பல்லு நடுதல்..!
எமது நாடு போன்று வளரும் நாடுகளில் அதிகம் பேர் பல்லைப் பிடுங்கிவிட்டால்,
பின்னர் வலியில்லை என்ற திருப்தியில் இருப்பார்கள். எடுக்கும் உணவின் அளவைக் குறைப்பார்கள். இறுதியில்
சிலர் பொக்கை வாயுடன் அலைவார்கள். அல்லது பல் செட்டை போட்டிருப்பார்கள்.
ஆனால் வளர்ந்த நாடுகளில் பல் பிடுங்கிய உடனேயே, பல் நடுவதற்கான
ஆயத்தங்களைச் செய்வார்கள். அவ்வாறு நடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றிச் சொல்வார்கள்.
செலவு அதிகம் என்றாலும் என்ன செலவைக் கொடுத்தாவது ஆரோக்கியமாக இருக்கவும், இறுதிவரை
நல்ல போசாக்கான உணவுகளை உண்ணவும் விரும்புவார்கள்.
அரசியல் வாதிகள், நடிகர், நடிகைகள் போன்ற பிரபலமான நபர்கள்,
தமது தொழில் முதலீடாக இதனைத் தொடர்ந்து சரியாகச் செய்வார்கள். சிலர் பல்லைத் தாண்டி,
தலைமுடியை நடுபவர்களும் இருக்கின்றார்கள்..! தேவையான தோற்றத்தைக் கொண்டுவர என்ன என்ன
சிகிச்சை முறைகள் இருக்கின்றதோ அனைத்தையும் பயன்படுத்தித் தமது தொழிலை வளப்படுத்த விரும்புவார்கள்.
அப்படியான சூழ்நிலையில், நான் பல்லைப் பிடுங்கினால் போதும்
என்று நினைத்தேன். எனது பல் மருத்துவரும் பல் நடுவதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால்
பார்த்த யூடியூப்களில் பொதுவாக பல்மருத்துவர்கள் பிடுங்கிய பல்லுக்குப் பதிலாக செயற்கையான
பல்லை நடச்சொல்கின்றார்கள்..! அது, செலவு கூடிய விடயம் என்றாலும், அதனைச் செய்வதால்
வரும் நன்மைகள், குறிப்பாக பல்வரிசை பேணப்படும் என்றும், உணவை நன்றாக அரைத்து உண்ண
முடியும் என்றும், உடலுக்குத் தேவையான அனைத்து சக்திகளையும் வழங்கமுடியும் என்றும்,
முக அழகைக் காக்கும் என்றும் சொல்லி, செலவைக் கவனிக்காமல் பல்லை நாட்டச் சொல்கின்றார்கள்.
சரி நானும் அது தொடர்பாக இணையத்தில் தேடும் போது இலங்கையில்
ஒரு பல்லை சாதாரணமாக நாட்டுவதற்கு ஆகும் செலவு ஏறக்குறைய ரூபா.110,000 இலிருந்து ரூபா.250,000
வரை இருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது..!
சில இடங்களில் நான் சொன்ன விலைகளைவிட குறைவாகவோ அல்லது கூடவாகவோ
அமையலாம். அங்கு பயன்படும் மூலப்பொருட்களைப் பொறுத்தது..! தங்கப்பல் கட்டவேண்டும் என்றால், ஒரு
பவுண் தங்கத்தின் விலையே இப்போது ஏறக்குறைய ரூபா. 200,000. பல்லின் அளவுக்கு ஏற்ப பவுண் மற்றும் அதற்கான ஏனைய
சேலவுகள் என்று பார்த்தால் குறைந்தது 0.5 மில்லியன் ரூபா எனக்கணக்கு வரும்..!
சரி இதனை எல்லாரும் செய்யலாமா என்றால், இல்லை என்று தான்
சொல்ல வேண்டும். பல் நடுவதற்கு ஏற்ப உடல் ஆரோக்கியம் இருக்க வேண்டும். குறிப்பாக சத்திர சிகிச்சை செய்ய வேண்டும்.
எமது பிரதேச வைத்தியர்கள் செலவு, ஆரோக்கிய நிலை மற்றும் பின்னால்
வரக்கூடிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான நிலைகளை கவனத்தில் கொண்டு எல்லோருக்கும்
அதனைப் பரிந்துரைப்பதில்லை.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்..!
பல்லிருந்தால் தான் சிரிப்பதே தெரியும்..!
ஆனால், நட்ட பல்லால் சிரிக்க முடியுமா..? என்றால் சிரிக்கலாம்
என்பது தான் எனது நிலை. அதற்குத்தேவையான பொருளாதாரம் என்பது அவரவரைப் பொறுத்தது தான்..!
பொருந்தினால் சிறப்பு தான்..! இல்லை என்றாலும், பொக்கை வாயுடன் நிம்மதியாக, ஆரோக்கியமாக வாழமுடியும் என்பதும் உண்மை தான்..!
ஆ.கெ.கோகிலன்
19-10-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக