காவல் பணி தொடங்கல்..!

 


நேற்று எமது காவல் பணியாளர்கள் தமது கடமைக்கு வராமல் பணியைப் புறக்கணித்தார்கள்..! இன்று அதனை இடைநிறுத்தி தமது பணியை மேற்கொண்டார்கள்..! இதனால் நான் கொஞ்சம் நிம்மதியடைய  முடிந்தது.

பொதுவாகப் பல நடைமுறைகள் ஒவ்வொரு நிறுவனங்களிலும் அந்த அந்தச் சூழலுக்கு ஏற்ப பின்பற்றப்படுகின்றன..!  ஆனால் அவை சரியானதா என்ற கேள்வி எப்போதும் எழுப்ப வேண்டும். குறிப்பாகத்தவறுகள் இருந்தால் அவற்றைத் திருத்திக்கொள்ளலாம். சரியாக நடந்தால், அவ்வாறே தொடர்ந்து செல்லலாம். இங்கு சில விடயங்களில் சரியான தீர்மானங்கள் எடுக்காமல் அவரவர்கள் தமது சுய நலன்களுக்காக எடுக்கும் தீர்மானங்கள், இறுதியில் சரியான நிலைப்பாட்டில் இருப்பவருக்கே அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன..!

அரச நிறுவனங்களில் கடைப்பிடிக்கவேண்டிய ஸ்தாபன விதிக்கோவைகளை சரியாக கடைப்பிடிப்பதுடன், அங்குள்ள ஊழியர்களுக்கும் அவற்றின் தன்மைகளைப் புரியவைக்க வேண்டும்.

சிலவேளைகளில் தமது சுயநலன்களுக்காக ஊழியர்களை பயன்படுத்திய உயர் அதிகாரிகளை சரியான முறையில் கவனித்து, காலத்திற்கேற்ப இடமாற்றங்களைச் செய்து மக்களின் சேவையில் பாதிப்புக்கள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மக்களும், மக்களில் இருந்து சிலரும் சேர்ந்ததாகவே அரசு உருவாகின்றது. அந்த சிலர் தமது நலன்களை மட்டும் கருத்தில் கொண்டால், அரசு தவறாகப்போய்விடும்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்களுக்கு உரிமையுண்டு அரசின் போக்கை சரிப்படுத்துவதற்கு..!

அதற்கு இருக்கும் ஒரே ஆணை வாக்குகள். ஒரு ஜனநாயக நாட்டில் மக்களின் வாக்குகளே ஆட்சி மற்றும் அதிகாரங்களை தீர்மானிக்கின்றன. மக்கள் சரியான விதத்தில் தமது  வாக்குகளைப் பயன்படுத்தாவிட்டால், தவறான அரசுகள் உருவாகி, அவை அந்த மக்களுக்கே அச்சுறுத்தலாக மாறிவிடும்.

ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசில் அக்கறை வேண்டும். அது மாத்திரமன்றி, அரசின் சேவைகளையும், அங்கு கடமைபுரியும் பணியாளர்களின் சேவைகளையும் கவனத்தில் எடுக்க வேண்டும். தவறுகளை யார் விட்டாலும், அவற்றை எழுத்து மூலமோ அல்லது வேறுவழிகளிலோ தெரியப்படுத்தி, அவர்களைச் சரியான பாதைக்கு கொண்டுவரவேண்டும். அது தவறுமாயின், அவர்களின் செயற்பாடுகள் நாட்டுக்கே அச்சுறுத்தலாக மாறிவிடும். தேவையாயின் தண்டனைகளை வழங்கி, அரசின் மதிப்பை எப்படியாவது காத்து, மக்களுக்கான  சேவைகள், வினைத்திறனுடன் நடக்க ஆவனசெய்ய வேண்டும்.

எனது நிறுவனமும் அரசின் உரிமையுள்ள ஒரு கல்விச்சேவை வழங்கும் நிறுவனமாகும். இங்கு இரு வகையான வேலையாளர்கள் இருக்கின்றார்கள். ஒன்று, நிறுவனத் தலைவரின் கீழுள்ள வேலையாளர்கள்..! மற்றையது சேவைகள் வழங்கும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள்..! இவர்கள் அனைவரும் இணைந்து செயற்பாட்டால் தான் நிறுவனத்தின் சேவை இலக்கை அடைய முடியும். இந்த இரண்டு ஊழியர்கள் தொடர்பான புரிதல் இல்லையாயின், பல சிக்கல்கள் எழும். அவை இறுதியில் நிறுவன இலக்கைப் பாதிக்கும். அவ்வாறான சூழலில்  இருக்கும் எனது நிறுவனத்தை மீட்கும் பொறுப்பு தற்போது எனது கையிலேயே வந்து விழுந்துள்ளது..! எனது சரியான, தீர்க்கமான நடவடிக்கைகளே நிறுவன இலக்கை சுமூகமாக அடைய  உதவும். அவற்றில் ஏற்படும் தவறுகள், இறுதியில் நிறுவனத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கிவிடும்.

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார சிக்கலில், இலாப நோக்கற்ற, இலவச சேவையை மக்களுக்கு வழங்கும் நிறுவனங்கள், தமது செயற்பாடுகளை பயனுறுதிமிக்கதாக மாற்றவில்லை என்றால் அந்நிறுவனங்களை மீள கட்டமைக்கவோ அல்லது நிறுத்தவோ முடியும். அது தான் நாட்டிற்கும், அங்குள்ள மக்களுக்கும் நல்லது.

எனது நிறுவனத்தின் “கார்” நீண்ட நாட்களாகப் பயன்பாட்டில் இல்லாமல் சும்மா நிற்க, அதனை இன்னோர் நிறுவனத்திற்கு வழங்க, அந்தக்காரை நான் திருத்த ஏற்பாடு செய்ய, திரும்ப அந்தக்கார் எமக்கு வேண்டும் என்று சிலர் சொல்ல, நான் முழிக்கவேண்டியிருக்கின்றது..! இருந்தாலும் தலைமையகத்தால் முடிவு எடுத்தாயிற்று..!

நாட்டின் சொத்து, நாட்டில் எங்கும் பயன்படலாம். ஆனால் அவை  வீணடிக்கப்படாமல் இருக்க பார்க்கவேண்டும். இல்லையாயின் அரச சொத்துக்களின் விரயம் தொடரும்..! மக்களின் பொருளாதாரமும் வீழ்ந்துகொண்டே செல்லும். ஒவ்வொருவரும் அரசில் அக்கறையுடன் செயற்படவேண்டும். அப்படியிருந்தால் தான் விரயங்களைக் குறைக்க முடியும். நாட்டையும் செழிமைப்படுத்த முடியும்.

நாட்டை வளப்படுத்த, முதலில் நாமே எங்கள் வழியில் களமிறங்குவோம். ஒவ்வொருவரும்  தம்மால் இயன்றவரை முயன்றால், நாடு நிச்சயம் முன்னேறும்.

 

ஆ.கெ.கோகிலன்

18-07-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!