எமது நிறுவனக் கார் ..!
நீண்டகாலமாகத் திருகோணமலை உயர்தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட
கார் பாவனையில் இருக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் பணிப்பாளர்கள் தமக்கான கார்களை
தனியாக வைத்திருப்பதுடன், அதற்கான சலுகைகளையும் பெற்றுக்கொள்வதே..!
இருந்த போதிலும், அந்தக்கார் அலுவலக பாவனைகளுக்குப் பயன்படுத்த முடியும்.
அதற்கும் நிரந்தர சாரதி இல்லாத காரணத்தால், சாத்தியப்படாமல் செல்ல, பல மாதங்களாக அந்தக்கார்
அழகுக்கு மட்டும் எமது வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது..! நான் வந்து 6 மாதத்திற்கு
மேலாக அதனைத் திருத்த முயன்றும், அதற்கான மேலிட அனுமதிகள் கிடைக்காத காரணத்தால், அதனைச் செய்யமுடியவில்லை.
சும்மா ஒரு அரச சொத்தைப் பயன்படுத்தாமல் வீணடிப்பது என்பதும் மக்களுக்குச்
செய்யும் துரோகம்..! மக்கள் பணம் விரயமாவதாகவே நான் கருதுவேன். எனது நிறுவன விடயங்கள்
தொடர்பான கூட்டத்தில், அந்தக்காரை எடுத்து, வேறு தேவைப்படும் ஒரு நிறுவனத்திற்கு வழங்கும்படி
கோரியிருந்தேன். கடந்த சில வருடங்களுக்கு முன்னரே
முன்னைநாள் பணிப்பாளரும் இதே கோரிக்கையை அப்போதே முன்வைத்திருந்தார். என்ன காரணமோ தெரியவில்லை..!
அந்தக்கார் பயன்படுத்தவும் இல்லை. இன்னோர் நிறுவனத்திற்கு கொடுக்கப்படவும் இல்லை.
இம்முறை நான் பரீட்சைப்பணிப்பாளர் நேர்முகத்தேர்வுக்குச் செல்லும்போது
இந்த விடயத்தை உதவிப்பணிப்பாளர் நாயகத்துடன் கதைத்தேன். அவரும் உடனேயே அதனைத் திருத்தி
வைக்குமாறு கேட்டுக்கொண்டார். நாம் மூலதனச்செலவுகள் செய்யமுடியாது என்றாலும் பராமரிப்புச் செலவுகளூடாக
அதனைச்செய்து முடிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதனை நடைமுறைப்படுத்த எனக்குப்பல வாரங்கள் சென்றுவிட்டது. இன்று தான்,
நான் அந்தக்காரை திருத்தும் இடத்தில் இருந்து
எமது நிறுவனத்திற்கு இன்னொருவர் உதவியுடன்
கொண்டுவந்தேன். என்னால் அதனை ஓட்டமுடியவில்லை..!
இது பழைய மொடல் கார் என்பதால் மனுவல் கியர் முறைமையில் இயங்கக்கூடியது. எனது இடக்காலில்
உணர்வுகள் குறைவு என்பதால் என்னால் அதனைப்பயன்படுத்த
முடியாது. எமது நிறுவன பழைய மாணவன் ஒருவரின் உதவியே எனக்கு அதனை கொண்டுவர தேவைப்பட்டது.
இன்று எமது இரு ஊழியர்களின் பாட்டி இறந்துவிட்டார். அதற்குச் செல்லவே
காரைத் தயார்படுத்தினேன். இறுதியில் கார் ஒத்துழைக்க மறுக்க, பின்னர் எமது ஊழியர் ஒருவரின்
காரில் சென்று, ஒரு மலர் வளையத்தையும் வாங்கி,
அதனைக்கூட அந்தக்காரில் கொண்டுபோகமுடியாமல், எமது இன்னோர் ஊழியரின் உதவியுடன் மோட்டார் வண்டியில் கொண்டுசென்று,
எமது அஞ்சலியைச் செய்துவிட்டு வந்து, அந்தக்காரை இயக்கிப் பார்த்தோம். அது தரமாக இயங்கியது..!
ஆனால் உதவ வேண்டிய நேரத்தில் உதவ மறுத்துவிட்டது.
அப்படி என்றால் அந்தக்கார் எமது நிறுவனத்திற்கு பொருத்தமற்றதா என எண்ணத்தோன்றுகின்றது.
அதனை இன்னோர் நிறுவனத்திற்கு மாற்றச்சொல்லியும் கடிதம் வந்துள்ளது..! இனி, வேறு வழியில்
சிந்திக்காமல், சொன்ன வாக்கைக் காக்க, அங்கே அனுப்புவது தான் சாலச்சிறந்தது என நினைக்கின்றேன்.
ஆ.கெ.கோகிலன்
15-07-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக