பஸ் நடத்துனர்..!

 



இந்தக்கிழமை யாழ்ப்பாணம் போகாமல் நிற்க முதலில் தீர்மானித்தாலும் பின்னர் வெள்ளிக்கிழமை நெருங்க நெருங்க மனம் மாறி இறுதியில் போவோம் என்ற எண்ணம் வலுத்துவிட்டது.

வழமைபோல் கடமைகளைச்செய்து, கன்ரீனிலும் சமோசா பார்சல் ஒன்றையும் எடுத்துக்கொண்டு, மாலைக்குறுலீவையும் எடுத்துக்கொண்டு பஸ் தரிப்பு நிலையம் வந்து பஸ்ஸிற்கு காத்திருந்தேன். வழமையாக எனது நேரக்கணிப்பீடு தவறுவது கிடையாது. நான் கணிக்கும் நேரத்திற்கு அமைவாக பஸ் வந்துசேர்ந்துவிடும். என்னுடன் அந்த பஸ் தரிப்பு நிலையத்தில் மேலும் சில மனிதர்களும் காத்திருந்தனர்.  அவர்கள் பஸ்ஸை எதிர்பார்க்கும் அதேவேளை அந்தப்பகுதியில் உள்ள ஒரு கோவிலைப்பற்றியும், அதன் சக்திபற்றியும் பெருமையாகப் பேசிக்கொண்டார்கள். அதிலும் குறிப்பாக நம்பிக்கையோடு, அந்தக்கோவிலை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது போல் பேசிக்கொண்டார்கள். அவர்களில் ஒரு வாலிபன் சாவகச்சேரியில் இருந்து,  அந்தக்கோவிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு எம்முடன் யாழ்வரக் காத்திருந்தார்..!

பஸ் சற்றுத்தாமதத்துடன் வந்தது. வழமைபோல் கூட்டம் அதிகம். அதுமாத்திரமன்றி, இந்த பஸ் வழமையான பஸ்ஸைவிட சின்னது..!

சரியாக இருப்பதற்கு சீற்றுக்கள் போதாது. வவுனியாவரும் வரை சீற் கிடைக்கவில்லை. வவுனியா வந்து, கொஞ்சத்தூரம் இருந்ததும், எனக்கு பின்பக்கம் வலித்தது. அந்நேரம் குழந்தையுடன் ஒரு தாய் நிற்கக்கண்டு, அவர்களை கூப்பிட்டு இருத்திவிட்டு, நான் எழுந்து நின்றேன்.

ஆரம்பத்தில் இருந்து இந்த பஸ் நடத்துனரின் நடத்தைகள் சற்று வேறுபட்டு இருந்தது..! பின்னர் புரிந்தது, நன்றாக மது எடுத்துள்ளார் என்பது..! அதுமாத்திரமன்றி, அவரின் கதைகள், தூசனம், பஸ்ஸிற்குள் இருந்துகொண்டு துப்புவது, தண்ணீர் குடிப்பது, பின்னர் வாயைக் கொப்பளிப்பது..!, ஒரு இடத்தில் நிற்கமுடியாமல் தடுமாறிக்கொண்டிருப்பது, ஏறும் பயணிகளிடமே இது எந்த இடம்..? என்று கேட்பது, எல்லாமே எனக்குக் கடுப்பாக இருந்தது. ஒரு காலத்தில் எனது தந்தையாரும் நடத்துனராக இருந்துள்ளார் எனக்கேள்விப்பட்டுள்ளேன். அவரும் மதுவுக்கு அடிமையாகி, அவரின் செயற்பாடுகள் பார்த்து  வெறுத்து வளர்ந்துள்ளேன்.  இந்த நடத்துனரைப் பார்க்க, எனக்கு மது அருந்தித் திண்டாடும் தந்தையையே நினைவுக்கு வந்தார். ஏறக்குறைய அவர் இறந்து 25 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. சில செயற்பாடுகளால் ஏற்பட்ட  வெறுப்பு இன்றுவரை மனதில் நிற்கின்றது..!  எப்படி மது அருந்திவிட்டு பணியாற்ற அனுமதித்தார்களோ தெரியவில்லை..? அவரின் நிலையைப் படம் எடுத்து முகாமையாளருக்கும், பத்திரிகைக்கும் அனுப்ப நினைத்தேன். அரச கடமையில் இருக்கும் போது, மது அருந்துவதை தடைசெய்யும் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும்.  அன்று ஒரு நாள், யாரோ ஒருவர் குடித்துவிட்டு வந்ததற்காக பஸ் அரைமணித்தியாலத்திற்கு மேல் நேரத்தை விரயப்படுத்தி, அந்த நபரை இறக்கிவிட்டுச் சென்றது. இன்று நடத்துனரே குடித்துவிட்டு வந்தால் என்ன செய்ய..?

எனக்கு ஒரு கட்டத்தில் ஏசத்தோன்றியது. பின்னர், எல்லோரும் பொறுமையாக இருக்க நான் மட்டும் அவரப்பட்டு ஏசுவது, இறுதியில் அவரை விட நான் குற்றவாளியாக வாய்ப்புண்டு எனநினைத்துப்பொறுமை காத்தேன். இறுதியாக அவர், தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், புதிதாக இந்தவீதியில் சேவைக்கு வந்ததாகவும் அறிந்துகொண்டு, சற்று இரக்கப்பட்டேன். இறுதியாக ஏதோ ஜோக் அடிப்படிபோல் பேசினார். எனக்கு சிரிப்பே வரவில்லை. கடுப்பாக இருந்தது.

“செய்யும் தொழிலே தெய்வம்..” அதனை தங்களால் இயன்றவரை சிறப்பாகச் செய்ய முயற்சிக்க வேண்டும். அரசையும் வெறுத்து, மக்களையும் வெறுத்துச் சேவை செய்வதால், என்ன பலன் வந்துவிடப்போகின்றது..?

தொழிலை விரும்பிச் செய்யுங்கள்..! இல்லை என்றால் விட்டுவிட்டு விரும்பிய தொழிலைச் செய்யுங்கள்.

அது தான் அனைவருக்கும் நல்லது.

 

ஆ.கெ.கோகிலன்

12-07-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!