பொய் கூறல்..!

 

 


நான் அண்மைய காலங்களில் பொய் சொல்லுவதைத் தவிர்த்து வந்தேன். என்னால் இயன்றவரை அவ்வாறே தொடர்ந்து இருப்பதற்காக முயன்று வந்தேன். சில சமயம், ஏதாவது சிக்கலான சூழல் வரும்போது, ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு பேசாமல் போயிருக்கலாம் எனத்தோன்றும். இருந்தாலும் எவ்வாறு அந்தப்பொய்யை சொல்லாது விடலாம் என யோசிப்பேன்..!

இன்று எனது நிறுவனத்திற்கு முன்னாலுள்ள ஒரு பிரபல வியாபாரி என்னிடம் ஒரு உதவி கேட்டார். “நான் என்ன..?” என்று கேட்க, தான் ஒரு லோன் எடுக்கவேண்டும். அதற்கு ஒருவர் சைன் பண்ண வேண்டும்.  “நீங்கள் செய்வீர்களா..?” என்றார்..

ஏறக்குறைய 15 வருடங்களுக்கு முன்னர், இவ்வாறான சூழ்நிலையில் எமது ஊழியர் ஒருவருக்கு லோன் எடுக்க கையெழுத்துப்போட்டேன். இறுதியில் அவர் செலுத்தும்வரை வங்கி எனக்கு கடிதங்கள் மேல் கடிதங்கள் போட்டு எரிச்சலூட்டின..!

அந்த நபரை எப்படியாவது அந்த லோனைக்கட்டி முடிக்கச்செய்து, அதற்கு கொஞ்சப்பணவுதவியும் செய்து, அதனைத் திரும்பப்பெற பல மாதங்கள் இழுத்தடித்து, கடைசியில், அவரை வைத்து கூலியாக சில வேலைகளைச்செய்து, அந்தப்பணத்தைப்பெற்று முடித்தேன்.

இந்த அனுபவத்திற்குப் பிறகு திருமலையில் என்னிடம் யாரும் லோன் கேட்க விடுவதும் இல்லை. கொடுப்பதும் இல்லை. நானும் யாரையும் பயன்படுத்தி, லோன் எடுக்கவுமில்லை.

ஆனால் யாழில் எனது காருக்கான லோனில், ஒரு வங்கி முகாமையாளர் உதவினார்..! அதேபோல் அவருக்கும் நான் உதவினேன்.

சில நாட்கள் மட்டும் எனது நிறுவனத்திற்கு முன்னாலுள்ள அந்தக்கடைக்குப் போய் சாப்பிட்டதை வைத்துக்கொண்டு, ஒருவர் என்னிடம் லோனுக்கு கையெழுத்துக்கேட்பது ஆச்சரியமாக இருக்கின்றது. நான் நினைக்கின்றேன், என்னை ஒரு அப்பாவி போல் பார்க்கின்றார் போலும்..! நான் எப்போதும் அரிச்சந்திரன் போல் இருப்பேன் என்றும் நம்புகின்றார் போலும்..! அதனால் தான் எந்தக்கொடுக்கல் வாங்கலும் இல்லாமல் இருக்கும் என்னைத் தனது வலையில் விழுத்த முனைந்தார் போலும்..!

எனக்கு, ஒரு ஆளைப்பார்த்தாலே புரியும். இவரோடு எப்படியான உறவுகள் வைக்கவேண்டும் என்பது..!  எனக்கு நம்பிக்கையான, மனிதர்களை ஒருபோதும் என்னால் ஏமாற்ற முடியாது. அதேவேளை எனக்குத் துரோகம் செய்யும் மனிதர்களை வேண்டும் என்றால் மன்னித்து ஒதுக்கியிருப்பேன். ஆனால் ஒரு நாளும் அவர்களை எனக்குக் கிட்ட அணுக விடமாட்டேன். அப்படிப்பட்ட மனிதர்களுக்கு நான் உண்மையாக இருப்பேன் என்றும் சொல்லமுடியாது. இன்றும் அவ்வாறே நடந்தது..!

நல்லவனுக்கு மிக நல்லவன். கெட்டவனை விட்டு விலத்திவிடுவேன், தவறினால், மிகக்கெட்டவனாக மாறத்தயங்கவும்மாட்டேன். இது தான் எனக்குள் இருக்கும் விசித்திரக் குணம்.

நல்லவர்களோடு பழகுவதாலும், கெட்டவர்களை விட்டு விலத்துவதாலும் என்னால் நிம்மதியாக இருக்க முடிகின்றது.  அந்த நல்லவர்களும் பல முறைகளில் என்னை வழிப்படுத்தியுள்ளார்கள். நான் நல்லவன் என்றால் அதற்கு அவர்களே காரணம். அப்படிப்பட்ட நல்லவர்கள் என்னைச்சுற்றி இருக்கும் வரை நானும் மிக நல்லவனாகவே இருப்பேன்.

இவற்றில் மாற்றங்கள் வந்தால், என்னிலும் மாற்றங்கள் வரலாம்.

 

ஆ.கெ.கோகிலன்

11-07-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!