவிகள் ஒருவருக்கு ஒருவர் தேவைப்படலாம்
எனச்சொன்னேன். நண்பரும் அதனைக்கேட்டுக்கொண்டார்.
வரும்போது, எல்லோரும் கல்விச்சீர் திருத்தங்கள் பற்றிக்கதைத்துவிட்டு,
எமது நிறுவனம் இருக்கும் துவரங்காடு என்ற இடம் வந்ததும் பட்டென்று இறங்கிவிட்டேன்.
எனது நிறுவனத்திற்கான பாதை மூடப்பட்டதாகவும், மற்றைய ஒரு பாதையினைத் திறப்பதாகவும் பஸ்ஸில் வரும்போதே
பாதுகாப்பு ஊழியர் தெரிவித்தார். அதனால், என்னுடன்
கதைத்த அனைவரிடமும் நன்றி சொல்லி விடைபெற்ற பின்னர், குறிப்பிட்ட மாற்றுப்படலையூடாகவே வந்தேன்.
அந்நேரம், பல மாய காட்சிகளைக் காட்டும், மழை காரணமாக வளர்ந்த சில மரங்களை கண்டு,
பயந்து, அவற்றை எல்லாம் வெட்ட வேண்டும் என்றும் எண்ணிக்கொண்டேன்.
இறுதியாக உள்ளே வந்து, அந்தக்குளிரிலும்
குளித்து, உணவருந்தி, சிறிதுநேரம் படித்த பின்னர் உறக்கத்திற்கு சென்றேன்.
“ எனது பயணம் முடிவுக்கு வந்தது. ஆனால் மழை பின்னர் தொடர்ந்து வந்தது..!”
ஆ.கெ.கோகிலன்
25-11-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக