மெய்யழகன் காட்சி வெட்டல்..!
ஒரு தாய்க்கு தன் குழந்தை சற்று குறைபாடுடன் பிறந்தாலும், அந்த தாய்க்கு
அந்தப் பிள்ளை ஒரு செல்லப்பிள்ளை தான்..! குறைபாடுகள் தாய் தந்தைக்குத் தெரியாது. யாரும்
சொன்னாலும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஆட்கள் சொல்கின்றார்கள் என்பதற்காகப்
பெற்ற குழந்தையைக் கொல்ல முடியுமா..? அவ்வாறான குழந்தையையும், அதன் பெற்றோரையும் சேர்த்துப்
படைத்தவனே அதற்குப் பதில் சொல்ல வேண்டும்..!
அதேபோல் தான் உற்பத்திகளும்,
உருவாக்கங்களும்..! இந்தப் பூமியில் எல்லோருக்கும் பிடித்த மாதிரி, எல்லோராலும் வாழ முடியாது. அப்படி வாழ நினைத்தால், ஜஸ் பழம் தான் விற்க வேண்டும்..! ஏனெனில் எமது பகுதியில்
அதிகமானவர்களுக்கு அது தான் பிடிக்கின்றது..!
உண்மையில் ஒரு படைப்பாளி, தனது உடமைகள் அனைத்தையும் வைத்தே,
ஒரு ஆக்கத்தைப் படைக்கின்றான். அவன் அதனைச் சரியென நம்பிய பிறகு தான், அதனை வெளியே
கொண்டுவர முயல்வான். அப்படி ஒரு ஆக்கம், நாவலாக,
படமாக வரும்போது பலர் அதை ரசித்தும் கொண்டாடியும்
இருந்துள்ளார்கள்..! தமிழ் நாடு தாண்டி ஆந்திராவிலும், கேரளாவிலும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டவர்கள்
அதிகம்.
ஆனால், தமிழர்கள் தமிழர்களை, நம்புவதைக்காட்டிலும் பிற இனத்தவர்களை நம்புவது ஆச்சரியமான குணமாகத் தெரிகின்றது.
அது உண்மையில் தவிர்க்கப்பட வேண்டிய குணம்.
எமது பகுதியில் கூட ஒரு தமிழன், தேர்தலில் நின்றால் அவனைக் குறைகள்
சொல்லி, அவனைப் புறக்கணிப்பதே வழமை..! அதையும் தாண்டிப் பொது வேட்பாளர் என்று வந்தால்,
அதையும் ஏற்றுக்கொள்ளாமல், அந்த வேட்பாளரைத் தேர்ந்தெடுத்தவர்களையும் குறை கூறுவதே
இயல்பாகிவிட்டது..!
இலங்கை என்றால் என்ன..? இந்தியா என்றால் என்ன..? தமிழனுக்கான பொதுவான
குணம், தனது இனத்தையே மதிப்பதில்லை..! ஒரு சரியான தலைவனை தேர்ந்தெடுக்க முடியாத நிலையில்,
இருப்பதற்கான காரணம் வெளியில் ஒன்றுமில்லை. அவரவரது மனங்களில் தான் உள்ளது..!
தமிழ் உணர்வு இருக்கின்றது
என்று வெளியில் காட்டுவதில் பெரிய பலன் இல்லை. அது உள்ளுக்குள் இருக்க வேண்டும். உண்மையாக
இருக்க வேண்டும். அனைத்துத் தமிழினத்தையும் மதிக்க வேண்டும். இயன்றவரை தமிழர்களாக ஒற்றுமையாக
இருக்க வேண்டும். அப்போது தான் பல நல்ல, தமிழினத்தை உயர்த்தும் செயல்களில் ஈடுபடமுடியும்.
நல்ல விடயங்களை யார் சொன்னாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வரவழைக்க வேண்டும். தவிர்த்து, இன்னார் சொன்னால் மாத்திரம், நம்புவேன்.
மற்றவர்கள் கருத்து எவ்வளவு சரியாக இருந்தாலும் நம்ப மட்டேன் என்று இருக்கும் மனநிலையே,
நீண்டகாலமாக ஆரியன்களால் ஊட்டி வந்த வினை தான்.
வரலாறு பேசினால், ஏமாற்றியவர்மேல் கடும் கோபம் தான் வரும். சரி, வணிக நோக்கில் மெய்யழகன் படம் வெற்றி பெறப்பல யோசனைகளை மக்கள் சொன்னதால்,
வேறுவழியின்றி இயக்குனர் சம்மதித்துவிட்டார்..! அதனால் நல்ல காட்சிகளையும் நீக்கி விட்டார்..!
இருந்தாலும் அவை இணையத்தில் வர, ஏன் இதைச் செய்தீர்கள் என்று என் கேள்விகள் எழ, நிலமை
தர்மசங்கடமாகப் போய்விட்டது..!
இலட்டுப் பிரச்சனைக்கு மன்னிப்பு கேட்ட கார்த்தியையே திட்டுகின்றார்கள்.
அவர் மன்னிப்புக் கேட்டது சரி. அவர்களது பட விளம்பரத்திற்கு செய்யப்பட்ட கூட்டத்தில்
நடந்த அனைத்து விடயங்களுக்கும் அவர்கள் தான் முதலில் பொறுப்புக் கூறவேண்டும். நிகழ்ச்சித் தொகுப்பாளர் தெரியாமல் கேட்டாள் கூட, அவரை நியமித்ததே தயாரிப்பாளர் தான். அதனால் அதில் தவறு இல்லை. “மன்னிப்புக்கேட்பவன்
மனிதன், மன்னிக்கத் தெரிந்தவன் இறைவன்..!”
குறிப்பாகப் படைப்பு என்பது, முதலில் ஒருவராலோ அல்லது ஒரு குழுவாலோ
உருவாகினால், அதனையும் அதன் தரத்தையும் தீர்மானிப்பது
என்பதே படைப்பாளியின் கையிலேயே தான் உள்ளது.
அவர் தான், அதன் தரத்தை நிச்சயப்படுத்த வேண்டும்..! பலர் நெருக்குவதாலும், யாதார்த்த
காரணங்களை அடுக்குவதாலும் படைப்பு அதன் இயல்பில் இருந்து மாறிவிடும்..! அதன் பிறகு,
அவர் தன்னை ஒரு முழுப்படைப்பளி என்று சொல்லமுடியாது. அது தற்போது, வேறோர் படைப்பாக மாறிவிடும். மக்களின்
பங்களிப்பால் ஏற்பட்ட ஒரு கூட்டுமுயற்சி என்றோ
அல்லது ஒரு பொதுப்படைப்பு என்று தான் தெரிவிக்க
வேண்டும்.
இது வணிக வெற்றிக்கு வேண்டும்
என்றால் உதவலாம். ஆனால் படைப்பாளியின் உணர்வை உடைத்தாகவே நான் கருதுவேன். தயாரிப்பாளர்களைப்
பொறுத்தவரை இருதலைக் கொள்ளி எறுப்பு தான்..!
ஆ.கெ.கோகிலன்
02-10-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக