பாதுகாப்பு ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு..!
எமது நிறுவனத்தில் இரண்டு சேவைகளை தனியார் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கான
ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒரு தனியாரிடம்
ஏலம் மூலம் வழங்கப்பட்டள்ளது. இந்த தனியார் நிறுவனத்தின் ஏலக்கோரிக்கை அரசிற்கு இலாபமாகவும், பணியாளர்களுக்கு
பாதிப்பாகவும் அமைந்தததால், ஒப்பந்தம் மாறும்போது, பலர் சேவையைவிட்டு விலத்தினார்கள்.
வேறுவழியில்லாமல் சில ஊழியர்கள் புதிய நிறுவனத்தில் இணைந்து செயற்பட தயக்கத்துடன் சம்மதித்தார்கள்..!
நானும் அவர்களுக்கு இறுக்கமாகச் சொல்லிவிட்டேன் உங்களுடைய சம்பளப் பிரச்சனைகளை என்னுடன்
கதைக்கக்கூடாது என்றும், உங்கள் நிறுவன அல்லது கம்பனியின் தலைவருடன் கதையுங்கள் என்றும்..! அதனால் கடந்த சில மாதங்கள் என்னுடன்
அவர்களது சம்பளப்பிரச்சனைகளை அவர்கள் கதைக்கவில்லை. அதேநேரம் கம்பனியும் அவர்களுக்குரிய
சம்பளத்தை சரியான தருணத்தில் கொடுப்பதில்லை.
நேற்று, ஒரு மரணச்சடங்கிற்கு சென்றுவிட்டுவரும்போது இந்தச்சிக்கல்
எனக்குச் சொல்லப்பட்டது..! நான் அதற்கான தீர்வுகளை எட்ட செய்யக்கூடிய அனைத்து முயற்சிகளையும்
செய்தேன். எனது பணிப்பாளர் நாயகத்துடனும் கதைத்தேன். அவர்களின் கம்பனி முகாமையாளருடனும்
கதைத்தேன். நாளை எப்படியாவது சம்பளம் போடுவதாகவும் பணிக்கு போகவும் பணித்தார்கள்.
ஆனால், காலை இரவுப்பணியில் இருந்தவர்கள் எனது முகத்திற்காக பொறுமையாக
இருந்து, அதிகாலை நான் உடற்பயிற்சி செய்யும்போது என்னுடன் சேர்ந்து செய்துவிட்டு, காலை தமது சேவையை முடித்துக்கொண்டு,
என்னிடம் சகல சாவிகள், உடமைகள் என எல்லாவற்றையும் கையளித்தவிட்டு, இன்றைய நாளுக்கான
பாதுகாப்பு ஊழியர்கள் சம்பளம் போடும் வரை பணிக்கு வரமாட்டார்கள் என்று சொல்லிவிட்டுச்
சென்றார்கள்..!
ஏற்கனவே பல ஊழியர்கள் லீவு எடுத்துள்ள சூழலில், இன்று புதிய மாணவர்
சேர்க்கைகளும், பரீட்சைகளும், ஏனைய சில சேவைகளும் செய்யவேண்டி இருந்ததால், கடும் சிரமாக
இருந்தது. இருந்தாலும் கஷ்டங்கள் வரும்போது கூடவே ஒரு தைரியமும் எனக்கு வரும். அது வந்தது..! அதனடிப்படையில் சில திட்டங்களைப்போட்டு,
அனைத்து செயற்பாடுகளையும் என்னால் இயன்றவரை யாருக்கும் பாதிப்பில்லாமல் ஆற்றிவிட்டு,
இந்த விடயங்களை ஒரு ஆவணத்தில் பதிந்ததுடன் மேலதிகாரிகளுக்கும் தெரியப்படுத்திக்கொண்டேன். அத்துடன் கம்பனி தலைமைக்கும் சொல்லி, அவர்களுக்குரிய
காசோலைகளைத் தயார்படுத்தப்பணித்ததுடன், ஏனைய
கருமங்களையும் ஆற்றிவிட்டு மாலை 6.00 அளவில் படுத்துவிட்டேன். பின்னர் இரவு 7.00மணிக்கு
காலை சாவிகளைக் கையளித்த பாதுகாப்பு ஊழியர்களின் பொறுப்பதிகாரி என்னுடன் சகல விடயங்களையும்
கதைத்து, நாளை தான் வேலைக்கு வருவதாகவும், தங்களுக்கு சம்பளம் போட்டதாகவும் சொன்னார். நானும் நல்லது, இனி எந்த விடயம் என்றாலும் கடைசிவரை
பொறுக்காமல், இடையில் சொன்னால் சில தடங்கல்களைத் தவிர்க்கலாம் என்று சொல்லிவிட்டு,
எனக்காகப் பாதுகாப்புக்கடமைகளில் ஈடுபட்ட எனது அலுவலக ஊழியரையும் பார்த்து கதைத்துவிட்டு
இதை எழுதினேன்.
இயற்கை, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அனுபவத்தை எனக்குத் தருவது, மனதிற்கு
ஒரு வித ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகின்றது..!
ஆ.கெ.கோகிலன்
16-07-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக