பாசக்கண்ணீர்..!
இன்று காலை எனது தாயார் வீட்டிற்குப்போக வெளிக்கிட்டேன்.
அதற்கு மகளையும் வெளிக்கிட்டு வரசொன்னேன். தற்போது மூத்த மகள், தனது பரீட்சை முடிவு
நினைத்த மாதிரி அமையவில்லை என்பதால் சற்று வருத்தத்துடன் காணப்பட்டார். முதலே இது தெரியும்
என்றாலும் ஒருவருடைய எதிர்பார்ப்பு மாறும்போது கவலை வரும்தானே..! இதனை மாற்றுவது அல்லது குறைப்பது பெற்றோரின் கடமை.
மனம் உடைந்த நிலையிலே பிள்ளைகளைக் கூடக்கவனிக்க வேண்டும். இல்லையேல் அன்பான மற்றும்
நாட்டிற்கு பயனுள்ள பிரஜையை நாமே நாசம் பண்ணியதாகப் போய்விடும்.
எனவே படிப்பதற்கு நான் ஒன்றும் உதவுவதில்லை என்றாலும் இப்படியான
சூழலில் இருந்து மீள அவர்களை வழமையான ஓடும்பாதையில் கொண்டுவந்து விடுவதை முக்கிய கடமையாக
உணர்கின்றேன்.
அந்தக்கடமையின் நிமிர்த்தம், நேற்றே மகளிடம் அப்பம்மா வீட்டுக்குப்
போக முடியுமா எனக்கேட்க, அவரும் சம்மதித்தார்.
அதனால் தான் இன்று அவரால் வரக்கூடியதாக இருந்தது.
சில சமான்களை எடுத்துக்கொண்டு இருவரும் எனது மோட்டார் சைக்கிள்
பக்கம் சென்று ஸ்ராட் செய்தேன். இயங்க மறுத்தது..! பலமுறை உதைத்து உதைத்துப் பார்த்தேன்
முடியவில்லை. மகளும் வெளிக்கிட்டு, அருகில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்தார். ஏறக்குறைய
15 நிமிடங்கள் பலவாறு
முயன்றேன். முடியவில்லை..! திருத்தவும் வழியில்லை ஏனென்றால்
இன்று ஞாயிறு..! முன்னுள்ள கடையும் பூட்டு. அதே நேரம் இன்று மாலை திருகோணமலை வெளிக்கிடவேண்டும்.
மகளுக்கும் ஒரு வகுப்பு உண்டு. தாயாரும் இயலாத நிலையில் ஒரு மருந்தையும் வாங்கிவரச்சொன்னார்.
எல்லாம் சரியான வழியில் நிறைவேற்றினால் தான் நிம்மதி..!
மகளும் தன்னால் இயன்ற வகையில், தள்ளியும், கிக்கரை உதைந்தும்
பார்த்தாள். முடியவில்லை.
முதலே மகளிடம் கேட்டேன் காரில் போவோமா என்று..! வேண்டாம்
அப்பா..! எனக்கு ஒரு மாதிரியிருக்கு..! மோட்டார் சைக்கிளிலே போவோம், என்றாள். அதனால்
தான் இவ்வளவு முயற்சியும் போட்டோம்.
சரிவரவில்லை. பின்னர் காரில் வெளிக்கிட்டோம். போகும்போதே
சொன்ன வேலைகளைச் செய்துகொண்டு போனோம். மகள் தான் வந்ததால் தான் இப்படியான துன்பம் வருகின்றது
எனச்சங்கடப்பட்டாள். இல்லை..! இந்த சமூகத்தை நாம் முகம்கொடுக்க வேண்டும். ஒன்றிற்கும்
கலங்கக்கூடாது. முயற்சியைத் தொடரவேண்டும். அவ்வளவு தான். யார் என்ன சொன்னாலும் உன்னைப்பற்றி
உனக்கு நன்கு தெரியும். எனக்கும் தெரியும். கலங்காதே எனச்சொல்லியபடி காரிலுள்ள ரேடியோவைக்கூட்ட
இன்று தந்தையர் தினம் என்று சொன்னது..!
மகள் என்னை வாழ்த்தினாள். இப்போது புரிந்தது..! ஏன் மோட்டார்
சைக்கிள் ஸ்ராட் ஆகவில்லை என்று..!
தாயாரைப் பார்க்கும் போது அழுதாள். எனக்கும் அழுகை வந்தது..!
அங்கிருந்தவர்களும் கலங்கினார்கள். நானே, அவளைத்தேற்றி, ஒரு அந்தம் பார்த்தாகிவிட்டது.
மறு அந்தம் பார்க்க முயற்சி செய் என அவளை ஊக்கப்படுத்திவிட்டு வந்தேன்.
கச்சான் போட்டதால் தம்பியும் வயலில் காவலுக்கு நிற்க, அவரின்
மகள், ஒருநாளும் இல்லாமல் இன்று, தந்தைக்கு உணவுகொண்டு போனதும், தந்தை மகளுக்கான பிணைப்பை
இன்னும் அதிகரிக்கவே..!
எல்லாரிடமும் விடைபெற்று குறித்த நேரத்திற்குள் வீடுவந்து,
எனது கடமைகளையும் நிறைவேற்றினேன்.
அன்பே உலகமகா சக்தி. அன்பைக்கொடுப்போம், சக்தி கிடைக்கட்டும்.
ஆ.கெ.கோகிலன்
09-06-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக