வலி..!
இன்று எப்படியாவது வீட்டிற்குப்போக வேண்டும். அதேவேளை நேற்றைய சம்பவம் பல சாதாரண வேலைகளைச் சிரமமாக்கியது..!
இடக்கையில் காயம் என்றால் அடிப்படை வேலைகளே செய்ய முடியாது. ஆனால் நேற்று இரவு கட்டிய
மருந்தோடு, கைக்கு ஒரு பொலித்தீன் பையைச் சுற்றிக்கொண்டே ஒவ்வொரு வேலையையும் குளியலறையில்
செய்தேன். உள் உடுப்புக்களைத் தோய்க்கும்போது கையில் காயம் ஏற்பட்டது.
பின்னர் ஒருவாறு சமாளித்தக்கொண்டு, இரவு வாங்கிய பணிஸ்களின்
மிச்சத்தை காலை உணவாகச் சாப்பிட்டுவிட்டு வைத்திய நண்பர் சொன்ன மருந்துகளைப்போட்டுக்கொண்டு
எனது அலுவலகக் கடமைகளைச் செய்தேன். இன்று, தலைமையக முகாமைத்துவக் கூட்டம் நடந்தது.
பிந்தித்தொடங்கி, முடியாமல் நீண்டுகொண்டே சென்றது. ஏறக்குறைய மதியம் 12.45 வரை அதில்
கலந்துவிட்டு, பயணத்தைத் தொடங்கினேன். வழமைபோல் மதியம் சாப்பிடாமல், முன்னாலுள்ள கடையில்
பொல்ரொட்டிகளை வாங்கிக்கொண்டு, பஸ்ஸில் புறப்பட்டேன். இன்று பஸ்ஸில் ஏறிக்கொஞ்ச நேரத்தில்
இருக்க சீற் கிடைத்தது..! இருந்தாலும் பயணம் கஷ்டமாக இருந்தது. கைவிரலில் பண்டேஜ் கட்டியிருந்தாலும்,
கட்டு தாங்கப்படுவதால் அதில் இருந்து இரத்தம் கசிந்துகொண்டே இருந்தது. ஒருவாறு வலியைச் சமாளித்து, கசிவையும் மற்றவர்களுக்கு
இயன்றவரை காட்டாது மறைத்துப் பொறுமையாக இருந்தேன். வழமையாகப் பல இடங்களில் நின்று பயணிக்கும்
நான் இன்று தொடர்ந்து இருந்துவந்தேன். அதனால் பின்பகுதிகளில் வலியிருந்தது. எல்லாவற்றையும்
சமாளித்து ஒருவாறு வீட்டிற்கு வரும்போது ஒருவரையும் காணவில்லை. பிள்ளைகள் வெளியே போய்
இருந்தார்கள். மனைவியும் அடிவளவில் மரங்களுக்கு நீர் விட்டுக்கொண்டிருந்தார். எனது
காயத்தை நேற்றில் இருந்து இன்னும் சொல்லவில்லை. தேவையில்லாமல் அவர்களைக் கவலைப்படுத்த
விரும்பவில்லை. இன்று வீட்டிற்கு வருவதால், எப்படியும் தெரியவரும். அதனால் முற்கூட்டியே
நடந்ததைச் சொன்னேன். பின்னர் மனைவி, பிள்ளைகள் உதவியுடன் மருந்துகட்டி, இரவு உணவையையும்
முடித்து, ஏனைய குளிசைகளையும் வாய்க்குள் போட்டுவிட்டு, ஒரு படத்தையும் அந்த நேரத்தில்
பார்த்து முடித்துவிட்டு, படுக்கத் தயாராகினேன்.
அசாதரண நிலையில், வழமையான விடயங்களைச் செய்யும்போது, அனைத்தும்
புதுமையாகத் தோன்றுகின்றன..!
ஆ.கெ.கோகிலன்
26-07-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக