நமது உலகம்..!
எல்லா நாடுகளிலும்,பொதுவாக எல்லோரும் தமது நாட்டு மக்களை, அந்த அந்த
நாடுகளின் நலன்களில் மாத்திரமே அக்கறைகொள்ள வைப்பார்கள்..!
ஏன் உலக நலன்களில் அவர்கள் அக்கறை கொள்ளவதில்லை..? ஏன் அவ்வாறு இருக்கத்தூண்டுவதில்லை..?
தொழில்நுட்பங்கள் வளராத காலத்தில், அடுத்த ஊருக்குப் போவதே பெரிய விடயமாக
கருதப்பட்டது போய், தற்போது யாரும் வசதியிருந்தால் எங்கும் போகக்கூடிய சூழலில் தான்
இருக்கின்றோம்..! அப்படி இருந்தும், ஒருவரும்
தமது நாடு தாண்டி உலகிலுள்ள அனைத்து நாடுகளையும் ஒரே சமத்துவமான நிலையில் வைத்துப்
பார்ப்பதில்லை..! மனிதர்களில் காணும் வேற்றுமைகள் போல், வசதி கூடிய நாடு..!, வசதி குறைந்த
நாடு..! வளர்ந்து வரும் நாடு..! என்று பிரித்துப் பார்க்கின்றோம். ஏன் அனைவரும் இந்த
உலகின் உறுப்பினர்கள் தானே..?
தாய் நாடு என்கின்றோம்..! ஆனால் தாய்களைத் தாங்கும் தாயான உலக அன்னையை
யாருமே கவனிப்பதில்லை..!
சுயநலம், வீட்டுநலம், ஊர்நலம், நாட்டு நலம் என்ற அளவில் மட்டுப்படுத்திக்கொண்டு,
பொது நலம் பேசுகின்றோம்..! அதற்கு முதல் உலக நலன் பற்றி அக்கறை இருந்தால் தான், பொதுநலன்
பற்றிக் கதைக்கவோ, பேசவோ, எழுதவோ முடியும்.
இல்லை என்றால், சுயநலம் போல், சுய நாட்டு நலனையே பார்ப்போம். அவ்வாறே அனைத்து நாடுகளும் இருப்பதால்
தான், உலகில் இவ்வளவு தீமைகள் தோன்றின..! அதேபோல் நன்மைகள் தோன்றுவதற்கும் இவைகள் காரணமாக
இருந்தாலும், அதை வியாபாரமாகவும், உலகப்போட்டியாகவும், பொருளாதார ஏற்றத்தாழ்வைக் கொண்டுவரும்
சக்தியாகவும் இருந்து, ஒன்றோடு மற்றொன்று நீயா நானா எனப்போட்டிபோடுவதாலேயே உலகின் எதிர்காலமே
கேள்விக்குறியாகின்றது..!
நாமே உருவாக்கிய மொழிகளாலும், கலாசாரங்களாலும் இயல்பாய் இருந்த இயற்கை
தந்த வேற்றுமைகள் தாண்டி, மேலும் பல்வேறு வேற்றுமைகளை ஏற்படுத்திக்கொண்டோம். கல்வி,
வியாபாரம், தொழில்நுட்பம் போன்றவற்றினூடான பொருளாதார வளர்ச்சிப் போட்டிகளால் ஒன்றையொன்று
மிஞ்சவோ அல்லது கெஞ்சவோ பார்க்கின்றோம்..! அறிவிலிச்சமூகமாக இருந்தபோது அமைதியாக இருந்த
உலகத்தை, அறிவுச்சமூகமாக மாற்றிய பின்னர் பெரும்
ஆபத்திற்குள் தள்ளியுள்ளோம்..!
உலகின் எல்லா இடங்களிலும்,
மதத்தாலும், மொழிகளாலும், நிலத்தாலும், ஏனைய பணம் சார்ந்த வளப்போட்டிகளாலும் ஒரு நாட்டை,
இன்னொரு நாடு அழிக்கவோ அடிமைப்படுத்தவோ முனைகின்றது..! மீதி நாடுகள் வேடிக்கை பார்க்கவோ
அல்லது ஒரு பக்கம் சார்ந்து இருக்கவோ முயலுகின்றன..!
இவ்வாறாக ஏற்படும் போட்டிகளால், நாடுகள் அழிந்தால் உலகின் சமநிலை பாதிப்படையும்..!
உலகின் சமநிலை பாதிப்படைந்தால், உலகே அழியும்
நிலைக்கு வந்துவிடுலாம்..! அதனால் பிரபஞ்ச சமநிலையே பாதிப்படைந்து, இறுதியில் சூனியமே
எஞ்சும் நிலைக்கும் போகலாம்..!
இயற்கையின் தாண்டவங்கள், வளச்சமநிலைகளையும், உயிர்சமநிலைகளைப் பேணத்தான்
என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்..! அதனை நாம்
ஆளவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியாது. ஆனால் அறிவு படைத்த மனிதன் போடும், தாண்டவங்கள்
இயற்கையின் சமநிலைத் தாண்டவங்களையே தோற்கடித்துவிடுகின்றன..!
இயற்கையின் பார்வையில் மனிதன், தனக்குத் தானே குழிவெட்டிக்கொள்கின்றான்..!
அவ்வளவு தான். இவற்றினைப் பார்த்து, அனைத்து நாடுகளையும் தாங்கும் தாயான உலக மாதா தொடர்ந்து
கண்ணீர் வடிக்கின்றாள்..!
நாடுகளைத் தாங்கும் உலகத்தாயே
உன்னை கண்டுக்க இங்கே யாரும்
இல்லை..!
உன் பிள்ளைகள் மட்டும்
எவ்வளவு பெருமைகளை அடைந்தாலும்,
நீ என்றும் அமைதியாகவே இருக்கின்றாய்..!
பிரபஞ்சக் குடும்பத்தில் உனக்கு என்ன மதிப்போ
நான் அறியேன்..?
நாம் உனக்கு கொடுக்க வேண்டியதை
இன்னும் கொடுக்க முடியாமல்
பிள்ளைகளை மட்டும் கவனித்துக்கொள்கினறோம்.
உலகத்தாயே பொறுத்துக்கொள்..!
ஆணவப் போர்களாலும், அணுவாயுதங்களாலும்
பிள்ளைகளிடையே சண்டைகள் போட்டு ரத்த ஆறே
ஓடினாலும் நீ அமைதியாக
உள்ளுக்குள் அழுதுகொண்டே இருக்கின்றாய்..!
ஒரு நாள் அனைவரும் சேர்ந்து,
உனக்கு பெருமை சேர்ப்போம்..!
அது கனவிலாவது நடக்கும் என்று
என்னைப்போல் பலர் நம்புகின்றோம்..!
தாய்களின் தாயே பொறுத்துக்கொள்..!
உலக மாதவே அறிவான இந்த அன்பற்றவர்களை
மன்னி..!
மாறும் பிள்ளைகளின் நிலைகளை
காலம் சரிசெய்து காட்டும்..!
அன்பு ஆட்சியை அமைக்க, அனைத்தும் மாறும் நாள்
நிச்சயம் வந்தேயாகும்..!
உலக மாதவே அதுவரை பொறுத்துக்கொள்..!
ஆ.கெ.கோகிலன்
23-10-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக