சப்றா..!

 



சில விடயங்கள் மக்கள் மனங்களில், என்றும் மறக்க முடியாத வடுவாக பதிந்து, எந்தக்காலத்திலும் அந்தப்பெயரைக் கேட்டால் கவலையையும் வருத்தத்தையும் கொண்டுவந்துவிடும். அப்படிப்பட்ட ஒரு விடயம் தான் சப்றா..!

எனது குடும்பத்தில் பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி, வெளிநாட்டு வாழ்க்கையே வெறுக்குமளவிற்கு கொண்டுவந்துவிட்டது..!

1980களில் எனது  தந்தையார் இலங்கை போக்குவரத்து சபையில் வேலைசெய்தவர். தாயார் வேலையில்லை, ஆனால் படித்தவர். எனக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருக்கின்றார்கள்.  1980களில் எனக்கு ஏறக்குறைய 10 அல்லது 11 வயது இருக்கும்.  எனது தந்தையார், தாயாரிடம் “தாலிக்கொடியை தா..” அதனை விற்று வரும் காசை “சப்றா” என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் நிறைய வட்டிவரும். அதோடு தனக்கு கிடைக்கும் சம்பளம் தாண்டி ஒரு தொகைப்பணம் கையில் இருந்தால் குடும்பத்திற்கு உதவும் என்றார்..! எனது தந்தையார் நன்றாகப் படித்தவர்.  மூன்று மொழியிலும் வல்லவர். உண்மையில் நல்லவர். ஆனால், மதுவுக்கு அடிமையானவர்..!

இது, அம்மாவிற்கு அவ்வளவு ஆரோக்கியமான யோசனையாக  இருக்கவில்லை. இந்தப் பேச்சுக்கள் சில காலம் வீட்டில் ஓடியிருக்கும்..! ஒரு கட்டத்தில் அம்மாவும், அவரது பேச்சிற்கு இணங்கித் தனது தாலிக்கொடியை கொடுத்தார். அப்பாவும் அதனை விற்று, அந்தப்பணத்தை குறித்த சப்றா என்ற அந்த நிறுவனத்தில் முதலிட்டார். சில மாதங்கள் ஓடின..!

அந்த நிறுவனத்தைப்பற்றிப் பல கதைகள் வந்தன..! எனது வைத்திய மாமியின்  தமக்கையின் மகளும், அவரது காதலனும் (பின்னர் கணவர்) அங்கே வேலை செய்தார்கள்.  ஒரு சில மாத வட்டிக்காசுகள் கொஞ்சம் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். அதனை எடுத்து தேவைக்குச் செலவு செய்துள்ளார்கள். அப்பா மதுவுக்கு அடிமை என்பதால், தனது சம்பளத்தை மதுவுக்கே தாரைவார்த்துவிடுவார்..! எனக்கு மதுவில் ஆர்வம் இல்லாததற்கு இது தான் முதல் காரணம். வீட்டிற்கும் அப்பாவின் காசு வராது. அம்மாவின் நிலை கடும் கஷ்டம் தான். கிடுகு பின்னி விற்பது, தேங்காய் விற்பது, பொச்சுமட்டை விற்பது இப்படிச் சிறுசிறு வேலைகளை நாமெல்லாம் செய்தோம்..! 

சப்றா வட்டிக்காசு கொஞ்சம் வருவது, அம்மாவின் கஷ்டத்தை கொஞ்சமாவது குறைக்கும் என்பதால் அது எமக்கு சற்று சந்தோசம். ஆனால் அது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. திடீரென நிறுவனத்தை மூடிவிட்டு மக்களின் பணத்தைச் சுருட்டிக்கொண்டு, அந்நிறுவனத்தினர் ஓடிவிட்டார்கள்..! இந்தச்செய்தி மக்கள் வாயிலாகப் பரவியது..! அம்மாவிற்கு தலையில் இடிவிழுந்தது போலிருந்தது..! அப்பாவிற்கும் அந்தச்செய்தி கசப்பாக இருந்தாலும் அவரது குடியால், அது அவரது முகத்தில் வெளிப்பட்டதாகப்படவில்லை. இந்த நிலையில் அம்மா எப்படி எங்களைச் (நான்கு பிள்ளைகளையும்) சமாளிப்பார்..?  சொந்த உறவுகளிடம் சில உதவிகள் கொஞ்ச நாளைக்குக் கிடைத்தாலும், அது தொடரவில்லை..! அந்தக்காலங்களில்  சில உறவுகள் கூட எம்மை ஒதுக்கத்தொடங்கின..! சேர்த்தால் ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்களோ தெரியாது. ஆனால் எனக்கு அப்படியான எண்ணமே மனத்தில் ஓடியது..!

