மருத்துவ கொள்ளைக்கூட்டம் (Medical Mafia)..!
நீண்ட காலமாக மக்கள் மருத்துவர்கள் மேல் வைத்த நம்பிக்கைகள், கலியுகத்தில்
பொய்த்துப்போகின்றன.! பணமே எதனையும் நிர்ணயிக்கும் காரணியாக மாறியதால் மருத்துவர்களின்
சேவை மனப்பாண்மைகள் செத்துவிட்டன..! ஒரு சிலர் மட்டும் விதிவிலக்காகவும், இறைவனுக்கு
அடுத்த நிலையிலும் இருக்கத் தகுதிபடைத்துள்ளார்கள்.
சின்னச்சின்ன வியாதிகள் எல்லாவற்றையும் பூதக்கண்ணாடிகொண்டு பார்ப்பது போல், ஊதிப்பெரிசாக்கி,
மக்களின் பயத்தையும், பணத்தையும் தமக்கு சாதகமாக்கும் கைங்கரியங்களை கூசாமல் செய்ய
எப்படி மனம் வருகின்றதோ தெரியவில்லை..!
உண்மையில் மருத்துவர்கள் மேலுள்ள அதிருப்தி, அண்மையில் நடந்த சாவகச்சேரிச்
சம்பவம் மூலம், வைத்திய அத்தியேட்சகர் (Medical Superintendent)இராமநாதன் அர்சுனனுக்கு
சாதகமானதாக அமைந்து இருக்கலாம். இல்லை அவரது உண்மையான சேவையாலும் இவ்வாறு அமைந்து இருக்கலாம்.
ஒருவரைப் பற்றிச்சரியாகத் தெரியாமல் கதைப்பது தவறுதான்.
இலங்கையைப் பொறுத்தவரை மருத்துவத்துறைக்குப் போவதற்கே பல வழிகளில்
மக்கள் முதலிடுகின்றார்கள்..! அதிலும் வசதி படைத்தவர்கள், ஏழைகளின் சான்ஸைப் பறிக்கவென்றே
அதிகம் அலைகின்றார்கள்..! பிள்ளைகள் உயர்தரம் வந்ததும் எப்படியாவது அந்த இலவச மருத்துவத்துறைக்கு
தெரிவு ஆவதற்காக எடுக்கும் முயற்சிகள் அளப்பெரிய..! அதற்காக பிரத்தியேக வகுப்புகளுக்கு
கூட்டிச்செல்ல தமது அலுவலக வேலைகளையே கவனிப்பதில்லை..! எப்படியாவது அந்த இலவச மருத்துவ
படிப்புச்சீற்றிற்கான வரிசையினுள் போய்விடவேண்டும் என்பதற்காக, வலைவிரித்துக் காத்திருக்கும்
கல்விக்கொள்ளையர்களுடன் சேர்ந்து செய்யும்
சாகசங்கள் இறைவனுக்கு மட்டுமே வெளிச்சம்.
ஒரு கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து மேலே வருவதற்கு அவர்கள் படும்
போராட்டம் சொல்லி மாளாது..! காசு, பதவி, அந்தஸ்து மற்றும் அரசியல் அனைத்தையும் வைத்து
போடும் ஆட்டங்களால் விளைந்த குஞ்சுகளே தற்போதைய மருத்துவக்கொள்ளையர் கூட்டம்..!
உண்மையில் வசதிவாய்ப்பு அற்ற ஒருவன் மருத்துவராவதற்கு எமது சமூகம்
எவ்வளவு தடைகளைப் போட்டுள்ளது தெரியுமா..? இந்தத்தடைகளைச் சாதாரண அறிவற்ற ஏழை எப்படித்
தாண்டுவது..? ஆயிரத்தில் ஒன்று இரண்டு அவ்வாறு தாண்டி இறையருளால் வெளி வருகின்றது..! அவர்களுக்குத்
தான் தெரியும் இலவசக்கல்வியின் அருமை. அதுமாத்திரமல்ல..! தமது உண்மையான கடமை என்ன என்பதும்..?
மக்கள் வரிப்பணத்தில் படித்தவர்கள், அந்த மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய வகையில் சேவையாற்ற
வேண்டும். அப்படி சேவையாற்றுபவர்களும் இருக்கின்றார்கள்..! அவர்களை நான் கடவுளுக்கு
நிகராகவே பார்க்கின்றேன். அதேவேளை, சூழ்ச்சிகளைப் பயன்படுத்தி, தமக்கு இருக்கின்ற வசதி
வாய்ப்புகளைப் பயன்படுத்தி, ஏழைகளுக்குச் செல்லவேண்டிய மருத்துவ ஒதுக்கீடுகளைத் தமக்காக்குவது
எவ்வளவு கேடுகெட்ட செயல்..? கல்வியில் எப்படித்திருடி அதிக புள்ளிகள் பெறமுடியுமோ அதற்கேற்ப
பணவலிமையால், பயிற்றப்பட்டு, பரீட்சைகளில் அதிகபுள்ளிகளைப் பெற்று ஏழைகளுக்கு கிடைக்கவேண்டிய
சீற்றுக்களை தட்டிப்பறித்துவிடுகின்றார்கள்..! இது, இன்னொருவித நவீன தரப்படுத்தல்..!
சரி அப்படிப்பறித்து, இலசவமாய் படித்தாலும், பின்னர் போட்ட பணத்தையும்,
அதற்கான அலைச்சலையும் காசாக்க மருத்துவத்துறையையே விற்கின்றார்கள். நான் நினைக்கின்றேன்,
மருத்துவக்கல்வியை அதிக பணம் கொடுத்து, அதுவும் எந்தவழியிலாவது செலவழித்துப் பெற்றபடியால்
தானோ என்னவோ மருத்துவத்தை வைத்து வியாபாரம் செய்ய முனைகின்றார்கள்..!
பொதுவாகச் சொல்வார்கள் நீதி, நியாயம், கண்ணியம் இல்லாத வியாபாரத்தால்
அழிவைத் தவிர வேறோன்றும் இல்லையென்று..! மருத்துவம் வியாபாரமானால் அதனைத் தான் இதிலும்
எதிர்பார்க்க முடியும்.
யாரை ஏமாற்றினாலும், எந்தப் பணத்தை பறித்து வைத்தாலும், அவை எல்லாம்
கொஞ்சக்காலத்திற்கு தான்..! சேர்த்து வைத்த புண்ணியம் தான் சந்ததியைக் காக்கும். அரச பரம்பரைகள் அழிந்ததன் காரணமே புண்ணியத்தைச்
சேர்க்காதது தான்..!
அன்பாகப் பழகுங்கள்..! அன்பைக்கொடுங்கள்..!
வாழ்வில் அன்பைப் பெறுவீர்கள்..! நிம்மதி அடைவீர்கள். சந்ததிகளும்
நிறைவாக வாழுவார்கள்.
பேரவாப்பட்டு, பேரைக்கெடுத்துக்கொள்ளாதீர்கள்.
மக்கள் சேவையை மனமுவந்து செய்யுங்கள். மகேசனின் அருள், மகிழ்ச்சியை
அளிக்கும்.
ஆ.கெ.கோகிலன்
10-07-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக