ஹிட் லிஸ்ட்..!
அண்மையில் சிறுகவனக்குறைவால் ஏற்பட்ட சம்பவம் ஒன்றால் கைவிரலில்
காயம் ஏற்பட்டது. அந்த வலி அதிகமாக முதல்,
யாழ்வந்து, மனைவி பிள்ளைகளின் உதவியுடன் மருந்தைக்கட்டியவுடன் தான், சற்று நிம்மதி
பிறந்தது.
அப்படியே கதிரையில் உட்கார்ந்தபடி ஒரு படத்தைத் தொலைக்காட்சியில்
போட்டுப்பார்த்தேன். அந்தப்படம் தான் ஹிட் லிஸ்ட்.
படம் தொடங்கியது முதல் முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சம்
இல்லாமல் கதையும், பல திருப்பங்களுடன் பயணித்தது.
கொரோனா காலத்தில் நடந்ததாகக் கதை சொல்லப்பட்டாலும், அதில்
பல விடயங்கள் பல இடங்களில் நடந்த விடயங்களே..!
அந்த விடயங்களைத் தொகுத்து, ஒரு அறிமுகமில்லாத விஜய் கனிஷ்கா
என்ற ஒரு புது நாயகனை வைத்து, ஜயர் பையன் போல
கொலை என்றால் நடுங்கக்கூடிய அந்த இளைஞனை ஒரு ஆயுதமாக மாற்ற, அவனின் தாயையும், தங்கையையும்
கடத்தி, ஒரு குறித்த இடத்தில் அடைத்து, அவர்களைக் கொடுமைப்படுத்துவதன் ஊடாக அந்த மென்மையான
பையனை கொலைசெய்ய வைக்கின்றான் திரையில் தெரியும் ஒரு முகமூடி மனிதன்..!
அவனைக்கண்டு பிடிக்க துப்பாக்கியுடன் அலைவதாக சரத்குமார்
நடித்துள்ளார். இறுதியில்
கொலைக்கான காரணத்தைப் பார்க்க, ஒரு குடும்பத்தின் சதியாகவே கொலைகள் நடந்துள்ளன என்பதைக்கண்டுபிடிக்கின்றார்
அந்த பொலிஸ் அதிகாரி சரத்குமார்.
ஒக்சிஜன் சிலிண்டர்கள் கடத்துவதையும், அதைப்பெரும் தொகைக்கு
விற்பதையும், ஏழைகளின் இறப்பை கண்டுக்காமல் போவதையும், கண்டு பொங்கும் மருத்துவர் ஒருவருக்கு
நடக்கும் அநீதியும், பணத்திற்காகக் கெடுதல்களைக் கூசாமல் செய்யும் வில்லன் கூட்டத்தையும்
தொடர்புபடுத்திக் கதை பின்னப்பட்டுள்ளது.
பல நடிகர் நடிகைகள் நடித்துள்ளார்கள். புதுமுக நாயகனின் நடிப்பு
தரம். மற்றவர்களும் சிறப்பாக நடித்துள்ளார்கள். சரத்குமார் வழமைபோல் கடும் விறைப்பாக
நடித்துள்ளார். இயக்குனர் கௌதம் மேனன், சமுத்திரக்கனி தமது போன்றோர் தமது பாத்திரங்களை
கச்சிதமாக வெளிப்படுத்தியிருந்தார்கள்.
நீண்டகாலத்திற்குப் பிறகு நடிகை சித்தாராவைப் பார்த்தது மகிழ்ச்சி.
அவரது நடிப்பும் நன்றாக இருந்தது. படத்திலுள்ள ஏனைய தொழில்நுட்பங்களும் தரமாக இருந்தன.
சூரிய கதிர் காக்கள்ளர் மற்றும் கெ.கார்த்திகேயன் என்ற இரட்டை இயக்குனர்கள் விறு விறுப்பிற்குப் பஞ்சம்
இல்லாத, அதேவேளை மனிதர்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதைக் கச்சிதமாகச் சொல்லியிருக்கின்றார்கள்.
படத்தில் கைவிரலை வெட்டும் காட்சியைப் பார்க்க, கையில் ஒரு
சதைத்துண்டு பிய்ந்ததையே எனக்குத் தாங்க முடியவில்லை. ஆனால் படத்தில் பார்க்கும் போது இலகுவாகக் கடந்துசெல்கின்றோம்.
எதுவும் அவரவர்களுக்கு வந்தால் தான் அதன் வலி என்னவென்று தெரியும். போரடிக்காத, விறு
விறுப்பான படம். சில லொஜிக் தவறுகள் இருக்கின்றன..!
ஆ.கெ.கோகிலன்
26-07-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக