பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை..!

 

 


நான் பொதுவாக எமக்குச் சொல்லப்பட்ட விதிகளின் படியே தொழிற்பட விரும்புபவன்.  சிலவேளைகளில் சரியான முறையில் விதிகளை விளங்கிக்கொள்ளாததன் விளைவாகத் தவறுகள் ஏதாவது நடந்திருக்கலாம். அது எனது அறிவுக்கு அப்பாற்பட்டதாக அமையும்போது, என்னால் ஒன்றும் செய்ய முடியாது. அது சார்பாக மேலிடங்கள் சொல்லும் அறிவுறுத்தல்களைக் கேட்டு நடப்பதுடன், தண்டனைகள் தந்தால் ஏற்றுக்கொள்ளவேண்டியது தான்.

குழந்தையில் இருந்தே தவறுகள் விடுவதும், திருத்திக்கொள்வதும் வாழ்வில் எல்லோருக்கும் இறைவனால் வகுக்கப்பட்ட நியதி. யாரும் எதையும் சரியாக அறிந்துகொண்டு பூமியில் பிறப்பதில்லை. அப்படிப்பிறந்தால் அது ஆச்சரியம்..! அபூர்வம்..! அப்படிப்பட்டவர்களை சாதாரண மனிதர்களாகக் கருதமுடியாது.  அவர்கள் இறைவனின் தூதர்களாக இருக்கலாம்..! அனைத்து அறிவும் புகுத்தப்பட்டு அனுப்பப்படும் அப்படிப்பட்ட மனிதர்களை தற்போதைய AI தொழில்நுட்பத்தினூடாக உருவாக்கப்படும் ரோபோக்களுடன்  ஒப்பிடலாம். ரோபோக்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டது. இறைதூதர்கள் இறைவனால் உருவாக்கப்பட்டது..! ஆனால் இரண்டும் ஆற்றல் மிக்கவை. இருந்தாலும் இறைவனால் உருவாக்கப்பட்ட உயிருக்கு ஒப்பாக மனிதனால் உருவாக்கப்பட்டது அமையமுடியாது என்பது தான் நாம் அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டிய உண்மை.

ஏனைய மனிதர்கள் எல்லோரும் ஒவ்வொரு நாளும் முறையான அல்லது முறையில்லாத படிப்புக்கள், அனுபவங்கள் ஊடாக நிகழ்ச்சிநிரற்படுத்தப்படுகின்றார்கள் (Programmed/Trained).

இவ்வாறாக உருவாகும் சாதரண மக்கள், சரியாக நடந்தால் தான், அவர்கள் மனநிம்மதியுடனும், மகிழ்சியாகவும் உலாவமுடியும். அல்லது எங்கும் எதிரிகளும், ஆபத்துக்களும் காத்திருக்கும்..!

ஒத்த இயல்பு கொண்ட ஒரு சிலரோடு நெருங்க வேண்டியிருக்கும். ஒவ்வாத இயல்புகள் கொண்ட ஒரு சிலரை வெறுக்க வேண்டியிருக்கும். இவ்வாறாக உருவானதே வேறுபட்ட எண்ணங்கள் மற்றும்  இயல்புகள் கொண்ட சமூகங்கள், இனங்கள், சாதிகள், மதங்கள் என்றால் அதனை யாரும் மறுக்க முடியாது. அது இன்னும்  பரம்பரை எக்ஸ், பரம்பரை வை, பரம்பரை இசட், பரம்பரை அல்பா, பரம்பரை பீற்றா எனப்பலவாறாக பரந்து  விரிந்து செல்கின்றன..!

அண்மையில் எமது நிறுவனத்தில் நடாத்தப்படும் ஒரு கற்கைநெறியை எனது கவனத்திற்கு கொண்டுவராது, உண்மையான  கள நிலைமை தெரியாது தலைமையகம் ஒரு முடிவை எடுக்க, அதனை நான் புரிந்துகொண்டாலும், அதில் தவறு இருந்தது எனக்குத் தெரியும் என்பதாலும் அவர்களின் நிலைப்பாட்டை எமது மாணவர்கள், ஊழியர்களுக்குத் தெளிவுபடுத்தினேன். அவர்கள் அதனை எப்படிப்புரிந்தார்களோ தெரியாது எப்படியாவது  அதனைத்தொடர, மக்களின் ஒத்துழைப்பையும், மீடியாக்களின் உதவியையும்,  பாராளுமன்ற உறுப்பினர்களையும் நாடினார்கள்..!

 அவர்கள் அனைவரின் உதவியினால் குறித்த கற்கைநெறி தொடர்ந்து இங்கு நடாத்தக்கூடிய சூழல் உருவானது..!  அதேநேரம் தலைமையகத்தில் எனக்கும் சில நெருக்குவாரங்கள் ஏற்பட்டது. ஆனால் நியாயம் புரிய, அனைத்து நெருக்குவாரங்களும் பறந்தன..!

அறிவுக்கு எட்டியவரை சரியாகச் செயற்படுவதால் தவறுகள் சில எம்மையறியாமல் நடந்தாலும், ஏதோ பாதிப்பு இல்லாமல்  எம்மால் நகரமுடிகின்றது..!

இந்தப்பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர், என்னிடம்  எமது நடைமுறைகளால் ஏற்படும்  சிக்கல் வாய்ந்த விடயத்திற்கு என்ன தீர்வு வழங்கமுடியும் எனக்கேட்க, நான் எனது நிலைப்பாட்டை தெரிவிக்க, அவர் அதனை ஏற்றுக்கொண்டு, அந்தவிடயத்தை கைவிட்டுவிட்டார்..!

யாரும் தமக்கு ஏற்றபடி முடிவுகளை மாற்றினால் குழப்பங்களும் கூச்சல்களும் ஏற்படும். சரியான முடிவுகளை எடுக்கும்போது, சிலருக்கு பாதிப்புகள் ஏற்படுவது என்பது, ஏதோ நடைமுறைகளைச் சரியாக புரிந்துகொள்ள முடியாததால் ஏற்பட்ட தவறுகளே தவிர வேறு ஒன்றும் அல்ல..! ஒருவிடயத்தில் இறங்கினால், அதனை முற்றாக முடிக்க முயலவேண்டும். இல்லை என்றால் இறங்கக்கூடாது. ஆனால் பொதுவாகப் பலர் இதனை கடைப்பிடிப்பதில்லை. என்ன செய்ய..? இப்படியும் மனிதர்கள் இருக்கின்றார்கள் என்பதை ஏற்றுக்கொண்டு நகரவேண்டியது தான்.

 

ஆ.கெ.கோகிலன்

02-07-2024.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!