மீறும் பாரம்பரியங்கள்..!

 



வழமைபோல் பல அலுவல்களை முடித்துக்கொண்டு மாலை 2.45  சின்ன பஸ்ஸில் நின்று வரும்போது, எனது உயரத்தை ஒத்த ஒருவரும் பஸ்ஸில் இருந்தார்..! வழமையாக இந்தப்பயணங்களில் நான் குனிந்து கதைப்பதே கூட..! ஒன்று இரண்டு உயரமான மனிதர்களையே பஸ்ஸிற்குள் பார்ப்பதுண்டு. பலர் இப்படியான பஸ்ஸில் ஏறவே சங்கடப்படுவார்கள். நமக்கு இப்போது பழகிவிட்டது. திருகோணமலை என்பது  அடுத்த ஊர் மாதிரி வந்துவிட்டது..!

பலர் ஏறினார்கள்..! இறங்கினார்கள்..! எனக்கு சீற் கிடைக்கவில்லை. அந்த பஸ்ஸில் பயணம் செய்த எமது நிறுவன ஆங்கிலப்பாட வருகைதரு விரிவுரையாளர் ஒருவர் என்னைக்கண்டு, நீங்கள் யாழ்ப்பாணம் வரை செல்கின்றீர்கள். நான் வவுனியா வரை தான் போகின்றேன் என்று சொல்லித் தனது சீற்றைத் தந்தார். கொடுத்தவர்களுக்கு இந்தப் பிரபஞ்சம் எப்படியாவது நல்லதைச் செய்யும் என்ற நம்பிக்கை மீண்டும் உறுதியாயிற்று..! நான் அவருக்கு நன்றி சொல்லி மறுத்தேன். அண்மையில் அவரது தந்தையார் இறந்தது எனக்குத் தெரியும். அவரே இருக்கட்டும் என நினைத்தேன். மீண்டும் சில மணிகள் நிற்க, என்னுடன் நின்ற இன்னோர் உயரமான மனிதர் எங்காவது சீற்வருமா என்று பார்த்தார். அப்போது ஒரு சீற் எனக்கு கிட்ட வர, அவரும் வந்தார். ஆனால் அதற்கு முதலே அதில் நான் கூட்கார்ந்துவிட்டேன். இருந்தாலும் அவரிடம் இருக்கப்போகின்றீர்களா..? என்று கேட்டேன். பரவாயில்லை என்று சொல்லிவிட்டார். சில விநாடிகள் தாண்ட, ஒரு வயதான பெண் கையில் ஊன்றுகோலுடன் ஏறி யாராவது சீற் கொடுப்பார்களா..? எனப்பார்க்க, இதுவரை நின்றுவந்து, இருந்த சில விநாடிகளில், இப்படியான சம்பவம் வர சங்கடமாக இருந்தாலும், எழுந்து நின்று அப்பெண்மணிக்கு சீற்றைக்கொடுத்துவிட்டு, அந்த உயரமான மனிதருடன் கதைத்தேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் வவுனியா வந்ததும் சீற் நிச்சயம் கிடைக்கும் என்றேன்.  சொல்லி முடிப்பதற்குள் அந்த இயலாத பெண் இறங்க முற்பட, மீண்டும் அந்த சீற் எனக்கே கிடைக்க, அவரைப்பார்த்து இருங்கள் என்றேன். அவர் வேண்டாம் நீங்களே இருங்கள்..! கொஞ்சத்தூரம் தானே வவுனியா வந்ததும் இருக்கலாம் என்று சொன்னார். நானும் தலையசைத்து அமர்ந்தேன். மீண்டும் சில நிமிடங்களில், எனக்கு அருகிலுள்ளவர் வவுனியாவில் இறங்க அந்த உயரமானவரை அருகில் அமர்த்தினேன். அவருடன் தொடர்ந்து கதைக்க முற்பட்டேன். அவரது வாழ்வியலும் என்னை ஒத்ததே..! இரு மகள்கள்..! படிக்கின்றார்கள்..! அவர் கட்டாரில் வேலைசெய்கின்றார். இடையிடையெ பிள்ளைகளுக்காக ஊர் வந்து செல்கின்றார். எனது திருகோணமலைப் பழைய நண்பர்கள் அனைவருடனும் அவர் தொடர்பில் இருந்துள்ளார்..! இலங்கையிலுள்ள முழு இடங்களும் அவருக்கு அத்துப்படி..!

அன்பானவர், குடி வெறி அற்றவர். பல வெளிநாட்டுத்தொடர்புகள் இருப்பதால் பொருளாதாரத்திலும் நன்றாக இருப்பவர். கடவுள் மேல் பக்தியுள்ளவர். எனது நிறுவன ஊழியர் ஒருவர் வீட்டிற்கு, அருகிலே வசிப்பவர்..! நன்றாகச் சிந்திப்பவர். இம்முறை தேர்தலில் சஜித் வெல்வார் என்ற நம்பிக்கையில் உள்ளவர்..!

அவர், திருமணங்கள் பொய்ப்பதற்கும்,  சாமத்தியவீடுகளின் அளப்பறைகளுக்கும், பழைய நடைமுறைகள் மாற்றப்பட்டதும் தவறு என்பதால் தான் குடும்பங்கள் நிலைக்க முடியவில்லை என்றும், தனது சமூக ஆய்வுக்கருத்துக்களைச் சொல்ல, எனக்கே ஆச்சரியமாக இருந்தது..! 9ம் வகுப்பு வரை படித்தவர், சாரதியாக இருப்பவர், இவ்வளவு விடயங்களைத் தெரிந்து வைத்துள்ளார். அதில், திருமண முதலிரவுகள் ஹோட்டலில் நடப்பதே தற்போதைய குடும்பங்களின் பிரிவுக்கும், பிள்ளையில்லாமைக்கும் காரணம் என்றும், சரியான ஆசீர்வாதங்கள் இல்லாமல் ஹொட்டலில், காலை கண்ட கண்ட நபர்களில் முழிப்பதும், தவறானவர்கள் பயன்படுத்திய கட்டில்களைப் பயன்படுத்துவதும் என்று பல விடயங்களை அடுக்க, எனக்கே ஆச்சரியமாக இருந்தது..! என்னைவிட 6 அல்லது 7 வயது குறைவான அவருக்கு, எனது பிள்ளைகளை விட வயது கூடிய பிள்ளைகள் உண்டு..! அதனால் என்னை விட சில அனுபவங்கள் அவருக்கு கூட உண்டு..! அவருடன் கதைக்கும் போது, சாமத்தியப் பெண் யாரில் முழிக்க வேண்டும் என்ற நமது பாரம்பரியம் மீறியதாலே குடும்பங்கள் குலைகின்றன என்ற குண்டையும்  துக்கிப்போட்டார்..! மரபுரீதியிலான அவரது கருத்துக்களை எதிர்த்து வாதட எனக்கு விருப்பமில்லை. இருந்தாலும், அதிலும் சில உண்மைகள் இருப்பதை உதாசீனம் செய்ய முடியவில்லை. இறுதியாக அவரது கோவில் தொண்டுகள், சமூகத்தொண்டுகள், குடும்ப உறவுத்தொண்டுகள் பற்றிப் புரிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. நல்ல மனிதர்கள், ரவுடிகள் போல் இருப்பதைப் பார்க்க, படைப்புகளில் ஏமாறக்கூடாது, என்ற உண்மை புலப்பட்டது..! அவரது வாழ்வியலைப் பாராட்டியபடி, அவரிடம் விடைபெற்று, வீடு வந்தேன்.

 


ஆ.கெ.கோகிலன்

07-09-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!