கௌரவ விருந்தினர்..!
நான் திருகோணமலை வந்தபின்னர்
ஒரு பாடசாலையின் 75ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஒரு பெருவிழாவை நடாத்த பாடசாலையும்,
அதனைச்சுற்றியுள்ள சமூகமும் தீர்மானித்து அதற்கான பல ஏற்பாடுகளில், நானும் ஏதோவோர்
விதத்தில் இணைக்கப்பட்டேன். இந்த சமயம் என்னிடம் ஒரு கட்டுரையும் கேட்கப்பட்டது. வழமைபோல்
எனது பாணியிலான ஒரு கட்டுரையை சமர்ப்பித்தேன்.
அதன்பின்னர் கல்லூரியின் அதிபர் என்னிடம் வந்து நீங்களும் ஒரு கௌரவ விருந்தினராகப்
பாடசாலைக்கு வந்து, ஏதாவது நல்ல விடயங்களை மாணவர்களுக்கு கூறுவதுடன் எமது நிறுவனக்கற்றை
நெறிகள் பற்றியும், பல்கலைக்கழகம் கிடைக்காத மாணவர்கள் தொடர்பான ஒரு வழிகாட்டலையும்
வழங்கக்கோரியிருந்தார். நானும் ஒத்துக்கொண்டேன். இடையில் யாழ்ப்பாணம் போக விடுமுறை
வந்ததால் நானும் அங்கு போய், ஒரு நாள் தாண்டுவதற்குள் வயிற்றுவலி வந்து என்னை வாட்டி
எடுத்தது..! இருந்தாலும் இந்த நிகழ்வுக்கு வருகின்றேன் என வாக்குகொடுத்ததால் அதனைத்
தட்டிக்கழிக்க மனமில்லை. வருத்தத்தையும் தாண்டிப் புறப்பட்டேன். சின்ன சின்னத் தடைகள்
வந்தாலும் அதையும் தாண்டிச் சென்றேன்..!
காலை உடல்நிலை சரியில்லை என்றாலும் ஒருவாறு சமாளித்து, மாலை நிகழ்வுக்கு
வெளிக்கிட்டேன். எமது நிறுவனக்காரை திருத்தக்கொடுத்ததால்
அதில் போகமுடியவில்லை. எனது காரையும் கடந்த சில வாரங்கள் கொண்டுவருவதைத் தவிர்த்தேன். அதனால் இங்குள்ள மோட்டார் வண்டியில் சென்றேன்.
கடலோடு சேர்ந்த அழகிய அந்த ஊரை அடைந்தவுடன் தான் தெரிந்தது, இது ஒரு
உலகப் பிரசித்தி பெற்ற ஊர் என்பது..!
மரம் நாட்டல், பாண்ட் அணிவகுப்பு, மெடல் வழங்கல் மற்றும் பேச்சு என
எனக்கு வழங்கப்பட்ட கடமைகளை, என்னால் இயன்றவரை
ஓரளவிற்கு சிறப்பாகச் செய்தேன் என நம்புகின்றேன்.
பல பழகிய முகங்களை மீண்டும் கண்டு, கதைக்க முடிந்தது. பல பெரியவர்களுடன்
நட்புக் கிடைத்தது. எனது மனைவியின் உறவினர் கூட அந்தப்பாடசாலையில் 4 வருடங்கள் அங்கே
அதிபராகக் கடமையாற்றியுள்ளார்..!
எல்லோரையும் கௌரவித்து, சிறப்பாக எல்லாவற்றையும் செய்தார்கள். எனது
வயிற்றுப்பிரச்சனை, எனது வேலை முடிந்ததும் விரைவாகவே கிளம்ப வைத்தது..! அவர்களும் என்னை
நிறைவாகவே அனுப்பி வைத்தார்கள்.
கல்வியின் முக்கியத்துவம், தற்போதைய வசதி வாய்ப்புக்கள் மற்றும் பாடசாலையுடன் சமூகத்தின் பங்களிப்பு என்ன என்பன
தொடர்பாகப் பேசி அவர்களுக்கு புரியவைத்தேன்.
எனது பேச்சுத்தொடங்கும்போதே நன்கு இருட்டி
விட்டது.
ஏறக்குறைய இரவு 8 மணிக்கு முதலே அந்த நிகழ்வு நடக்கும் இடத்தில் இருந்து
கிளம்பிவிட்டேன். போகும் போதும், வரும் போதும் ஒரே பாதையைப் பயன்படுத்தாததால் வீதிகள்
மாறிச் சென்று கடற்கரைச்சமூகமுள்ள ஒரு இடத்தில்
மாட்டித்தவிக்க, எனது மகள்களையொத்த இரு இளம் பெண்கள், தமது மோட்டார் சைக்கிளில் வந்து, சரியான பாதையில் என்னை
விட்டார்கள்..! அவர்களுக்கு நன்றி சொல்லி, அலுவலகம் வர இரவு 8.30ஜ தாண்டியிருக்கும்.
வயிற்றுப் பிரச்சனை காரணமாக, வயிற்றுக்கு எதையும்
கொடுக்காமல் உறங்கச்சென்றேன். மறுநாள் அதனால் சற்று இலகுவாக இருந்தது..!
ஆ.கெ.கோகிலன்
02-07-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக