பவளவிழா பேச்சு

 


 

நான் பொதுவாக மேடைகளில் என்ன பேசவேண்டும் என்றாலும் எழுதித் தயார்படுத்துவது வழமை. மேடையில் இருந்து சபையினரைப்பார்த்துப் பார்த்து, இழுத்து இழுத்து பேசுவதைத் தடுக்கவே  இவ்வாறு முயற்சி செய்வேன். சிலவேளைகளில் இது சின்னபிள்ளைத் தனமாக எம்மவர்களுக்குத் தோன்றினாலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் இப்படித்தான் பேசவேண்டும் என்பதே எழுதாவிதி..! ஏனென்றால், நேரமும், சொல்ல வந்த விடயமும் மிகமுக்கியம். குறிப்பாக சபையினரின் நேரத்தை விரயப்படுத்த முடியாது. எமது ஊர்களில் சபையினரின் நேரத்தை வீணடிப்பதே கெத்து, பெருமை என்பது போல செயற்படுவார்கள். என்ன செய்ய ஒவ்வொரு இடங்களில் ஒவ்வொரு மாதிரிப் பழக்கப்பட்டுள்ளார்கள்..!  அன்மையில் நடைபெற்ற ஒரு பாடசாலையின் 75ஆவது நிறைவுதினத்தையொட்டி எனக்கு ஒரு  வாய்ப்புத் தந்தார்கள். அதற்காகத் தயார்படுத்தியதே பின்னால் வரும் பேச்சு.

 

“இந்த விழாவிற்கு வருகைதந்திருக்கும் பிரதம விருந்தினர் திரு.தி.ரவி, வலையக்கல்விப் பணிப்பாளர்,  கௌரவ விருந்தினர்கள் திரு.செ.சண்முகநாயகம், கோட்டைக்கல்விப்பணிப்பாளர், திரு.கெ.ஜெயவதனன், உதவிக்கல்விப்பணிப்பாளர், திரு.ந. பரமேஸ்வரன், அதிபர், கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் திரு. பிரபாகரன், பிராந்திய முகாமையாளர், இலங்கை மத்திய வங்கி, திரு.குமுது சமிந்த மஹாவத்தை, உதவிப் பொது முகாமையாளர், இலங்கை மத்திய வங்கி மற்றும் ஒய்வு நிலை அதிபர் திரு .த.விஜயராஜேந்திரன், இந்தப்பாடசாலையின் ஓய்வுநிலை அதிபர் மற்றும் ஏனைய ஓய்வுநிலை அதிபர்கள், அயல்பாடசாலை அதிபர்கள், இந்தப்பாடசாலையின் இந்நாள் அதிபர் மற்றும் இந்தப்பாடசாலையின் ஊழியர்கள், விழாக்குழுவினர்கள் மற்றும் பெரியோர்கள் தாய்மார்கள்  மற்றும் அன்பான மாணவச் செல்வங்கள் அனைவருக்கும்  எனது மாலை கடந்த இரவு வணக்கம்.

பலர் பேசியுள்ளார்கள்..! பலர் பேசக்காத்திருக்கின்றார்கள்..!

இடையில் நானும் சில விடயங்களை என மனதில் இருந்து தெரிவிக்க விரும்புகின்றேன்..!

கல்வி மனித நாகரீகத்தை  வளர்த்ததுடன், தற்போதைய வாழ்வியலுக்கும் காரணமாக அமைகின்றது. இந்தப்பாடசாலையின் 75 வருட சேவை என்பது போற்றுதலுக்குரியது..! இதன் சேவை இன்னும் பல நூறு ஆண்டுகள் தொடர  எனது வாழ்த்துக்கள்.

விழாக்குழுவினரால் வெளியிடப்பட்ட “அலைநாதம்” என்ற பவளமலர் இந்த பாடசாலையின் ஒரு  மைல் தடயம் என்றால் அது மிகையாகாது. இந்த மலர் தொடர்ந்து மலரவேண்டும். மரங்களால் உருவாகும் கடதாசிகளில் இந்த மலர் வராவிட்டாலும், இணையத்தில் இலத்திரனியல் வடிவத்தில் தொடரலாம்.

கல்வி மாணவர்களுக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் வழங்க வேண்டும். இலங்கை போன்ற நாடுகளில் வறுமை முற்றாக ஒழியும்வரை இலவசக்கல்வி தொடரவேண்டும். ஏழைகளின் கல்விக்கு முட்டுக்கட்டைகள் வரவிடாது பாதுகாப்பது எமது கடமையாகும்.

ஒவ்வொருவரும் தம் தமது விருப்பம், ஆற்றல் என்பவற்றிற்கு ஏற்ப தமது தனித்திறனை வளர்க்க வேண்டும். இது தான் எதிர்கால உலகம் உங்களிடம் எதிர்பார்க்கும்.  ஒவ்வொரு துறையிலும் இது வேண்டும். 

இறுதியாக, இந்தப் பாடசாலை மேன்மேலும் வளர்வதுடன், இதனைப் பயன்படுத்தி இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் கல்வியில் மேம்பட வேண்டும் எனக்கேட்டுக்கொண்டு, எனக்கு வாய்ப்புத்தந்த  தற்போதைய அதிபர்  மற்றும்  விழாக்குழுவினர் அனைவருக்கும்  நன்றி சொல்லி அமர்கின்றேன்.

நன்றி..! வணக்கம்..! ”

 என்று எல்லாம் எழுதிவிட்டு, அங்குள்ளவர்கள் நேரத்தைப்பற்றிக் கவலைப்படாமல் கதைக்கும் போது, நான் மட்டும் எழுதிவைத்து வாசிப்பது சரியாகாது எனநினைத்து, நானும் வழமையான பேச்சாளர்கள் போல் வாயில் வந்ததை, கொட்டிவிட்டு வந்தேன். பின்னர்  தான்   பதிவுசெய்த எனது பேச்சைப் பார்த்துப்புரிந்தது, எமது நிறுவனத்தில் படிப்பதற்கு ஆள்திரட்ட முற்பட்டுள்ளேன் என்பது..!


ஆ.கெ.கோகிலன்

01-07-2024

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!