தண்ணீர் இல்லாப்பாடு..!

 


இன்றுகாலையே ஒரு அழைப்பு வந்தது எமது நிறுவனத்தில் இருந்து..! அது எமது மோட்டர் பம்ப் வேலை செய்யவில்லை என்றும், அதனால் தண்ணீர் இல்லை என்றும் அதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் பல வருகின்றன என்றும், அழைப்பை எடுத்தவர் சொன்னார். இந்த செய்தி வந்ததும் இன்று மாலை நான் திருமலை போகவேண்டும். அத்துடன் அங்கு தங்குவதால், தண்ணீர் இல்லாவிட்டால் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று நினைத்து, உடனேயே ஒரு தொழில்நுட்பவியலாளரிற்கு போன்போட்டுச் சொல்லி, அந்த வேலையை முடிக்கச்சொன்னேன். அதுமாத்திரமன்றி, எனக்கு போன்பண்ணிய நபருக்கும், அவரது நம்பரை அனுப்பி, எப்படியாவது அவரைப்பிடித்து வேலையை செய்துமுடிக்கச் சொன்னேன்.

அதன் பின்னர் வழமையான எனது கருமங்களுடன், ஒரு கணித ஆசானின் இறுதிக்கிரிகைகளில் பங்குபற்றவேண்டிய சூழல் வந்தது. நானும் மனைவியும் கலந்துகொண்டோம். அப்போது தான் அவருடைய சேவை புரிந்தது..! அவரிடம் படித்தவர்கள் பலர் பல நல்ல வேலைகளில் இருக்கின்றார்கள்..! எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரும் அவரிடம் படித்து, பின்னர் அவரிடத்திலேயே கணித ஆசானாக வேலைபார்த்துள்ளார். எனக்கு தூரத்து உறவினர் என்றாலும் எமது பிரதேசத்தைப் பிறப்பிடமாகக்கொண்ட அந்த கணித ஆசான், நான் திருமணம் முடித்துச்சென்ற காலங்களில் இருந்து ஒரு வித வாத நோயால் படுக்கையில் விழுந்துவிட்டார்..! அவரது மனைவியே இவ்வளவு காலமும் அவரைக் குழந்தைபோல் பார்த்துள்ளார்..! அவருக்கு ஒரு மகள் இருக்கின்றார். அண்மையில் திருமணமாகி, சிங்கப்பூரில் கொஞ்சக்காலம் வசித்துவிட்டு, தற்போது நியூஸிலாந்து சென்று வசிக்கின்றார்கள்.

ஒரு சமயம் அந்தப்பெண்ணைப் பார்த்து நான் கலங்கியுள்ளேன். இயலாத தந்தை அந்தப்பெண்ணின் ஆசைகளை எப்படிப் பூர்த்திசெய்வார்..? அந்தப்பெண்ணும், தந்தை இப்படியிருக்கின்றாரே என எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார். ஆனால் இறைவன், அந்தப்பெண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுத்துள்ளார் என நம்புகின்றேன். அதேநேரம், அந்தப்பெண்ணின் தாயார், தனியொருவராய் தனது கணவரை எவ்வாறு தூக்கிச்சுமந்தார்..? படுக்கையில் விழுந்தவரை காப்பது என்பது சாதாரண வேலை கிடையாது..! படுத்த படுக்கையாகவுள்ள கணவரையும், பிள்ளையையும் தனியொரு ஆளாகப் பார்த்த அந்தத்தாயாருக்கு எனது சலூட்..!

சுடலைவரை சென்று மரணமானவர், தகனத்துடன் சங்கமிக்கும்வரை நின்று, எனது மன ஆதங்கத்தைத் தேற்றி, பின்னர் வீடுவந்து, மேலும் சில வளவு துப்பரவு செய்யும் வேலைகளைச் செய்து, குளித்து சாப்பிட்டு வெளிக்கிட, பஸ்ஸூக்கான நேரம், சரியாக இருந்தது..!

வழமையாக வரும் பஸ்ஸிற்குப் பதிலாக சற்றுப்பெரிய பஸ் வந்ததால், அநேகமாக அனைவரும் இருந்து வந்தார்கள்..! பயணத்தின்போது, தொடர்ந்து இருந்து வந்ததால் எனக்கு இடுப்பில் வலித்தது..! ஒருவாறு சமாளித்து, அலுவலகம் வந்தால் தண்ணீர் இல்லாத பிரச்சனை பெரும்பிரச்சனையாக மாறி வருத்தியது..!

பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் உதவியோடு, தங்குமறைக்குச் சென்று, தண்ணீர் பிடிக்கும் பாத்திரம், போத்தல் எனபவற்றைக்கொண்டு, வீதியருகே எமது பக்கத்திலுள்ள சோபியா லைன் நீரைப்பிடித்ததுடன், உடலையும் கழுவிக்குளித்து, ஒருவாறு இரவைச் சமாளித்தேன்.

அத்துடன் இரவு உணவையும் எடுத்துவிட்டு, இரவு 10 மணி தாண்டிப்படுத்து, இரவு 1மணி அளவில் எழும்பி நடக்கும்போது, காலில் ஏற்பட்ட ஒருவித வாதத்தால்  நடக்க முடியாமல் இருந்தது..! ஏசி குளிரில் படுத்ததால் வந்த விளைவு அதுவென்று நினைக்கின்றேன்..!

நாளை, என்னால் நடக்க முடியுமா என்ற பீதியோடு மீதிநேரத்திற்கு கண்ணயர, உடற்பயிற்சிக்கான அழைப்பு, தொலைபேசி வயிலாக வந்தது..!

துள்ளியெழுந்து நடக்க முயற்சித்தேன். நடக்கமுடிந்தது..! பின்னர் வழமைபோல் உடற்பயிற்சி செய்து, விடியும் முதலே காலைக்கடனை முடித்து, இரவு போல் வெளியே குளித்து, காலை 6 மணிக்கு முதலே அறைக்குள் வந்துவிட்டேன். பின்னர் மனைவியுடன் கதைத்துவிட்டு, படுத்தேன். ஏறக்குறைய காலை 7.00 மணிக்கு  எழுந்து, மோட்டர் திருத்தும் வேலைகளை பார்க்கச்சென்றேன். ஓரளவிற்கு எமது ஊழியரே, ஒருவாறு சமாளித்து, தண்ணீர் தொட்டியில் நீர் நிரப்ப ஏற்பாடு செய்தது பெரும்  ஆறுதலாக அமைந்தது. இருந்தாலும் ஒருவர் மேல் இன்னோருவரின் நம்பிக்கை இழந்ததன் காரணமாகப் பிரச்சனைகள் பெருக்கின்றன..!

தீர்வை  நோக்கிய வழியைவிட, பிரச்சனையை பெரிதாக்கும் வழிகளையே தூண்டுகின்றார்கள்..! இதனால் நன்மைகளைப் பெறமுடியாது. முரண்கள் தோன்றுவது அனைவரையும் பாதிக்கும். எமது  ஏனைய நல்ல சேவைகளையும் அவை முடக்கும்.

 

ஆ.கெ.கோகிலன்

07-07-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!