முசுறுகள் (Red/Fire Ants) ..!

 


 




சிலருடன் இயற்கை விரும்பி விளையாடுவது வாடிக்கை..! ஏன் என்று தெரியவில்லை..? பொறுத்தார் பூமியாழ்வார் என்பது போல் என்னையும்  இயற்கை  நினைத்துவிட்டதோ என்பது தெரியவில்லை..? ஆனால் விளையாட்டு தொடர்கின்றது..! ஆனால் சில சமயம் இயற்கையின் எண்ணங்களை என்னால் நிறைவேற்ற முடியாது போகின்றது..! நான் எல்லா உயிரினங்களையும் நேசிக்க விரும்பினாலும், என்னைக் கடிக்கும் நுளம்பைத் தூக்கிக் கொஞ்ச என்னால் முடியவில்லை..! அப்படியே கடித்துவிட்டுப் போகட்டும் என அன்பாய் இருக்கவும் இயலவில்லை. கடித்த நுளம்பை அடித்துக்கொன்றால் தான், நானே ஒரு பயனுள்ள மனிதாக எனக்குத்தோன்றுகின்றது.

இன்று எனதுவீட்டிலுள்ள செவ்வரத்தை மரங்களில் நிறைய முசுறுகள் கூடுகட்டி வசித்து வந்தன. பல நாட்களாகப் பார்த்தாலும் அவற்றை அழிக்க மனம் வரவில்லை. அந்தச் செவ்வரத்தை மரங்களில் பூக்கள் கூட ஆய்வதில்லை. ஆனால்  அவை பெருகிப்பெருகி கைவைத்தாலே பாய்ந்து ஏறிக்கடிக்கும் அளவிற்கு வந்துவிட்டன..! மனைவியும், பிள்ளைகளும் என்னைப்போல் பொறுத்து இருந்தார்கள். அவற்றை அழிக்கும்படி என்னிடம் ஒன்றும் குறைசொல்லவில்லை.

நான் யாழில் நிற்கும் நாளில் ஏதாவது அவர்களால் முடியாத வேலைகளைச் செய்வது வழக்கம். அவ்வாறே இன்றும் வாழைக்குலையை வெட்டி வைத்ததுடன், வேறுவேலைகள் சிலவற்றையும் செய்து கொஞ்சம் நேரம் இருக்க, முசுறுகளுக்கு ஒரு வழி பண்ணுவோம் என நினைத்து கைவைக்க பாய்ந்து பாய்ந்து கடித்தன..! கொலை வெறி தொடங்கியது..!



நானும் பாய்ந்து  பாய்ந்து அவற்றின் கூடுகளுடன் சேர்த்து வெட்டிக்கீழே போட்டேன். அவை விடவில்லை..! எனது  காலையும் பதம் பார்த்தன. பொறுக்க முடியவில்லை. ஓலைகளைக் கொண்டுவந்து போட்டு, தீயை மூட்டி அனைத்தையும் அதற்குள் போட்டி பொசுக்கினேன். தப்பி வந்தும் கடித்தன..! கடித்த இடத்திலேயே, அடித்து அவற்றைக்கொன்று, இன்றுமட்டும் பல ஆயிரக்கணக்கான உயிர்களை சொர்க்கத்திற்கு  அனுப்பினேன்.  அது மாத்திரமன்றி, நானும் நரகம் போறத்திற்கு தயாரானேன்.

மசுக்குட்டிகள், அணில்கள், எழும்புகள், புறாக்கள், தவளைகள், எலிகள், தவளைகள் என எத்தனையோ உயிரினங்கள் எமக்கு கண்ணுக்குத்தெரியாத எவ்வளவோ நன்மைகள்  செய்தாலும், சிறிய கஷ்டங்களை  கொடுப்பதால் அவற்றைக் கொல்ல மனம் தயாராகின்றது..!

இப்படியான கொலைகளைச் செய்பவர்களுக்கு அரசு என்ன தண்டனை கொடுக்கப்போகின்றது..?

மனிதனும், விலங்கும், ஏனைய உயிரினங்களும் ஏதோவோர் வகையில் இயற்கையால் பிணைக்கப்பட்டுள்ளன. தமது எல்லைகளை உணர்ந்து, ஒன்றுக்கொன்று பாதிப்பில்லாமல் இருந்தால், ஒருவேளை இவ்வாறான கொலைப்பழிகள் இல்லாது தவிர்க்கலாம்.

இருந்தாலும் நாம் நடக்கும் போதே எத்தனையோ ஆயிரம் உயிர்கள் மிதிபட்டு அழியக்கூடிய வகையிலேயே இயற்கையும் எம்மை படைத்துள்ளது..! நாம், அசையாமல், படுக்காமல், நடக்காமல் இருந்தால் ஒரு வேளை அவ்வுயிர்கள் தப்பலாம். ஆனால் சாத்தியப்படுமா..? அவ்வாறு இருந்தால் நாம்  தான் செத்துவிடுவோம்..!

ஆகமொத்தம், கொல்வதும், கொல்லப்படுவதும் இயற்கையானதே..! அதை ஏற்றுக்கொள்வதே கடினம்.

சட்டம் இயற்றியவர்கள் மனிதர்களை மாத்திரம் கவனத்தில் எடுத்து, நீண்டகால வாழ்வியல் அனுபவங்களூடாக அதனை உருவாக்கியுள்ளார்கள். தற்போது, மனிதர்கள் தாண்டி அடுத்த அடுத்த உயிர்கள் பற்றியும் சட்டங்கள் வரைகின்றார்கள்..! இன்னும் சில ஆண்டுகளில் அசையா உயிர்களான மரங்களை அழிப்பதும் கொடுமையான கொலைக்குற்றமாகப் பார்த்தாலும், சட்டமாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இவற்றின் போக்கு ஏனைய உயிர்களை காக்க அல்லது பாதுகாக்க எனவெளிக்கிட்டு, இறுதியில் இயற்கையின் சமநிலையைக் குலைத்து, மீண்டும் எல்லாம் அழிவதற்கே வழிகோலுவதாக அமையும்.

“கொன்றால் பாவம் தின்றால் பொச்சு” என்பது போல் அற்ப உயிர்கள், செய்யும் அற்ப நடவடிக்கைகள், நீண்ட காலமாக எம்மை அவதானிக்கும் இயற்கையை ஒன்றும் செய்ய முடியாது என்பது மட்டும் உண்மை.

 


ஆ.கெ.கோகிலன்

21-07-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!