வயிற்றுளைவு (Diarrhea)..!
கடந்த 6 மாத காலமாக நான் எனக்குப் பிடித்த உணவுகளையே தேடித்தேடி உண்டேன். இருந்தாலும் அவை ஆரோக்கியமான உணவுகளா என்பது கேள்விக்குறியே..! வீட்டுச்சாப்பாடு தொடர்ந்து சாப்பிடும்போது பிடிக்காவிட்டாலும் அவை உடலுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும். ஆனால் கடைகளில் சாப்பிடும் போது, சுவையைத் தவிர ஏனைய காரணிகளில் கவனம் செலுத்துவது பெரும்பாலும் குறைவு. நானும் அந்த வகையிலே செயற்பட்டேன்.
அண்மையில் புதிய கன்ரீன் வந்ததும் விரும்பிய உணவுகளை கேட்டு, உண்டேன்.
கடந்த வாரம் வியாழக்கிழமை இரவு உணவினை ஏற்பாடு
செய்ய மறந்துவிட்டேன். இறுதியாகக் கடைசிநேரம் போய் இரவு உணவு கிடைக்குமா எனக்கேட்டேன்.
இடியப்பம் செய்து தரட்டா..? என்றார். நான் அது வழமையாகச் சாப்பிடுவது தான்..! ஏதாவது
வித்தியாசமான உணவு இருக்கா எனக்கேட்டேன். அப்போது “டொல்பின் கொத்து” செய்து தருவதாகச்
சொன்னார். நானும் ஓம் என்று தலையாட்டினேன்.
பின்னர் இரவு எட்டுமணிக்கு கிட்ட வந்து சாப்பிடச் சொன்னார். டொல்பின் கொத்து
நிறைய இருந்தது..! சாப்பிடும் போது, ஆரம்பத்தில்
சுவையாக இருந்தது. பின்னர் சுவை தெரியவில்லை. ஒரு கட்டத்திற்கு மேலே சாப்பிடப்பிடிக்கவில்லை.
உணவை விரயப்படுத்தக்கூடாது என்பதற்காகவும், எனது தட்டில் போட்டதை யாருக்கும் கொடுக்க
முடியாது என்பதாலும் ஒருவாறு சாப்பிட்டு முடித்தேன். அப்போதே, உடல் ஒரு மாதிரியே இருந்தது..!
அடுத்த நாள் காலை, மெல்லிய உணவை எடுக்க முடிவுசெய்தேன்.
இறுதியாக “பான்கேக்கை” எடுத்தேன். இனிப்புச்சுவை அதிகம் என்பதால், முற்றாகச் சாப்பிடமுடியவில்லை.
அவ்வாறே மதிய உணவையும் ஒருவாறு எடுத்துக்கொண்டு மாலை 2.45 மணியளவில் வந்த பஸ்ஸில் ஏறி
யாழ்செல்ல, ஏறக்குறைய 8 மணி ஆகிவிட்டது. அங்கே இரவுக்குளியலிற்குப் பின்னர், வீட்டுச்சாப்பாடு
உண்டேன். அடுத்த நாள் காலை மற்றும் மதிய உணவை உண்டபின் தொடங்கியது வயிற்றுழைவு..! ஏறக்குறைய
மதியம் முதல் அடுத்த நாள் அதிகாலைவரை தொடர்ந்து, அங்கும் இங்குமாக ஓட்டம் தான்..! பொதுவாக எனக்கு மருந்து எடுக்க விருப்பம் வருவதில்லை.
இயன்றவரை நோய்கள் இயற்கையாக மாறவேண்டும் என்று விரும்புபவன் நான். அதனால் நேரங்கள்
கூட எடுத்தாலும், இயல்பாய் உடல் சாதாரண நிலைக்கு வரவேண்டும் என விட்டுவிடுவேன்.
இந்த மனநிலையில் இருக்கும் போது, அடுத்த நாளும் வந்தது. உடல் சுகமானதாகத்
தெரியவில்லை. சாப்பிடவும் மனமில்லை..! அதேவேளை மாலை 4.15இற்கு திருமலைக்கு திரும்பச் செல்ல வேண்டும்.
பொதுவாக நான் மெடிக்கல் லீவு எடுப்பது குறைவு..! எனக்கு அப்படி வருத்தம் வருவதும் குறைவு..! இது தான் சந்தர்ப்பம் என்று லீவு எடுக்க முடியும்.
ஆனால் அது எனக்கு விருப்பமில்லை. இயற்கையை ஏமாற்றினால், வருத்தங்கள் பெரிதாகும் என்ற
பயம் கூட இருக்கின்றது..!
நாளை பல நிகழ்ச்சித்திட்டங்கள்
இருப்பதால் லீவு எடுப்பது நல்லது அல்ல என்று மனம் சொல்லியது.
