ரசவாதி..!

 

 


இன்று அரைநேரத்தோடு ஊருக்கு வெளிக்கிட்டதால் சற்று நேரம் அதிகமாக இருந்தது. பல நாட்களாகப் பார்க்க நினைத்த படங்களில் இந்தப்படமும்  ஒன்று. அதனால் பார்த்தேன். படம் என்னை முழுமையாக இழுத்துக்கொண்டது..!

எனக்கு ஒரு படம் ஏதோவோர் விதத்தில் தொடர்ந்து பார்க்க வைத்தால், அந்தப்படம் கண்டிப்பாக விமர்சன ரீதியாக நல்ல படமாக அமையும். சில நேரங்களில் எமது மக்களின் பிடித்த நடிகர்கள் இல்லை என்பதால் வர்த்தக ரீதியில் தோல்வியடைந்திருக்கலாம்.

இந்தப்படத்தின் கதையே சற்று, உளவியலை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தை, சிறுவயதில் கானும் சூழல் அதனை ஒரு வித பிறழ்வான மனநிலைகொண்ட மனிதனாகவும், பொலீஸ்  அதிகாரியாகவும் வரத்தூண்டுகின்றது. அதேவேளை அவனது மனநிலையில் ஏற்படும் தாக்கம் அவனை மிருகமாக மாற்றுகின்றது. யாரும் சந்தோசமாக இருப்பது அவனுக்குப் பிடிக்காமல் போகின்றது.  இப்படியான நிலையில் அந்த மிருகத்திடம் மாட்டும், நாயகன்,  கைதி பட முக்கிய வில்லன் நடிகர் அர்ஜூன் தாஸ், அவனிடம் இருந்து விடுபட்டு வரப்போராடுவது தான் கதை மையம். அவர் சிறப்பாக நடித்துள்ளார். அவரது தனித்துவமான குரல் தெளிவில்லாமல் இருப்பது எனக்கு குறையாகப் பட்டது..! இரு நாயகிகள். இருவரும் நன்றாக நடித்துள்ளார்கள். தன்யா ரவிச்சந்திரன் படம் முழுக்க வருகின்றார். ரேஷ்மா வெங்கடேஷ் இடையில் வந்து ஹீரோவைக்காதலித்து, பின்னர் வில்லனை மணந்து, இறுதியாக தூக்கிட்டு தற்கொலை செய்யத்தூண்டிய வில்லனை,  கோமா நிலைக்கு கொண்டுபோய்விட காரணமானார்.  படத்தின் கதைப்படி ஹீரோவிற்குப் பல கலைகள் தெரியும். அதில் வர்மமும் ஒன்று..! ஒருவனை சாகவைக்கவும் முடியும். சாக இருப்பவரை பிழைக்க வைக்கவும் முடியும் என்று சொல்லும் ஹீரோ, தனது தாத்தா இறப்பைத் தடுக்க முடியாது போவது, எனக்கு கேள்வியை ஏற்படுத்துகின்றது..! ஏன் தாத்தாவை பிழைக்க வைத்திருக்கலாமே என்று..?

சரி படம் என்பதால் மன்னித்துவிடலாம். இவ்வாறு சில காட்சிகள் கேள்வியை ஏற்படுத்தினாலும், பல காட்சிகள் நன்றாக இருந்தன..! மலையாள வில்லன் நடிகர் சுஜித் சங்கர் மிகச்சிறப்பாக வாழ்ந்துள்ளார்..! அவரது கண்கள், முகம், தசைநார்கள் எல்லாம் நன்றாக நடிக்கின்றன..!

தமனின் இசை  சிறப்பு..! ஏனைய தொழில்நுட்பங்களும் நன்றாக இருந்தன. இயக்குனர் சாந்தகுமாரின் நல்ல படங்களின் வரிசையில் இதுவும் ஒன்று.

 


ஆ.கெ.கோகிலன்

19-07-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!