அதே சமயத்தில் குடும்பச்சூழல் தடுமாறியதால் அப்பாவின் அடுத்த முடிவும் எம்மைத் தூக்கிவாரிப்போட்டது..! அந்த நேரத்தில் நாட்டில் இருந்து பலர் வெளிநாட்டிற்குப் போய்கொண்டு இருந்தார்கள். அப்பாவிற்கு, எமது கஷ்டம் புரிந்ததோ அல்லது மற்றவர்களைப் பார்த்து முடிவெடுத்தாரோ தெரியவில்லை, ஆனால் முடிவு எடுத்துவிட்டார். ஏற்கனவே இருந்த தாலிக்கொடி கூட விற்றுத்தொலைந்தாகிவிட்டது..! இதற்கு எப்படிப் பணம் திரட்டுவது என எண்ண, அப்பா சொன்னார் தான் தனது வேலையை விட்டால்  EPF  மற்றும் ETF என்னும் சேமலாபநிதியைத் தருவார்கள். அதனைவைத்து, Agency  இற்கு பணத்தைக்கொடுத்தால் சில வாரங்களில் அவர்கள் வெளிநாட்டில் கொண்டுபோய் விடுவார்கள் என்றார்.  இதன் விபரங்கள் விளங்காவிட்டாலும் அப்பா வெளிநாடு போனால் நிறையக்காசு வரும். அதை வைத்து அம்மாவும் நாங்களும் சந்தோசமாக இருக்கமுடியும் என நம்பினேன். ஊரில் அவ்வாறாகப்  பலர் இருந்தார்கள்.

எனக்கும், குறிப்பாக அப்பிள் சாப்பிடலாம் என்ற ஆசை  அந்தநேரத்தில் மேலோங்கியிருந்தது..! அந்தநேரத்தில் என்னுடன் படித்த சில மாணவர்கள் தாம் அப்பிள் சாப்பிட்டதைப் பெருமையாகச் சொல்வார்கள். இலங்கையில் அப்பிள் அப்போது கிடையாது. அல்லது எமக்குக் கிடைப்பதில்லை..! அப்படியான பொருளாதார நிலமை வீட்டில் இருந்தது. இந்தசமயத்தில்  பல சந்தோசக்கனவுகள் வந்துகொண்டிருக்க, குறித்தவோர் நாளில் அப்பா வெளிநாடு வெளிக்கிட்டுச்சென்றார்..!

பெரிய சூட்கேஸ் பெட்டியில் புது உடுப்புக்கள் வைத்து, நாமெல்லாம் கையசைக்க, ஒரு காரில் என்று நினைக்கின்றேன், ஏஜென்ஸி வந்து அவரைக்கூட்டிச்சென்றார்கள்..!

நாட்கள் நகர்ந்தன..! அப்போது கைபேசிகள் இல்லை.! கடிதங்கள் மட்டும் தான். அந்நேரம் தொலைபேசி இருந்தால், அவர்கள் தான் ஊரில் மிகப்பெரிய மனிதர்கள்..! எனக்குத்தெரிய அப்படியொருவரும் எமக்கு அருகில் இல்லை..! அந்தக்காலத்தில்  தான் தமிழ் இயக்கங்களும் பல்கிப்பெருகின..! யூலைக்கலவரங்கள் நடந்தேறின..!

இடம்பெயர்வுகளும், இனவழிப்புக்களும் அரங்கேறின..!  வீட்டில் கஷ்டம் தீராது தொடர்ந்து கொண்டிருந்து..! அப்பாவின் கடிதம் பல மாதங்கள் ஆகியும் வரவில்லை. அப்பாவிற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. மாதங்கள் வருடங்கள் ஆனது..!

அப்படியான சூழலில், எனது தாயின் அண்ணன் ஊடாகச் செய்தி ஒன்று வந்தது. அது, அப்பா தற்போது கொழும்பில் நிற்பதாகவும் ஊருக்கு வர  வெட்கம் காரணமாக அஞ்சுவதாகவும், சிங்கப்பூர் வரை கூட்டிச்சென்று ஏமாற்றிவிட்டு ஏஜென்ஸிக்கார்கள் ஓடிவிட்டதாகவும், ஏதோவோர் வழியில்  கொழும்பு வந்து எங்கேயோ தங்கியிருப்பதாகவும் தகவல் வர, நாம் அனைவரும் அரண்டு விட்டோம்..! எல்லாப்பணமும் எம்மைவிட்டுப்போக, நாம் எப்படி வாழ்வது என்ற கேள்வியே எம்மை மேலும் மேலும் பயமுறுத்தியது..! அம்மாவும் கலங்கினார். எப்படிப் பிள்ளைகளை வளர்க்கப்போகின்றேன் என பயப்பட்டார்..?  அப்பிள் சாப்பிட ஆசைப்பட்ட எனக்கு, அன்றாடம்  சோறு சாப்பிடவே சிக்கல்வந்துள்ளது..!  எனது ஒன்றைவிட்ட தம்பிக்கு, அவரது அப்பா கொடுத்த அப்பிளை, அவன் சாப்பிடும்போது ஏங்கிய நினைவு இன்றுவரை பதிந்துள்ளது..! யாரையும் குறைசொல்ல முடியாது..! ஆனால் அது கிடைக்கவில்லை..! ஆனால் அப்பிள்   பஞ்சுமாதிரியும் நல்ல சுவையாகவும் இருக்குமென்று அப்போது நினைத்தேன்..! எனது அந்தத்தம்பியும் காட்டிக்காட்டி தின்றபோது, அந்தவீட்டில் ஒருவரும் என்னைப்பற்றி நினைக்கமுடியாத அளவிற்கு நாம் கேவலமான நிலையில் இருந்தோம்..!

இதற்கு முதல் காரணம் எனது அப்பாவின் பொறுப்பற்ற குடிப்பழக்கமும்,  ஏமாறும் இயல்பும்..!

அன்றிலிருந்து இன்றுவரை எனக்கு வெளிநாட்டு ஆசையே வரவில்லை என்றால்  அதற்கு முதலும், முடிவுமான காரணம் இந்த எதிர்பார்ப்பின் ஏமாற்றம் தான்..! என்னைப்போன்று எனது தம்பிகளும், தங்கையும் இந்த வலியை உணர்ந்தார்களோ தெரியாது. அவர்கள்  என்னை விடச்சின்னவர்கள்..! அம்மாவின் கஷ்டநிலையைக் காதுகொடுத்துக்கேட்பது நான் தான். அம்மாவைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். எப்படியோ இருக்கவேண்டியவர் இப்படியிருக்கின்றார் என வேதனையாக இருக்கும். இவையெல்லாம் எனது 15 வயதிற்குள் நடந்து முடிந்துவிட்டன..!

இதேவேளை கடவுள் புண்ணியத்தால், அம்மாவின் பெரிய அண்ணன் துணை மூலம், குண்டசாலையில் படித்த விவசாய டிப்ளோமா பட்டத்தால் ஆசிரியர் வேலை அம்மாவிற்குக் கிடைத்தது..! அம்மாவின் தயாவால் மெல்ல மெல்ல நாம் வளர்ந்து வந்தோம்.  குடும்பக் கஷ்டங்களும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது.

இவ்வளவும் எழுதத்தோன்றியது.. முகப்புத்தகத்தில் பார்த்த “சப்றா” என்ற நிறுவனத்தை நடாத்தியவரும், “உதயன்” பத்திரிகை உரிமையாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணபவாணந்தன்  என்றவோர் சுயநல மனிதனின் செயற்பாட்டாலே என்றால் நம்ப முடியுமா..? அது தான் உண்மை. ஏமாற்றியவர் அவர். ஏமாந்தவர்களில் நாமும் ஒருவர். பின்னர் தான் தெரிந்தது திருமண உறவுகளினூடாக எனக்கு ஒருவிதத்தில்  தூரத்து  உறவாகத்தெரிகின்றார்..!

அதேபோல், கல்லடிவேலரின் உறவினரான, அவரது வசாவிளான்  என்ற ஊரைச் சேர்ந்த, கதிர்காமநாதன் என்பவர் தான் அப்பாவை ஏமாற்றிய ஏஜென்ஸிக்காரன்..! 

இப்படி ஊரை ஏமாற்றிப் பிழைத்தவர்கள் வாழும் இந்த நாட்டில், நேர்மையாக வாழும் நாம் ஏன் வாழ முடியாது..? ஏன் நாட்டைவிட்டு ஓடவேண்டும். நாடு வளம் பெற முனைவோரோடு நாமும்  கைகோர்ப்போம்.

 

ஆ.கெ.கோகிலன்

11-07-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!