ஞாபக இழப்பு..!

 


 

தகவல் தொழில் நுட்ப உலகில் நிறைய விடயங்களை அறியும் அல்லது உள்வாங்கும் எமது மூளைகள் எதிர்காலத்தில் எப்படித் தொழிற்படப்போகின்றன..? என்ற ஜயம் எனக்கு சில வருடங்களுக்கு முன்னரே வந்துவிட்டது..! அவ்வளவு தகவல்கள் இணையத்தில் இப்போது கிடைக்கின்றன..!  அதுவும்  எந்த விடயத்தையும் அறியும் ஆர்வம் இருந்தால், உங்களுக்கு அளவே இல்லாமல் தகவல்களை வாரி வழங்கும் வள்ளல்களாக பல இணைய உதவி செயற்கை நுண்ணறிவுத் தளங்கள்  தற்போது புதிது புதிதாக வந்துகொண்டிருக்கின்றன. 

சற்ஜிபிரி (ChatGPT), மைக்றோசொப்டின் கோபைலட் (Copilot), கூகுளின் ஜெமினி(Gemini), கூகுளின் பாட் (Bard) என அடுக்கிக்கொண்டே போகலாம்.

நாம் தேடும் எப்படியான தகவல்களையும் இந்த செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் வழங்கினாலும், இயல்பாய் தோன்றும் சிந்தனைகள் அதுவும் ஒரு வரையறைக்குள் வகுக்கப்படாத சிந்தனைகள் சில மனிதர்களுக்கே வரும்..! அது இயற்கையின் கொடையாகவும் இறைவனின் அருளாகவும் இருக்கலாம். அல்லது இயற்கை அவர்களுக்கு வழங்கும் எச்சரிக்கைகளாகவும் இருக்கலாம். ஆனால் அதனை முற்றாக அறிய சில காலங்களைக் கடந்து பார்த்தே சொல்லமுடியும். ஊகங்களில் எதுவும் சொல்லலாம். ஆனால் அதன் உண்மைத்தன்மையை  இப்போதே சொல்லமுடியாது.

 எனக்கு சில வருடங்களாகப் பல சிந்தனைகள் தோன்றும்..! நிறுத்தமுடியாமல் தொடரும். ஒரு கட்டத்தில், வலிந்து, நானே நிறுத்தி, வேறு ஏதாவது திசைகளில் புலன்களைச் செலுத்துவேன். இவ்வாறு தோன்றும் சிந்தனைகள் சில மணிகள் தாண்டிவிட்டால் என்ன வந்து சென்றது என்பதே ஞாபகத்தில் இருந்து போய்விடும்..! ஞாபகமறதி என்பது எனக்கு நீண்டகாலமாக இருந்தாலும் தற்போது தோன்றுகின்ற விடயங்களை ஏதாவது வழியில் ஆவணப்படுத்தி, பின்னர் அவை தொடர்பாக ஆய்வுகளையும், அதன் ஏனைய தொடர்ச்சிகளையும் அறியவேண்டும் என்ற ஆசை மட்டும் உள்ளது.

இவை அனைத்தும் எனது ஓய்விற்குப்பின்னர் செய்ய நினைக்கும் திட்டங்கள்..! ஆனால் தற்போது ஒரு விடயத்தைத்தேடும் போது, அது தொடர்பான தகவல்களை, மூளைக்குள் சிரமப்பட்டு தோண்டி எடுக்க வேண்டியிருகின்றது. அதேவேளை பல சமகால விடயப் பதிவுகள் அடுக்குகள் மாறிக் கீழ்செல்கின்றனவா..? அல்லது அழிகின்றனவா..? என்ற ஒரு ஜயமும் எழுகின்றது.

உண்மையில் அறிந்த அனைத்தையும் எமது மூளையில் பதிந்துவைத்து, தேவையானபோது, ஏதாவது வழிகளில்  அவற்றை எல்லாம் எடுக்க முடியுமாயிந்தால் மிக நல்லது என்பது மாத்திரைமன்றி அது ஒரு வரமாகவும் கருதலாம். இல்லை என்றால், கணினிகள் போன்று துணைகளஞ்சியங்களில் தகவல்களைச் சேமிப்பது போல், நாமும்  எமக்குத் தேவைப்படக்கூடிய விடயங்களை அல்லது தகவல்களைச் சேமிக்கவேண்டியிருக்கும்.

“சிவகோவசி” என்பதும் எனது மூளையின் ஒரு துணைக்களஞ்சியம் போன்றதே..! யாருக்கும் பயன்படாவிட்டாலும், எனக்காகவாவது, எனது நினைவுகளை மீட்க அது உதவும் என்ற நம்பிக்கை மட்டும் இன்றுவரை எனக்கு இருக்கின்றது..!

நினைவுகளே இல்லை என்றால் எமது வாழ்வின் அனுபவங்கள் அனைத்தும் அர்த்தமற்றதாகிவிடும்.

யாருக்கும் ஏதாவது ஒரு விடயத்தைக்கொடுக்க வேண்டும் என்றாலும், அவைதொடர்பான தகவல்கள் வேண்டும். ஆனால், நினைவு அழிவுகள் சில சமயம் எம்மைச் சங்கடத்தில் கொண்டுவந்து நிறுத்திவிடும்..!

நாமே யாரென்று புரியாமல் தவிக்கும் நிலைகூட ஏற்படலாம். அந்த சமயத்தில் கைகொடுப்பதற்கே தற்போதைய அனுபவங்கள், என்னால் ஆவணங்களாக மாற்றம் பெறுகின்றன..!

 

ஆ.கெ.கோகிலன்

02-07-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!