சிங்கப்பூர் சலூன்..!
ஆர்.ஜே.பாலாஜியின் படங்கள் என்றால் அதில் நிறையக்கருத்துக்கள்
இருக்கும். அதை நிரூபிக்கும் வகையில் இந்தப்படமும் இருக்கின்றது..!
பாடசாலையில் படிக்கும்
போதே சுன்னத் மற்றும் மொட்டை போட்டதற்காக வெறுக்கும் ஒருவர், பின்னர் அவர் செய்யும்
வேலைகளைப்பார்த்து மயங்கி, அவர் பின்னே சென்று, சலூன் வேலையைப் பழகி, யாரும் குறை சொல்லக்கூடாது
என்பதற்காக பொறியியலும் படித்து, ஆனால் வேலைக்கு சலூன் நடத்துவதே..! என்ற கதைக்களமே
புதுசு.
சாதிகளால் வகுக்கப்பட்ட தொழில்கள், தற்போது விருப்பத்தின்
அடிப்படையில் அமைந்தால், இன்னும் சிறப்பாகவும், உலக அளவிலும் செய்து சாதிக்க முடியும்
என்பதைக் காட்ட முயற்சித்துள்ளார்கள்..!
இனிமேல் காலத்தில் ஒரு தொழிலைச் செய்யும் திறனே வெற்றியைக்கொடுக்கும்.
அடிப்படைக்கல்வி, ஆரம்பக்கல்வி, இரண்டாம் நிலைக்கல்வி, மூன்றாம் நிலைக்கல்வி எனக்கல்வி
எல்லோருக்கும் தேவையானது என்று கருதுவது மடமைத்தனம். தற்போது பல இடங்களில் வீட்டுக்கல்விகளே வந்துகொண்டிருக்கின்றன..!
கோவிலில் பூஜை செய்ய பிரமாணர்கள் தேவையில்லை என்பதை நிரூபிக்கவும்,
சைவ உணவை உண்டு, சமய ஆசாரங்களை முறையாகக் கடைப்பிடித்து, அதற்குரிய அறிவை பெற விருப்பமுள்ள
எவரும் பூஜைசெய்ய முடியுமாயின், அது இன்னும் ஆரோக்கியமாக இருப்பதுடன் உலகத்தின் போக்கும்
அங்கு போய்தான் நிற்கும்..!
நிறைய நல்ல விடயங்களை இந்தப்படம் கதைத்துள்ளது..! வாழ்க்கையே
முடிக்கலாம் என்று இருக்க, வாழ அர்த்தம் கொடுக்கும் காட்சிகள் சிறப்பு..! அரவிந்த சாமி,
சாமி மாதிரியே வந்து மறைந்தார்..!
இயற்கையை அழித்து எவரும் நிம்மதியாக வாழமுடியாது. நாம் வீடுகளைக்கட்ட எத்தனை உயிர்களை அழிக்கின்றோம். அசையும் உயிர்கள் மாத்திரமன்றி, அசையா உயிர்களான
மரங்களையும் மரிக்க வைக்கின்றோம்..! அதன் பயனையே தற்போது காலநிலை மாற்றங்கள் என்ற பெயரில்
அனுபவிக்கின்றோம்..!
மனிதன், தவறுகளை அறியாமையால் செய்தாலும், அதனைத் தவிர்க்க
அல்லது தீர்க்க வழிகளும் உண்டு என்பதை கிளிகளுக்கு தண்ணீர், உணவு வைப்பதன் ஊடாக இயற்கையின்
அன்பை, படத்தின் நாயகன் சம்பாதிப்பதாகக் காட்சிகள்
வருகின்றது. எனக்குக் கண்களில் நீர் வருவதைத் தடுக்க முடியவில்லை. சலூன் திறக்க றிபன் வெட்ட முடியாவிட்டாலும், சலூனுக்குள்
ஒரு பிரசவம் நடைபெற்று அந்தக்குழந்தையின் தொப்பிள்
கொடியை அறுக்க, சலூன் கத்தரிக்கோலைப் பயன்படுத்தியது மிகவும் நெஞ்சைத் தொட்டது..!
எந்தத்தொழிலையும் பிரமாண்டமாக உலகே வியந்து பார்க்கும் வண்ணம்
செய்ய முடியும் என்பதையும், அதற்கு அத்தொழில் சார்பான விருப்பமும், திறனும் முக்கியம்
என்பதுடன் விடாமுயற்சியும், மக்களின் அன்பும் இயற்கையின் ஆசியும் அவசியம் என்பதைத்
தெளிவாகக் காட்டிய இயக்குனர் கோகுலுக்குப் பாராட்டுக்கள்.
வழமைபோல் வில்லனைச் சண்டைபோட வைக்காமல், யதார்த்தத்தை உணர்த்தி,
“இன்று நாம், நேற்று யாரோ, நாளையும் யோரோ..” என்ற நிலையினை உணர்ந்து, வில்லன் விலகியது சிறப்பு..! ரசிக்கவும் வைத்தது..!
நீண்ட நாட்களாக இந்தப்படத்தைப் பார்க்க நினைத்து, இன்று தான்
நிறைவேறியது. தொழில்நுட்பங்கள், நடிப்பு அனைத்தும் தரமாக இருந்தன.
கணினி வரைபியலையும் பொருத்தமாகப் பயன்படுத்தியது சிறப்பு..!
ஆகமொத்தம் எல்லோரும் பார்க்க வேண்டிய ஒரு படம்.
ஆ.கெ.கோகிலன்
20-07-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக