நட்பின் துரோகம்..!

 

 


பொதுவாக கற்பு என்பதை எம்மவர்கள் பெண்களிடம் மட்டுமே எதிர்பார்க்கின்றார்கள். அது தப்பு. அதனை ஆண்களிடமும் எதிர்பார்க்க வேண்டும். அது மாத்திரமன்றி, கணவன் -மனைவி பந்ததிற்கும் கற்பு உண்டு..! நட்பிற்கும் கற்புண்டு..! காதலிற்கும் கற்பு உண்டு..!

இங்கு நான் சொல்லும் கற்பு என்பது ஒருவரை ஒருவர் மதிப்பதுடன், இவ்வாறான தொடர்பிலுள்ள ஒருவர் இன்னொருவரைக் கேவலப்படுத்தினால் அல்லது அந்த தொடர்பில் உண்மையில்லாமல் இருந்தால் அங்கே கற்பு இருக்காது.

என்னைப்பொறுத்தவரை கற்பு என்பது உடல் சார்ந்த ஒரு விடயம் கிடையாது. மனமும், அறிவும், ஒழுக்கமும், உண்மையும் சார்ந்த விடயம்.

ஒருவர் நம்பிக்கையை இன்னொருவர் கெடுத்தால் அங்கே கற்பு இருக்காது. இது தான் நான் கற்பு என்பதற்கு எடுத்துக்கொள்ளும் விளக்கம்.

எனது நிறுவனத்தில் எத்தனையோ மாணவர்கள் படித்து நல்ல நிலைமைகளில் இருக்கின்றார்கள். இவர்களில் எத்தனையோ விதமான நட்புக்கள், காதல்கள், துரோகங்கள், பிரிவுகள் போன்றவற்றை பார்த்தும், வியந்தும் மற்றும் வெறுத்தும் கடந்து வந்துள்ளேன்..!

காலங்கள் மாறிவருகின்ற வேளை பிள்ளைகளும் மாறி வருகின்றார்கள்..! தற்போது காதலிப்பது, ஒருவருடன், நட்பைப் பேணுவது, இன்னொருவரை, சில வேளைகளில் திருமணம் முடிப்பது, இவ்வாறான  இரண்டையும் தாண்டி வேறோருவருடன் வாழ்வது எனப்போவதைப் பார்க்க வேடிக்கையாகவும், விநோதமாகவும், இவர்களின் எதிர்காலம் எப்படியிருக்கப்போகின்றது என்ற கவலையும் தொற்றிக்கொள்கின்றது..!

 X பரம்பரையைச் சேர்ந்த எம்மைப்போன்றவர்களுக்கு Z பரம்பரையைச் சேர்ந்த தற்போதைய மாணவர்களின் போக்கை விளங்கிக்கொள்வது சற்றுக்கடினம்..! கணினியிலும், கைபேசிகளிலும், சமூகவலைத்தளங்களிலும் தவளும் இவர்களின் வாழ்வியல் இன்னும் பல பாடங்களை எமக்கு உணர்த்தப்போகின்றன..!

இன்று, இரு வேறுபட்ட பாலின மற்றும் வேறுபட்ட மதத்தினரது நட்பு கேள்விக்கூறியாக்கப்பட்டுள்ளது..!

நட்புக்கு நான் ஆரம்பத்தில் சொன்னதுபோல் கற்பு என்ற ஒன்று உண்டு. குறிப்பாக அதற்கு ஒரு எல்லை உண்டு. அதனை எந்தக்காரணம் கொண்டும்  மீறக்கூடாது. அப்படி மீறினால், விபரீதமான சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். அவ்வாறான சிக்கல்களில் மாட்டிய நபர்களிற்கு என்ன தண்டனை வழங்குவது..?

குடும்பத்தில் ஒற்றுமையாக வாழ முடியாதவர்களை தண்டிப்பதா..? அல்லது பிரித்து வைப்பதா..? அல்லது அறிவுரைகள் கூறி எப்படியாவது இணைந்து போக வைப்பதா..? எது சரி என்பதை யாராலும் திட்டவட்டமாகக்கூறமுடியாது.

சூழல்களையும் சாட்சிகளையும், சான்றுகளையும் வைத்தே தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன..!

அதேபோல் நட்புகளுக்குள் துரோகம் நடந்தால் என்ன செய்வது..? அதுவும் இருபாலின நட்புக்குள் துரோகம் நடந்தால், அந்த நட்பை முறிப்பதே அவர்களுக்கு வழங்கும் பெரும் தண்டனை..!

அந்த நட்பில் கற்பு இல்லை என்றால் நட்பில் இருந்த இருவரின் எதிர்காலமும் கேள்விக்கூறியாகும். அதுமாத்திரமன்றி,  அவ்வாறான நட்புக்களை தொடர அனுமதித்தவர்களும் தலைகுனிவுகளைச்  சந்திக்கவேண்டிவரும். போதாததற்கு இப்படியான நட்புக்களைப் பார்த்து, வருங்கால எமது பிள்ளைகளும் தவறான வழிகளில் பயணிக்கத்தொடங்கும். பிழைகளைக் கண்டால், அறிவு ரீதியாக, உணர்வு ரீதியாக அவற்றைத் திருத்த முற்படவேண்டும்.

அது தான்  நாம் செய்யும்  எமது பிள்ளைகளுக்கான எதிர்கால வாழ்க்கைக்குரிய தயார்படுத்தலாகும்..!

என்னைப்பொறுத்தவரை தண்டனைகள் காலத்திற்கு ஏற்ப மாற்றம் பெறவேண்டும். ஒருவன் ஒரு குற்றத்தைச் செய்தால் அதனால் ஏற்படும் பாதகத்தை போக்க, அவனையே பயன்படுத்த வேண்டும். மாறாக அவனுக்காக சிறையும், உணவும், அரச சேவையாளர்களும் வீண் விரயப்படுத்தக்கூடாது..!

உதாரணத்திற்கு ஒருவன், ஆத்திரத்தில் கொலை ஒன்றைச் செய்துவிட்டான் என்று வைத்துக்கொள்வோம். அதற்குப் பதிலாக அவனைக்கொல்வதால் அவனும் திருந்த வாய்ப்பில்லை.  பாதிக்கப்பட்டவர்களுக்கும் எந்தப்பயனும் இல்லை. இந்த இருசாராரையும் வைத்து பிழைப்பு நடத்துபவர்களே வாழ்வார்கள்..! மற்றோர் அவர்களைப் பார்த்துப் பார்த்து எங்கிச் சாவார்கள்..!

பதிலாக கொலைசெய்தவன், கொல்லப்பட்டவனின் சுமையையும் தன்சுமையோடு தூக்கிச் சுமக்க வைக்க வேண்டும்..! அதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருந்தாலும், குறைந்தபட்சம் பொருளாதாரச் சுமைகளை  ஏனும் அவனே தாங்கவேண்டும்.

இன்று, எனது நிறுவனத்தில் நிகழ்ந்த  ஒரு பிரச்சனைக்கு சிலர், அந்த இருவரையும் இடைவிலக்க வேண்டும் என்றார்கள்..! இன்னும் சிலர் அதில் குற்றம் செய்தவரை மட்டும் இடைவிலக்கச்சொன்னார்கள்..!  இந்த இரண்டையும் நான் செய்யாமல், நட்பிற்கு துரோகம் செய்த இவர்கள் இனி தொடர்ந்து, எனக்கு முன்னால் நட்பாக இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. அப்படியிருந்தால் மேலும் விசாரணைகள்  குடும்பத்தினரையும் உள்ளிழுத்துத் தொடரும்..!

இதனால் அவர்களின் படிப்பும் பாழாகும்..! குடும்பங்களும் தலைகுனிவைச் சந்திக்கும். ஆகவே நட்பிற்கு துரோகம் செய்த இவர்கள், இனி நட்பாக எமது நிறுவனத்தில் எங்கும் உலாவ முடியாது. அதனை நான் இங்கு இருக்கும் வரை அனுமதிக்க மாட்டேன். மாறாக அவர்கள் தமது கடமைகளில் கவனமாக இருந்து, அவர்களது குடும்பச் சுமைகளைத் தாங்கி, அவர்களது பெற்றோருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதையே நான் விரும்புகின்றேன்.  அதற்கான முழு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுகின்றேன்.  

அறியாமையால் நடந்த தவறுகளை மன்னிக்கலாம்.  அறிவோடும் நோக்கத்தோடும்  செய்யும் தவறுகளை மன்னிக்க முடியாது.

 


ஆ.கெ.கோகிலன்

09-07-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!