வயது 125..!
நான், சின்ன வயதில் மரணத்தைக்கண்டு பயப்படுவது உண்டு. மரணமே வரக்கூடாது என்று நினைப்பவன்..! யாராவது இறந்துவிட்டால் அவர்களை எப்படி இறக்காமல் காப்பது..? அல்லது இறந்து மரணமானவரை எப்படி மீண்டும் உயிர்பிப்பது என நினைப்பேன்..? இந்த நினைவுகளுடனே வளர்ந்தேன்..! மரணம் எனக்கு வேண்டாம். நான் மரணமானவர்களைப் பார்ப்பதோ அல்லது அது தொடர்பாகக் கேட்பதோ இல்லைக்கதைப்பதோ கிடையாது. அவ்வளவு பயமும் மரியாதையும் மரணத்திற்கு கொடுத்திருந்தேன்..!
நான் இளைஞனாக இருக்கும் சமயத்தில், திருகோணமலை தொழில்நுட்பக்கல்லூரி
மற்றும் உயர் தொழில்நுட்பவியல் நிறுவனம் என்பவற்றில் வருகைதரு விரிவுரையாளராக கடமையாற்றும்
சூழல் அமைந்தது. அந்தநேரம் நாட்டில் யுத்தம்
நடந்துகொண்டிருந்தது. எங்கு செல்வது என்றாலும் தேசிய அடையாள அட்டை தான் வேண்டும்.
அந்த அளவிற்கு அது உயிர் போல இருந்தது..! இந்த இரு நிறுவனங்களிலும் மாணவர்கள் சுற்றுலா
போகவேண்டும் என்றால் என்னையும் கேட்பார்கள் பொறுப்பாக வரச்சொல்லி..! நானும் அவர்களுடன்
பல தடவைகள் சென்றுவந்துள்ளேன்..!
அப்படி ஒரு தடவை கதிர்காமம் போய், பின்னர் செல்லக்கதிர்காமம் வரும்போது, வந்த பஸ் பழுதாகி ஏறக்குறைய ஒரு நாளுக்கு மேல் செல்லக்கதிர்காமத்திலே நிற்கவேண்டிய சூழல் ஏற்பட்டது..! அந்த சமயம் மாணவர்கள் எல்லோரும் நேரத்தைப் போக்குவதற்காகவும், பஸ் சரியாகும் வரை அங்கிருந்து பல செயற்பாடுகளில் ஈடுபட்டனர்..! நானும் எனது நண்பர்களும் அவர்களுடன் இணைந்துகொண்டோம்.
அப்போது, மாலை மங்கும் வேளை ஒரு வயதான நபர்
என்னைப்பார்த்து உங்கள் கையைப் பார்க்க வேண்டும் என்றார்..! என்னுடன் பல மாணவர்களும்,
சில நண்பர்களும் அங்கே சுவாரசியமாகக் கதைத்துக்கொண்டு இருந்தார்கள்..! அந்த ஜயா, என்னைப்பார்த்து, “கதிர்காமக்கந்தன் தான் பார்க்கச்சொல்கின்றார்
..! வந்து கையைக்காட்டுங்கள் என்றார்..!” நான் எனது நண்பர்களிடம் நீங்கள் போய் கையைக்கொடுங்கள்,
அந்த ஜயா பார்க்கட்டும் என்று சொல்ல, சிலர்
கையை நீட்டினார்கள். அவரும் ஏதோ சொன்னார். பின்னர் என்னைப் பார்த்தார்..! மீண்டும்
கையை நீட்டச்சொன்னார். மற்றவர்களும் என்னைப் பார்த்தார்கள்..! நானும், சற்று சங்கடப்பட்டுக்கொண்டு கையை நீட்டினேன்.
அப்போது ஏதாவது காசு கேட்கத்தான் என்னை கேட்கின்றாரா
எனக்கூட நினைத்தேன். ஆனால் ஒன்றும் பேசாமல், கையைப் பார்த்து, உங்களுக்கு லக்ஸ்மிகடாட்சம்
இருக்கின்றது..! உங்களுக்குப் பணக்கஷ்டம் வராது..!
நீங்கள் எப்படி என்றாலும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருப்பீர்கள்..? குறிப்பாக
உங்களுக்கு மிக மிக நீண்ட ஆயுள் உண்டு..! 120 தாண்டியும் இருப்பீர்கள் என்று அந்த ஜயா
சொல்ல மற்றவர்கள் சிரித்தார்கள்..! நானும் சிரித்தேன்..! ஜயா ஏதோ எதிர்பார்த்து அப்படிச்சொல்கின்றார்
என நினைத்தேன். நண்பர்களும் கிண்டலடிக்க, நான் அவருக்கு ஒன்றும் கொடுக்கவில்லை..! இருட்டும்
வந்துவிட்டது..! அவருக்கு ஏதாவது சில்லறை கொடுக்கலாம் என்று தேட முன்னரே அவரைக்காண
முடியவில்லை..! அங்கும் இங்கும் மக்கள் கூட்டமாகக் கூடும் இடங்களைத்தேடிப்போய் பார்த்தேன்,
காணவில்லை..! எங்கே போனார்..? பறந்து போனாரோ.. அல்லது மறைந்தாரோ.. என எண்ணினேன்..!
அந்த நிகழ்வு நடந்து ஏறக்குறைய 30 வருடங்கள் கடந்திருக்கும் இன்னும்
எனது ஆயுட் 120 என்ற எண்ணம் வரும்போது சற்று பயமும், துணிவும் வரும்..!
பின்னர் எனது திருமணப்பேச்சுக்களின் போது குறிப்பு பார்க்கும் சமயத்தில்,
48 வயது தாண்டினால் போதும்..! பின்னர் நீண்ட ஆயுள் இருக்கும் என்றார்கள்..!
நான் 48 வயதைக்கடக்கும் போது, நாளை எழும்புவேனா என்ற பயத்துடனே இருந்தேன்.
ஒருவேளை இறந்தாலும் நல்லது என்றே அந்த நேர மனவுணர்வு சொன்னது..!
ஆனால், குறிப்பில் சொன்னது பலிக்கவில்லை..!
48 கடக்க, ஒரு புதிய இரட்டை வீட்டைக்கட்டி முடித்தேன்..! பணிப்பாளர் பதவி வந்தது..! அதுவும்
திருமலை கேட்க, யாழ்ப்பாணமே வந்தது ஆச்சரியம் தான். எல்லாம் நன்மைக்கே என்று இருந்தேன்.
காலம் உருண்டோடியது..! யாழ்ப்பாணத்திலேயே கடைசிவரை இருந்துவிடுவேனோ என்ற சலிப்பு சற்று
ஏற்பட, திருமலை மீண்டும் வந்தது..!
திருமலையில் வந்து, பல விதமான அனுபவங்களைக் கடந்து, வாழ்க்கைப் பயணம்
நடந்துகொண்டிருக்க, பல மணிநேர உறக்கமின்மையால், வந்த கடும் நித்திரை, என்னை எங்கோ கொண்டு
சென்றது..!
அங்கே நான், வயதான நிலையில் 125 ஆவது பிறந்த தினத்தைக்கொண்டாட இருக்கும்
போது, என்னைச் சூழ இருப்பவர்களைப் பார்க்கின்றேன்..! எனது அம்மாவைக்காணவில்லை..!, மாமாக்களைக்
காணவில்லை, என் அன்பு மனைவியைக் காணவில்லை..! அருமைப் பிள்ளைகள் உருமாறியிருக்கின்றார்களா..? தெரியவில்லை..! அல்லது
அவை பேரப்பிள்ளைகளா..? பூட்டப்பிள்ளைகளா..?
என்பதும் தெரியவில்லை..! பலர் இருக்கின்றார்கள்..! என்ன தான் உற்று உற்றுப் பார்த்தாலும், எனக்கு யாரும்
நினைவுக்கு வரவில்லை..! முதலில் மனைவியைத் தேடுகின்றேன்..! என் கண் தெரியும் தூரம்
வரை தென்படவே இல்லை..! மனம் வாடுகின்றது..! நான் 125 வரை இருந்து என்னத்தைச் செய்யப்போகின்றேன்..!
என்னுடன் கூட இருந்தவர்களைக் காணவில்லை..! 500 வரை இருந்து என்ன..? 1000 வருடங்கள்
இருந்து என்ன..? 2000 வருடங்கள் இருந்து என்ன..? இந்த வயதிலேயே எனக்கு நிம்மதி இல்லாமல் தவிக்கின்றேன்..!
உலகம் பல பரிமாணங்களைக்கண்டு, புதுப்புது மனிதர்களைக் கண்டு போகும்,
வேகத்தில் எனது வயது கூடுகின்றதே தவிர, கண் மூடுவதாக இல்லை..! என்ன தான்
முதிர்ச்சி அல்லது தளர்ச்சி இருந்தாலும் நினைவும், எண்ணங்களும் இந்த உலகத்தை வீட்டுப்போகவே
விரும்புகின்றது..! ஆனால் அது நடைபெறுவது போல்
தெரியவில்லை..! ஒரு சமயம், அசுவத்தாம சாகாவரம் பெற்று இந்தப்பூமியில் அழுந்தி அழுந்தி
மரணம் வராமல் அவதிப்படுவதுபோல தான் எனக்கும் எழுதப்பட்டுள்ளதா..?
120 கடந்தாலும் மரணமே இல்லையா..? இப்பவே தெரிந்தவர்களையும், அன்போடு
பழகியவர்களையும் காணாமல் தவிப்பதே, பெரிய கொடுமை..! இன்னும் எனது எண்ணங்களையும், ஆசைகளையும் கேட்டு,
என்னோடு துணையாக இருக்க, கதைக்க இறைவன் ஒருவரையும் கொடுக்காதது, எனக்குப் பெரிய தண்டனையாக
இருந்தது..! குறைவான ஆயுளோடு இருப்பது என்பதே
மிகப்பெரிய புண்ணியம் எனப்புரிந்தது..!
இந்தப்பூமியை விட்டு, வாழ்வு என்ற பூமிச்சிறைச்சாலையில் இருந்து எவ்வளவு
விரைவாக விடுதலை கிடைக்கின்றதோ அவ்வளவு புண்ணியம்
நாம் செய்துள்ளோம் என எடுத்துக்கொள்ளலாம். எனக்கு அந்தப்புண்ணியம் கிடைக்காதா என ஏங்குகின்றேன்..!
மரணத்தை விரும்புகின்றேன். துன்பங்கள், துயரங்கள்,
ஏமாற்றங்கள், பொய்கள், களவுகள், துரோகங்கள், குரோதங்கள் இவற்றைக்காணாது மரணத்தை மட்டுமே விரும்புகின்றேன்..!
சின்ன வயதில் எதனைக்கண்டு பயந்தேனோ..? எது வரக்கூடாது என்று மருண்டேனோ..? எந்த வார்த்தையைத் தவிர்த்தேனோ..? அதனையே தொடர்ந்து
உச்சரிக்கின்றேன். அன்பான, அனைவருக்கும் நன்மைசெய்யும் மரணமே விரைவாக வா..! எனக்கு
கொடுத்த இந்த 125 வருடங்களா..? அல்லது 2000
வருடங்களா தெரியவில்லை..! தண்டனை போதும்..! போதும்..! என் கண்கள் மூடவேண்டும். மூச்சு நிற்க வேண்டும்..!
எழும்பாமல் தொடர்ந்து படுக்க வேண்டும்..! மரணமே வா..! மரணமே வா..! என்று முனக முனக
கண்களில் நீர் சொரிகின்றது..!
வியர்வை நீரா..? அல்லது கண்ணீரா..? எந்த நீர் என்று சொல்ல முடியாமல்
மெத்தையே ஈரமாக இருக்கின்றது..! நான் திருமலையில், கட்டிலில் இருந்து முனகுகின்றேன்..! கடும் கனவு..!
55 ஐத்தாண்ட முன்னர் 125ஐத்தாண்ட
வைத்துவிட்டது இந்தக்கனவு..!
மரணம் என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். மரணம் வருவதே பணம் வருவதைப்போன்றது..!
அதிஷ்டம் வருவதைப்போன்றது..! இதை உணர சிலருக்கு ஆயுளே போதாது..! வேறு சிலருக்கு சில
வருடங்களே போதும்..! நான் எந்த வகை என்பதையும், எனக்கு என்ன நடக்கும் என்பதையும், என்னைவிடுத்து
மற்ற அனைவருக்கும் என்ன நடக்கும் என்பதையும் காலமே அறியும்..!
இயற்கை, அந்தக்காலத்தையும் சேர்த்து அனைத்தையும் அறியும்..! என்னைப்பொறுத்தவரை
நான் இயற்கையிடம் சரணடைந்துவிட்டேன். அவ்வளவு தான்..!
ஆ.கெ.கோகிலன்
15-08-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக