முடிவு வந்தது..!

 


என்னைப்பொறுத்தவரை நான் முயற்சியை மட்டும் கொடுக்க விரும்புவேன். பலனைப்பற்றி அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. என்னால் இயன்ற முயற்சியை கொடுக்க, எந்தக்கஷ்டம் வந்தாலும், எந்த நட்டம் வந்தாலும் தவறுவது இல்லை. சில சமயம், அந்த முயற்சிக்கான பலனை அறுவடை செய்தீர்களா என என்னை வினாவினால், அதற்கான பதிலை நம்பிக்கையுடன் கூறமுடியாது..! நான் நல்லவன் என்பதை மாத்திரமே சொல்ல முடியும். எனக்கான முடிவுகளைத் தருபவர்கள் அப்படியானவர்களாக இருக்க வேண்டும் என்று அசைப்படலாமே தவிர உண்மையாக எப்படியிருக்கின்றார்களோ அவர்களே அறிவர். அல்லது இறைவனே அறிவார்..!

 யாழில் இருந்து இடமாற்றம் பெற, நான் கேட்ட கோரிக்கையின் தீர்ப்பு இன்று 185ஆவது கல்விசார் மத்திய கூட்டத்தில் வெளிவந்தது..!

அந்த முடிவு என்னைக் கவலைப்படுத்தவில்லை. மாறாக சந்தோசப்படுத்தவும் இல்லை. இறைவனின் விருப்பம் இப்படியாக இருக்கின்றது என்பதை மட்டும் உணரவைத்தது..! இயற்கையும் அதற்கு அனுகூலமாக இருப்பது புரிந்தது..!

இருந்தாலும் நேர்மைக்கும், உண்மைக்கும் ஏன் மதிப்பு குறைகின்றது..? என்ற கேள்வி மட்டும் ஏழாமல் இல்லை.  ஒரு காரியம் நடக்கின்றது என்றால் அதற்குப் பல காரணங்கள் இருக்கும். நான் என்னை மட்டும் வைத்துக்கொண்டு, சில கருத்துக்களைக் கூறலாம். முடிவு எடுப்பவர் இன்னோர் வகையில் தனது நியாயப்பாட்டை விளக்கலாம். இந்த முரண்பாடு தொடர்ந்துகொண்டே தான் இருக்கப்போகின்றது.

இதனைத் தான் அன்றே தர்மம் மற்றும் அதர்மம் என்று பிரித்து வைத்து, மகாபாரதம், இராமாயணம் போல பல  கதைகளைக்கூறி எம்மை பக்குவப்படுத்தியுள்ளார்கள். எது எப்படியோ நீதி இறுதியில் வென்றே ஆகவேண்டும். அந்த இறுதி வரும்வரை   அநீதி ஆட்டம் போடுவதைத் தவிர்க்க முடியாது. பொறுமையுடன் பார்த்து, சகித்துக் கடந்துபோய்விட வேண்டும்.

இன்றைய காலத்தில் பெரும்பாண்மையானவர்கள் அநீதியின் பக்கம் தெரிந்தோ தெரியாமலோ போவதற்கு காரணம், அதன் வாழ்க்கைக்காலம் நீதிக்கான வாழ்க்கைக்காலத்தை விட கூடவோ என சிந்திக்க வைக்கின்றது.

நேர்மையாக இருந்து, நீண்டகாலம் கஷ்டப்பட்டு, இறுதிக்காலத்தில் நிம்மதியாக இருந்து மரணிக்கும் வாழ்க்கைக்கும்..!

நேர்மையற்று இருந்தாலும், அநீதிக்குத் துணைபோனாலும் வசதியாக, கெத்தாக வாழ்ந்து, இறுதிக்காலம் கஷ்டத்தில் கழிந்தாலும்,  இடைப்பட்ட வாழும் காலத்தில் எல்லாவற்றையும் அனுபவித்து வாழ்ந்துவிடுவது பயனானது எனக்கருதுவதும் ஒரு முக்கிய காரணமாகும்..!

“உண்மை” இறுதியின் வென்றால் என்ன..?  “பொய்” நீண்ட காலம் வாழ்ந்தால் என்ன..? எல்லாம் அடிப்படையில் அறிவிலுள்ள கோளாறுகளே  காரணம் என்றால் யாராலும் மறுக்க முடியாது. நடப்பது நடந்தே ஆகும். புத்திசாலியும் மொக்கன் ஆவான்..! மூடனும் வெற்றியை நுகர்வான்..!

 

ஆ.கெ.கோகிலன்

22-07-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!