சுத்தக்காரர்..!
இன்று முகப்புத்தகத்தில் ஒரு செய்தி படித்தேன். அதில் மகன் தந்தையிடம்
“ அப்பா குப்பைக்காரர் வந்திருக்கின்றார்
” என்றான். உடனே தந்தை, மகனே நீ அப்படிச்சொல்லக்கூடாது..! “ அவர்கள் சுத்தக்காரர்,
நாம் தான் குப்பைக்காரர்..” எங்கள் வீட்டிலுள்ள குப்பைகளை அகற்றி, எமது வீட்டையும் சுற்றியுள்ள பகுதிகளையும்
சுத்தமாக்குபவர்கள் அவர்கள். அவர்கள் குப்பைக்காரர்கள் அல்ல..! அவர்கள் சுத்தக்கார்கள்
என மகனுக்கு நல்ல அறிவுரையை வழங்கினார் தந்தை.
ஒரு நாளும் யாருடைய தொழிலையும் வைத்து அவர்களை இழிவுபடுத்திப்பேசக்கூடாது.
எல்லோரும் எமக்குத்தேவை. அதனால் தான் இறைவன் எல்லோரையும் ஒரே காற்றைக்கொண்டு இணைத்துள்ளான்.
அறிவிலித்தனத்தால் அது பற்றிப்புரியாமல் இருக்கலாம். ஆனால், ஒரு நாள் அந்த உண்மை புரியும்.
கடந்த சில நாட்களாக எமது நிறுவனத்தில் சுத்த சேவைக்கான டென்டர் வேலைகள்
நடைபெறுகின்றன. அதில் இம்முறை குறைவாகக் கோரியவர், நீண்டகாலமாக எமது நிறுவனத்தில் சேவை
செய்யவில்லை. அதற்கு பின்னால் ஏதாவது அரசியல்கள் இருக்கலாம்..! அது எனக்குத் தேவையில்லாததும்
கூட. அலுவலக ஒழுங்கு முறைகளைச் சரியாகப் பின்பற்றினால் எந்தப் பிரச்சனைகளுக்கும் பதில் கூற முடியும். இல்லை என்றால் பிரச்சனைகள் பெரிதாகி
, எல்லோர் நிம்மதிகளும் கெட்டுவிடும்.
இதைப் புரிந்துகொண்டு, பணிப்பாளர் என்ற வகையில் சில சரியான முடிவுகளை
எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டினேன். இது பலருக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
ஒரு சிலர் அதில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கலாம். என்ன செய்வது..?
சில முடிவுகளை எடுத்துத்தான் ஆகவேண்டும். இல்லை என்றால் மேலிடத்திற்கும் அரசிற்கும் பதில் கூற முடியாது.
எப்போதும் எமது ஊழியர்களின்
முகங்களைப் பார்ப்பதால், அதில் தெரியும் வாட்டம், எனது மனதிலும் கனிவையும் இரக்கத்தையும்
கொண்டுவந்தது.
முன்பு இருந்தவர்கள் தமது சுய நலன்களுக்காக நீதி நியாயங்களை மீறிச்செயற்பட்டால்,
பின்னால் வருபவர்களுக்கு, அவற்றை நிலைநாட்டுவதே பெரும் சவாலாகிவிடும்.
அதேநேரம் பிழைகளும், தவறான நடைமுறைகளும் தொடர்ந்து இருந்தால், ஒருநாளும்
அனைவரும் மகிழ்வுடன் வேலைசெய்ய முடியாது. ஒருவரது செயலின் தாக்கம் இன்னோருவர் மீது
ஏற்பட்டு, மகிழ்ச்சியையோ அல்லது வெறுப்பையோ அது கொடுக்கும். அதனால் எனது முடிவுகளை
உறுதியுடன் எடுத்துவிட்டு, சற்று மனம் குழம்பிய ஊழியரிடம் இதன் உண்மைகளையும் நன்மைகளையும்
எடுத்துக்கூறினேன். யாருக்கும் பாதகம் வராது காப்பது எனது கடமை. கவலைப்படக்கூடாது என்று
அனுப்பி வைத்தேன். இருந்தாலும் அந்த நபருக்கு
முகத்தில் கவலை அப்படியே ஒட்டிக்கொண்டு தான்
இருந்தது.
அலுவலக வேலைகள் முடித்த பிறகு சிறிது நேரம் தூக்கம் போடுவது வழமை.
இன்றும் அதனைச் செய்ய முனைய நித்திரை வரவில்லை. உடனேயே வெளிக்கிட்டு தங்கைவீட்டிற்குச்
சென்று, அவளுடன் சிறிது நேரம் கதைத்துவிட்டு, எனது அலுவலகப் பணியாளரிடமும் சென்று ஒன்றிற்கும்
கவலைப்படக்கூடாது என்று சொல்லித் தேற்றிய பின்னர், தங்கை தந்த இறைச்சிப்பார்சலுடன்
அலுவலகம் வந்து, எனது உணவை தங்கை கணவரிடம் கொடுத்துவிட்டேன்.
இரவு மென்மையான சாப்பாடு சாப்பிட நினைக்க, கடுமையான சாப்பாடு வந்து
சேருகின்றது..!
சில வேளைகளில் நல்ல சாப்பாடுகளை எதிர்பார்க்க, வரும் சாப்பாடுகள் வெறுக்க
வைக்கும்..!
என்ன பிரச்சனைகள் என்றாலும், மனம் விட்டுக்கதைத்தால், குறையும். மனதிற்குள்
வைத்திருந்து, யாருக்கும் சொல்லாமல் அடக்கினால் அவை வேறு வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
இன்று நமக்கு பாதகமான நாள் வந்தால் கவலைப்பட வேண்டாம். நாளை சாதகமான நாள் வரும். நம்பிக்கையே
வாழ்க்கை..! எல்லாம் மறையும், இந்த நேரமும் கடக்கும்..! அதனால் எப்போதும் சந்தோசமாக இருக்க முனைய வேண்டும்.
நாமும் இன்புற்று, வையகமும் இன்புற்றிருக்கத்
தொழிற்படுவதையே சத்தியமாகக்கொள்வோம்.
ஆ.கெ.கோகிலன்
26-06-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக