மயக்கம் (Faint)..!

 


சில நாட்கள் நல்ல நாட்களாகவும், சில நாட்கள் பரவாயில்லை என்ற ரீதியிலும், சில நாட்கள் ஏன் தான் வந்ததோ என்று வேதனைப்படும் அளவுக்கு வந்துவிடுவது வழக்கம்.

இன்றைய நாள் எனக்கு 3வது வகையைச் சார்ந்ததாக அமைந்துவிட்டது.

பொதுவாக மருத்துவமனையை நாடவிரும்பாத எனக்கு, அங்கு எப்படியாவது போகவேண்டும் என்று இயற்கை அழுத்துவதாகத் தோன்ற வைத்த ஒரு நாள் இன்றைய நாள்..!

வழமைபோல் பரபரப்பாக அங்கும் இங்கும் இயங்கிக்கொண்டிருக்கும்போது, எனது இடக்கையினது ஆள்காட்டிவிரலானது கதவுக்குள் மாட்டுப்பட்டு நகத்திற்கு அருகாமையிலுள்ள சதை பிடுங்கி எடுக்கப்பட்டுவிட்டது..!

இது நடக்கும் போது மதியம் 12.45 இருக்கும். தகவல் தொழில்நுட்ப மாணவர்களுக்கு செயற்திட்ட மதிப்பீடு நடந்துகொண்டிருக்க, பதிவாளர் இடம் மாறியதால், அந்த வேலையையும் இடையிடையே கவனிக்க  அங்கும் இங்கும் அரக்கப் பரக்கத் திரியும்போது, கைவிரல் கதவினுள் மாட்டிவிட்டது. பலர் அங்கே இருந்ததால், அந்த இடத்தில் நிற்காமல் அவசரத்தில் இழுத்துக்கொண்டு வர  ரத்தம் கொப்பளித்துப் பாய்ந்தது..! அப்போது தான் உண்மையான நிலை எனக்குப் புரிந்தது. உடனே அக்கவுண்ட் பிரிவுக்குச் சென்று  பஞ்சையும், பண்டேஜையும் வாங்கிக்கட்ட வெளிக்கிட, ரத்தம் நிற்காமல் வழிந்தது..! எனது ஊழியர்கள் வந்து கைப்பிடித்து, இரத்தத்தைத் துடைத்து பஞ்சைப்போட்ட பண்டேஜால் சுத்திக்கட்ட கண் இருட்டத்தொடங்கியது..! அருகில் இருந்த கதிரையில் அப்படியே உட்கார்ந்து விட்டேன். என்னால் ஒன்றையும் பார்க்க முடியவில்லை..! எல்லாம் வெள்ளையாகத் தெரிந்தது..! உடல் வேர்த்து குளித்தது போல் மாறிவிட்டது..! அங்கு நின்ற சிலர் என்னை, ஆஸ்பத்திரிக்குப் போகச்சொன்னார்கள்.  சிறிது நேரம் சாய்ந்து இருந்ததால், ஓரளவு தெம்பு வந்ததாக உணர்ந்து எழுந்து எனது ஊழியர் ஒருவரின் உதவியுடன் நடந்து வந்து எனது  அறையில்  சற்று அமர, ஓரளவிற்கு உருவங்கள் தெரிந்தன..! பின்னர் சற்று தெளிவும் வந்தது..! எனக்காகக் காத்திருந்த பிள்ளைகளின் வேலைகளை அந்தக்களைப்புடனும் வலியுடனும் செய்துவிட்டு, குறித்த அந்த ஊழியருடன் சிறிது நேரம் படுக்க, எனது அறைக்குச்சென்று அப்படியே கட்டிலில் விழுந்தேன்..!

பல யோசனைகள் மண்டையில் ஓடின..! ஆஸ்பத்திரிக்குப் போவதா..?  யாருடன் போவது..? ஏதாவது மருந்துகளை மாறிக்கொடுத்து, சின்ன விடயத்தையும் பெருதாக்கிவிட்டால் யார் பார்ப்பது..? குடும்பம் யாழில்..? நான் தனியே இங்கே..?

உடனேயே வெளிக்கிட்டு யாழ்ப்பாணம் போவோமா..? நானே தெம்பில்லாமல் இருக்க, பஸ்ஸில் போகும்போது விழுந்தால் யார் பார்ப்பது..? ஏன் மற்றவர்களுக்கு கரைச்சல் கொடுப்பான்..? இவ்வாறு எண்ணங்கள் ஓட, உடனே படுக்கையில் இருந்து எழுந்து, எனது அலுவலக அறைக்கு வந்து, ஏற்கனவே வாங்கி வைத்த மதியச்சாப்பாடு காத்து இருந்தது..!

 

வழமையாக, எனக்கு மட்டுமே வாங்குவது வழக்கம். இன்று செயற்றிட்ட மதிப்பீட்டிற்கு வந்தவருக்கும் வாங்கிக்கொடுக்க வேண்டிய நிலையில், எங்கள் இருவருக்கும் வாங்கி வந்தார். உண்மையில் நானும் மதிப்பீட்டில் முற்றாகக் கலந்துகொள்வதாக தீர்மானித்து இருந்தோம். இடையில் எல்லாம் நினைக்காதபடி மாறிவிட்டது..! எமது பதிவாளரும், பதவி உயர்வு பெற்று வேறோர் இடத்திற்குப் போய்விட்டார். அவர் விருப்பத்துடன் போகவில்லை. வேறுவழியில்லாமல் சென்றார். நான் வழமையாகச் செய்யும் வேலை போதாது என்று பதிவாளரது வேலையையும் கவனிக்க வேண்டிய நிலையில் இருந்தேன். இதனால், ஏற்கனவே போட்ட செயற்றிட்ட  மதிப்பீட்டுத்திட்டம் மாறிவிட்டது..!

இரத்தம் போனதாலும், வியர்த்துக்கொட்டியதாலும், காலை பொல்ரொட்டியை மாத்திரம் காலைச்சாப்பாடாக உண்டதாலும் வயிறு பசித்தது..! உடல் பலவீனமாகத் தோன்றியது.  உடனே, அந்தச்சாப்பாட்டை முழுவதும் சாப்பிட்டேன். அப்போது தான் உடலுக்கு முழுச்சக்தியும் வரும். சக்தி வந்தால் தான் நோய் குணமாகும். பின்னர் ஓரளவு பலம் வந்ததும் மதிப்பீடு நடக்கும் இடத்திற்குச் சென்று, நடந்ததையும்  சொல்லி, எனது கை, நெரிபட்ட காதவைப் பார்த்தேன். கையில் இருந்து பிரிந்த சதை அங்கே ஒட்டிக்கொண்டிருந்தது..! பின்னர் அதனைப்படமெடுத்துப் பார்த்தபோது  தான் தெரிந்தது எவ்வளவு தூரம் சதை பிய்ந்துள்ளது என்பது..!

அதன் பிறகு எந்த வைத்தியரிடம் காட்டுவது என்று யோசித்துக் களைத்துவிட்டேன். அந்தநேரம் நண்பனின் ஞாபகம் வந்தது..! வாட்சப்பில் எனது நிலையைப் படங்களாகப் போட்டுவிட்டு பதிலுக்காக வேண்டினேன். ஒரு பாமசிக்கு போகச்சொல்லி, அங்கேயிருந்து தனக்குப் போன் செய்யச்சொன்னார். அதன்படி, அவர் சொன்ன மருந்துகளை வாங்கிக்கொண்டு, இரவுச்சாப்பாட்டையும்  ஒரு பேக்கரியில் வாங்கிக்கொண்டு, அலுவலகத்தில் மீதியுள்ள வேலைகளையும் செய்து, 6.00க்குப் பிறகு சிறிது நேரம் உறங்கி, பின்னர் எழுந்து, பாதுகாப்பு அதிகாரியின் உதவியுடன் கைவிரலுக்கு பெதடீனா போட்டு பண்டேஜால் கட்டும்போதும் இரத்தம் வழிந்தது..!  அதனைப் பார்க்கத் திரும்பவும் கண்கள் மங்கி, வேர்த்துக்கொட்ட, ஓடிப்போய் சிறிது நேரம் படுத்துவிட்டு, சற்று சாதாரணமாக எல்லாம் தெரியவர, எழுந்து, மீண்டும் அலுவலக அறைக்கு வந்து இரவுச்சாப்பாட்டையும் முடித்துக்கொண்டு, சிறிது நேரம் அலுவலக ஆவணங்களைப் பார்வையிட்டுவிட்டு, வைத்திய நண்பர் சொன்ன மாத்திரைகளை தண்ணீருடன் முழுங்கிவிட்டு, கைவலிக்க வலிக்க இதனை எழுதுகின்றேன். 

கையில் வலி தெரிந்தாலும், எழுதுவதால் ஒரு சந்தோசம் மனதில் ஏற்படுவதையும் அவதானித்தேன்.

அந்த சந்தோசத்திற்காக இந்த வலியைத் தாங்கலாம் என இருந்தது..!

 பொதுவாக ஏதாவது இப்படியான விடயங்கள் நடந்தால், யாருக்காவது பாதிக்கக்கூடிய விதத்தில் நடந்தேனா..? அல்லது ஏதாவது தீங்கு செய்தேனா..? என்று யோசிக்கும் போது இரண்டுவிடயங்கள் நினைவிற்கு வந்தன..!

ஒன்று, தவளைகளின் தொல்லையால் அவற்றை அழிக்க நினைத்துவிட்டு பின்னர் மன்னித்துவிடுவேன். இன்று காலை என்னை அறியாமல் ஒரு தவளைக்குஞ்சு மிதிபட்டுவிட்டதோ என்னவோ தெரியவில்லை..! மயக்கமாக இருந்தது..! பின்னர் துப்பரவு ஊழியர் மூலம் அதனை எடுத்து எறியச்சொன்னேன்.. அவர் சொன்னார்..“அதற்கு உயிர் இருக்கு என்றும் கால்கள் துடித்ததாகவும்..!”

 

செயற்றிட்ட மதிப்பீட்டின் போது  ஒரு பெண்பிள்ளை எல்லாக் கேள்விக்கும் ஒரே மாதிரித் தலையாட்டிக்கொண்டு இருந்தார். நான் சொன்னேன் “ ஓம் என்றால் ஒரு மாதிரியாட்டும், இல்லை என்றால் வேறு மாதிரியாட்டும் என்று..!” அவருக்கு முகம் கறுத்துவிட்டது..!  ஒன்றும் கதைக்க முடியாமல் சென்றுவிட்டார்..! பின்னர் யோசித்தேன் “நான் ஏதாவது தவறாக சொல்லிவிட்டேனா..? அல்லது அங்குள்ள கனிஷ்டமாணவர்கள் முன் சொன்னதால் அவ்வாறு எற்பட்டதா..? தெரியவில்லை..!”

ஒவ்வொரு அனுபவமும் ஒவ்வொரு பாடம்..! பாடங்கள் எத்தனை படித்தாலும், முடிவதாகத் தோன்றவில்லை..! அவ்வளவு அனுபவங்களைக் கொட்டிக் கொடுக்க இயற்கை  என்றும் தயாராகவே இருக்கின்றது..! நமது நிலை தான் கவலைக்கிடம்..!

 

ஆ.கெ.கோகிலன்

25-07-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!