காலம் கடக்க முன்னர் வந்த ஞானம்..!

 


நேற்று எனது நண்பர் ஒருவர் எனது வீட்டிற்கு வந்து, அவரது மதியச்சாப்பாட்டை என்னுடைய சாப்பாட்டுடன் பங்கிட்டு உண்டு, வாழ்க்கையில் சில முடிவுகள் எடுக்கும் சூழல்களும், அவை எமது கட்டுப்பாட்டிற்கு அப்பால் சில காரணிகளால் நடாத்தப்படுவதாகவும் உணர்ந்தோம்..!

இருந்தாலும் சில விடயங்களில் நீதி, நியாயங்கள் பார்த்தால் தற்போதைய அவசர உலகில் எம்மையாரும் மதிக்க முடியாத, கண்டுக்க முடியாத சூழலுக்குள் செல்ல வேண்டியிருக்கும்.

எனது வீட்டுச்சூழல் என்னை ஒரு வித வாழ்க்கைக்குள் பழக்கப்படுத்திவிட்டது. அதைத்தாண்டி சிந்தித்தால், பல சிக்கல்கள் ஏற்படும் என்பதற்காக பல நாட்கள் அமைதியாகவே இருந்துவிட்டேன். யாரையும் குழப்பக்கூடாது. யாருடைய மனங்களையும் இயன்றவரை காயப்படுத்தக்கூடாது என நினைத்து, எனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல தியாகங்களைச் செய்துவிட்டேன். அதன் முக்கிய நோக்கம், “எனது கடமை..!”  என்று எடுத்துக்கொண்டேன்.

இப்படியாக வாழ்வு நகர்கையில், மகளின் வந்த பரீட்சை முடிவுகளையும், அதற்கான காரணங்களையும் ஆராயும்போது, எமது வாழ்வியல் முறைகளிலும் மாற்றங்கள் செய்யவேண்டி வருகின்றது..! சின்ன வயதிலே பொறுப்புக்களைக் கொடுப்பதும், தன்நம்பிக்கையை ஊட்டினாலும் மற்றவர்களைப்போல் அன்புக்கான, அரவணைப்புக்கான தேவைகளைக் கண்டுக்காமல் விட்டுவிட்டேனோ என்ற எண்ணம் மனதில் வரத்தொடங்கிவிட்டது..!

நான் 25 வருடங்களுக்கு முன்னர் ஒரு பாடசாலையில் தனியாகவே விஞ்ஞான மற்றும் கணிதப் பிரிவைத்தொடக்கி நடத்தினவன்..! ஏறக்குறைய 3 வருடங்களில் பட்டதாரி ஆசிரியராக நுழைந்து, 2-2 ஆசிரியராக வந்துவிட்டேன். அதன் பிறகு உயர்தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் உதவி விரிவுரையாளர், விரிவுரையாளர், சிரேஷ்ட விரிவுரையாளர், பணிப்பாளர் 2, பணிப்பாளர் 1, வேறு வேறான நிறுவனத்திலும் பணிப்பாளர் 1 என பல பதவி உயர்வுகளைப் பெற்று எனது நிலையை மேம்படுத்தியுள்ளேன்.

ஏறக்குறைய 107 பாடங்கள் வரை படிப்பித்துள்ளேன். இந்த நிலையில் மகளின் செயற்பாடுகளை ஆராயும் போது, வீட்டிற்கு முன்னாலுள்ள கல்விநிறுவனத்தில் உயர்தர பிரத்தியேக வகுப்பில் படிக்க விட்டதன் பாதிப்புப்புரிந்தது..! பௌதீகவியலில் பொறியல் என்ற பாடம் முற்றாகப் படிக்கவில்லை..! இதேபோல் பல பாடங்கள் தவறவிடப்பட்டுள்ளன. இது எங்களைத் தாண்டி நடந்த நிகழ்வு என்றாலும் எனக்கும் அதில் பங்குண்டு..!

அந்தவகையில், இதுவரை மகளுக்கு ஒன்றும் சொல்லிக்கொடுக்க விரும்பாத நான்  இன்று, பௌதீகவியலில் சில விடயங்களைச் சொல்லிக்கொடுக்கத் தொடங்கினேன்.  எனது பிள்ளை கஷ்டப்படுவதைப் பார்க்க முடியவில்லை. என்னை விட்டாலும், அவளது மாமனாரும் இந்தப் பாடத்தில் மிகவும் திறமை வாய்ந்தவர்..! ஆனால் மகளின் சுயமுயற்சியும், நான் வளர்த்த தன்நம்பிக்கையும் எங்களிடம் கேட்டுப்படிக்க அவளுக்கு தயக்கம் இருந்தது.

இன்று தான் அந்தத்தடை உடைந்தது..! இனி நல்ல முறையில் அவள் படிப்பாள்..!

ஒரு பெற்றோரின் கடமை, பிள்ளைகளை ஊருக்கும், உலகிற்கும் பயனுள்ள மனிதர்களாக மாற்றி, அவர்களும் வாழ்ந்து, மற்றவர்களையும் வாழ வைக்கக்கூடிய நிலைக்கு கொண்டுவருவதே..!

 

ஆ.கே.கோகிலன்

17-06-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!