மனித எதிர்பார்ப்பு..!

 


பெண் குழந்தைகைப் பெற்ற பெற்றோரைப் பார்த்து சமூகம் சொல்லும் ஒரு கருத்து, வாரிசு இல்லை என்பதும், இறந்தால் கொள்ளி போட ஒரு ஆண் இல்லை என்பதும்..!

இந்த வார்த்தைகளை, எனக்கும் கேட்கும்போது மனம் வலிக்கும். இந்தப்பூமியில் யாரும் நினைத்த மாதிரி வாழ்க்கை அமையும் என்று யாராலும் அடித்துக்கூற முடியாது. நாம் என்ன தான் முயன்றாலும் நடக்க வேண்டியது தான் நடக்கும். ஒரு சின்னக் குறைபாடு போதும், ஒரு குடும்பத்தின் நிம்மதியைக் குலைக்க..!

நான் எனது தந்தைக்கு கொள்ளி வைக்க முடியவில்லை..! நாம் பிறந்த போது, 3 ஆண்களும் 1 பெண்ணும் என இருந்தபோது, பலரும்  சொன்னார்கள் அவர்களுக்கு என்ன..? ஆண்கள் இருக்கின்றார்கள் என்று..! ஆனால் கடைசியில் முக்கியமான கட்டங்களில் நாம் ஒன்றாக இருக்க முடியவில்லை. அம்மாவும் தங்கையுமே கஷ்டப்பட்டார்கள்..! அப்பா இறந்த போது, நான் கொழும்பில் இருந்தாலும் அந்நேரம் தலதா மாளிகைக்குண்டு வெடிப்பு நடந்ததால் விமானத்திற்கான கிளியரன்ஸ் (Clearance) தரமுடியாது என்றும் இரண்டு கிழமைகளுக்கு பிறகு, ஏதோ இறைவன் புண்ணியத்தால் வந்தது..! ஆண் பிள்ளைகள் இருந்தும், ஒரு ஆண் பிள்ளையால் கூடக்கொள்ளி வைக்க முடியவில்லை. இது தான் வாழ்க்கை..!

இருக்கும் வசதி வாய்ப்புகளை வைத்துக்கொண்டு சமூகத்தின் பார்வை வேறாக இருந்தாலும், உண்மையான நிலை, அவரவர்களுக்குத் தான் தெரியும்.

நாம் நினைப்பதும், அனுபவங்களூடாக கற்பதும், நிஜமாக வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால் நம்பிக்கை ஒன்று உண்டு.. அது, நாம் நல்ல நோக்கத்திற்காக கடின முயற்சியுடன் செயற்பட்டால்,  அதனை நிறைவேற்ற இந்தப்பிரபஞ்சம் உதவும் என்று சில அறிஞர்கள் சொல்கின்றார்கள்..! நானும் அப்படித்தான் நினைக்கின்றேன். ஒருகாலத்தில் படிக்க முடியுமா என்று நினைத்த நான், சூழலாலும், சந்தர்ப்பங்களாலும் வழி நடாத்தி, இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்திருப்பதற்குரிய காரணம், நான் வழமையாகச் சொல்வதுபோல், இயற்கையாய்  எங்கும் வியாபித்து இருக்கும் அந்தப் பிரபஞ்ச சக்தியைத் தான்..!

ஆணே, பெண்ணோ, இரண்டும் கலந்த கலவையோ எல்லாவற்றையும் தருவதும், எடுப்பதும் இயற்கையே..! எதற்காக இயற்கை ஒரு குழந்தையைத் தந்ததோ, அந்த நோக்கத்தை அந்தக்குழந்தை நிறைவேற்ற, அதற்குத் தேவையான அனைத்தையும் வழங்கி, அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதே இயற்கையின் கடமை..! நாம் சாதாரண இயற்கையின் கருவியே..! எம்மைப் பயன்படுத்துவது அந்த சக்தியே..!

என்ன..? என்னால்  நடக்க வேண்டுமோ அதனை நோக்கியே என்னை அந்தப்பிரபஞ்ச சக்தி நகர்த்தும்..! மரணம் வரை ஆச்சரியங்கள் மட்டும் நிச்சயம். அதில் துன்பங்களும், இன்பங்களும் கலந்து, மாறி மாறி இரவு பகல் போல் வந்து போகும்..! இப்படித்தான் அனைவருக்கும் இருக்கும்.

 

ஆ.கெ.கோகிலன்

28-07-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!