ஏற்கனவே பஸ் ரிக்கெட் புக்பண்ணியிருந்தனான். அதனைக் கான்செல் பண்ண,
அன்றுகாலை முயற்சித்தேன். அவர்கள் அப்படிச்செய்யமுடியாது என்றார்கள்..! புக் பண்ணிய சீற் புக் பண்ணியது தான்..! கான்செல்
செய்ய முடியாது என்று சொன்னதால், ஓரளவிற்கு உடல் நோர்மல் என்றால் போகலாம் என நினைத்தேன். அதோடு அம்மாவிடமும் சென்று அவருக்குரிய சில ஒழுங்குகளையும்
செய்துவிட்டு, அவித்த ரோஸ் பாண் மற்றும் பிறிஜ்ஜினுள் இருந்த தேனையும் தொட்டு சாப்பிட்டேன்.
உடல் சற்று ஆரோக்கியமாக இருந்தது..! மதியம் மனைவி சமைத்த அரைத்த பத்தியக்கறியுடன் மசித்த
சோற்றைச் சாப்பிட முடிந்ததுடன், மாலை திருகோணமலைக்கு வெளிக்கிடலாம் என்ற நம்பிக்கையையும்
அது தந்தது. சிறிது நேர உறக்கத்திற்குப் பிறகு
வெளிக்கிட்டு, வழமைபோல், அவித்த ரோஸ் பாணையும் வேண்டிக்கொண்டு பஸ் ஏறி திருமலை வருவதற்கு
இரவு 9.00 மணியாகிவிட்டது. வழமையாக இரவு 8.30
இற்கு முன்வரவேண்டும். ஏதாவது பிரச்சனைகள் வந்தால், இப்படியாகப் பிந்தும். இம்முறை,
ஹொரோபொத்தானையில் நிறைவெறியில் ஏறிய ஒருவனால் வந்த பிரச்சனை, பஸ்ஸை அரைமணி நேரத்திற்கு மேல் பிந்தச் செய்துவிட்டது.! அந்தப்பிரச்சனையைப்
பார்த்த மக்களும் பதட்டமானார்கள். அங்கே ஒருவன் கோடாலியுடன், ஓடி வந்தான்..! பஸ் நடத்துனரை அடித்து அவமதித்தார்கள்..! சாரதியுடனும் சண்டைக்குப் போனார்கள்..!
போதை வஸ்துக்களின் பாவனை இளைஞர் சமூதாயத்தை நசப்படுத்துகின்றது என்பதை இந்த நாளிலே
நேரடியாகப் பார்த்தேன்..! எனது வயிற்று நிலைமைக்கு நேரம் பிந்துவது பதட்டத்தை இன்னும்
எனக்கு அதிகரித்தது. என்னுடன் சாவகச்சேரியில் இருந்து வந்த, நகை செய்யும் இளைஞர், பல
கதைகளைக் கூறியதால் பயணம் இலகுவானது. பின்னர், போதைக்காரர்களின் சண்டையைப் பார்த்துவிட்டு
அவர் சொன்னவிதம் பதட்டத்தை சற்று குறைத்தது.
பிரான்ஸ் போக வெளிக்கிட்டவர், உக்கிரேன், ரஷ்யா, பெலாரஸ், செக்கோசெலவியா, கட்டார்,
துபாய் இந்தியா போன்ற பல நாடுகளுக்குச் சென்றும், அங்குள்ள சிறைகளில் இருந்தும் பல
அனுபவங்களுடன் வந்துள்ளார். அத்துடன் தாய்
மற்றும் தந்தையில்லாமல் இன்னும் திருமணம் கூட ஆகாமல், நினைத்த விரும்பிய இடத்திற்கும்
போகாமல், அவற்றை மறப்பதற்கு நண்பர்களுடன் தண்ணியடித்து மகிழ்வதையே வழக்கமாக வைத்துள்ளார்..!
இவர்கள் அனைவரின் நிலையைப் பார்க்க, முதலில் என்னை இப்படி வைத்திருப்பதற்கு
இறைவனுக்கு நன்றியைச் சொல்லி, அனைவரையும் காக்கவேண்டும் என்றும், நல்ல அறிவை கொடுக்க
வேண்டும் என்றும் இறைவனிடம் வேண்டிக்கொண்டேன்.
வயிற்றுளைவுடன் வந்தாலும், ஒருவாறு சமாளித்து, எனது இன்றைய நாளுக்குரிய
கடமைகளை இயன்றவரை நிறைவேற்றியது பெரும் மகிழ்ச்சியை எனக்கு தந்தது.
வாழ்வில், ஒவ்வொரு சூழலும் ஒவ்வொரு வித பாடத்தை எமக்குக் கற்றுத்தருகின்றது..!
அதனால் வாழ்க்கை சுவாரசியமாகின்றது..!
ஆ.கெ.கோகிலன்
01-07-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக