பல்லுப் பிடுங்கல்..!
போன இரு வாரம் திருகோணமலையில் இருக்கும்போது குறித்த ஒரு
பல்லு, அண்மையில் தற்காலிக அடைப்பை மேற்கொண்டாலும், தாக்குப்பிடிக்க முடியாமல் அடைப்புக்கள்
உடைய மீண்டும் வலி எடுத்தது..! போன வாரத்தில்,
பல நாட்கள் என்ன செய்வது என்றே தெரியாமல் பல் வைத்தியர்களின் இடங்களைத் தெரிந்து வைத்துக்கொண்டு,
தாங்க முடியாத வலி வந்தால், போய் பல்லைப் பிடுங்குவோம் என்ற முடிவோடு இருந்தேன். நல்ல
வேளை வலி வந்தாலும், என்னால் ஒரளவு சமாளிக்க முடிந்தது..! தண்ணீர் குடிக்க முடியாது..!
சூடாக சாப்பிட முடியாது..! குளிராகச் சாப்பிட
முடியாது..! கன்னங்கள் நோகத் தொடங்கின..! கழுத்து, தொண்டைகளில் கட்டுக்களும் வந்தன..! ஓரளவிற்கு அனைத்தையும் தாங்கிக்கொண்டு இருந்தேன்.
இன்று யாழ் வந்து வீட்டில் நிற்பதால், முதல் வேலையே பல்லைப்
பிடுங்குவது தான் என நினைத்துச் செயற்பட்டேன்..!
ஆனால் இன்று சனிக்கிழமை என்பதால், சில வேளை மருத்துவர் வராவிட்டால் கிழமை நாளில்
நின்றாவது இதற்கு ஒரு வழி பண்ணணும் எனநினைத்தேன்.
மதியம் தாண்டிய நேரம் இரண்டு அழைப்புக்கள் எடுத்துப் பார்த்தேன்.
குறித்த தனியார் மருத்துவ நிலையத்தில் இருந்து பதில் இல்லை. பின்னர் சிறிதுநேரம் படுத்துவிட்டு,
மாலை 4.00 மணிக்குப் பிறகு எடுத்தேன். ”மருத்துவர் நிற்கின்றார்..” எனப்பதில் வந்தது.
சென்றேன். நிறையப்பேர் நின்றார்கள்..! நானும் அந்த லைனில் உட்கார்ந்தேன். எனது தவணை
வரும்போது, வந்து கூப்பிட்டார்கள். எனது நிலையையும் வயதையும் பார்த்துவிட்டு, “சில
மாத்திரைகள் தாறேன், போட்டுவிட்டு வாருங்கள்..”
என்றார். நான் எனது நிலைமையைச் சொன்னேன், புரிந்து கொண்டார். பின்னர் விறைப்பூசியைப்
போட்டார்..! அதிகமாக அந்த இடத்தில் வலித்தது..! நான் பொதுவாக மருந்துகளே எடுப்பதில்லை.
கொஞ்ச நேரம் உள்ளே இருந்தேன். மயக்கம் வரும்போல் இருந்தது..!
பின்னர் வெளியே வந்தேன். கொஞ்ச நேரம் காத்துப்பட இருந்துவிட்டு, மருத்துவர் அழைத்ததும்,
மீண்டும் உள்ளே சென்றேன். வழமையாகப் பல்லு பிடுங்குவதை ஒரு இலகுவான காரியம் மாதிரி
எனது மனைவி, மகள் என யாவரும் பிடுங்கியுள்ளார்கள்..! நான் இன்னமும் பிடுங்கவில்லை.
ஒரு பல்லு மாத்திரம் சூத்தையால் வலியைக்கொடுத்து தானே விழுந்துவிட்டது..! அப்போது
அந்த வலியைத் தாங்கினேன். ஆனால் தற்போது வரும்வலியைத் தாங்க முடியவில்லை. எனவே எப்படியாவது
பிடுங்கிவிட வேண்டும் என்று விரும்பினேன்.
அதற்காக, மருத்துவர் என்னை குறித்த
சாய்ந்த ஒரு கதிரையில் சாய்ந்து படுக்க வைத்து, பெண் ஒருவர் தலையை அசைக்காது பிடிக்க,
பெண் மருத்துவர் மிகவும் சிரமப்பட்டு, கருவிகளையும்
மாத்தி மாத்தி எடுத்து, அசைத்து அசைத்து பிடுங்க,
எனக்கு விறைப்பூசி போட்டும் வலித்தது..! கண்ணீரும் வந்தது..! தடிமலும் வந்தது..! இருமலும்
வந்தது..! வாய்க்குள் உமிழ் நீர் சுரந்துகொண்டே இருந்தது..! வலி தாங்க முடியாமல் இருந்தது..!
நான் வேறு உடற்பயிற்சிகள் செய்வதால், உடலை மிக இறுக்கமாக வைத்திருக்க, மருத்துவரும்
கஷ்டப்பட்டார். நானும் இலகுவாக இருக்க முயன்றேன். வலியால் முடியவில்லை. நீண்ட பிரயத்தனத்தின்
பின்னர் பல்லை எடுத்தார்கள்..! எனக்கும் காட்டினார்..! வேரில் பாதிப்பு இல்லை. ஆனால்
உள்ளால் ஏதாவது பாதிப்பு இருந்ததோ தெரியவில்லை. நான் கேட்டு அந்தப்பல்லை வாங்கிக்கொண்டேன்.
கொஞ்ச நேரம் வெளியே இருக்கச்சொன்னார்கள். அத்துடன் வாய்க்குள் பஞ்சை வைத்து, இறுக்கக்
கடிக்கச் சொன்னார்கள். செய்தேன்..! பின்னர், ரூபா.2200 ஐ கூலியாகவும் மருந்திற்கும்
கொடுத்துவிட்டு, அம்மா வீட்டிற்குப் போகச் சுன்னாகம் சந்திக்குப்போக மோட்டார் சைக்கிள்
தீடிரென நின்றுவிட்டது..! பின்னர், அம்மாவீட்டிற்குப் போகமனமில்லாமல் உடனே வீடு திரும்பினேன்.
பின்னர், வீடு வந்ததும்
வாய் நோகத்தொடங்கியது. “சரிகமப..” பார்க்க இருக்க, வலியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
குறிப்பாகப் பாடல்களை ரசிக்கக்கூட முடியவில்லை..!
ஒரு கட்டத்தில் வாய்க்குள் வைத்திருந்த பஞ்சு முழுக்க இரத்தமாகவும்,
எனக்கு மிகக் கஷ்டமாகவும் இருந்தது..! மருத்துவர் சொன்ன அறிவுரைகள் படி, ஒன்றையும்
துப்பக்கூடாது என்றும் சொல்லியிருந்தார். அதன்படி இருந்தாலும், வாய்க்குள் இருந்த இறுகிய
கட்டிப்பஞ்சு அதிக வலியைக்கொடுத்தது..!
அந்த வலியுடன், உடனேயே 3 யூடியூப் வீடியோக்களை எடுத்துப்
பார்த்தேன். அரை மணிநேரத்தில் பஞ்சை கையால் எடுத்து எறியலாம் என்றும், சுத்தமாக வைத்திருக்க
வேண்டும் என்றும், சூடு, உறைப்பு இல்லாத உணவை எடுக்க வேண்டும் என்றும், புண் மாற அந்த
இடத்தை ஓரவிற்கு தாங்குப்படாமல் பார்க்க வேண்டும் என்றும், சுத்தமாக வாயை வைத்திருக்கவும்
சொல்லப்பட்டிருந்தது..! பின்னர் அதன்படியே
செய்ய முனைந்தாலும், ஒரு கட்டத்தில், என்னால் தாங்க முடியவில்லை. பல்லுப்பிடுங்கி,
சரியாக 3 மணிநேரத்திற்குப் பின்னர் உணவு எடுக்கும்படி சொல்லப்பட்டது. நான் வலி தாங்க
முடியாமல், 2 மணித்தியாலங்கள் தாண்டியதுமே பாயாசத்தை உணவாக எடுத்துவிட்டு, சாப்பாட்டிற்கு
பின்னர் போடவேண்டிய குளிசைகளைப் போட்டுவிட்டு உடனேயே படுத்தேன்..! வலி தாங்கமுடியவில்லை..! சாப்பாட்டிற்கு முன்னரும் ஒரு குளிசை போடச்சோன்னார்.
அதனை பல்லுப்பிடுங்கி வந்ததுமே, போட்டுவிட்டேன்.
யாழில் நான் தரையில் தான் படுப்பது வழக்கம். அவ்வாறே பாய்,
வலையெல்லாம் போட்டு படுத்தால் நித்திரை வராமல், தொடர்ந்து கடுமையாக வலித்தது..! வாய்
முழுக்க இரத்தம் இரத்தமாக வந்தது..! வந்த எச்சிலுடன் கூடிய இரத்தத்தை வாய்குள் இருந்து,
வயிற்றுக்குள் அனுப்பினேன். எழும்பித் துப்பக்கூடாது என்றும் மருத்துவர் சொல்லியிருந்தார்.
3 அல்லது 4 மணித்தியாலங்கள் நித்திரையில்லாமல் புரண்டு புரண்டு பலவாறு படுத்தேன். ஏன்
பிடுங்கீனேன் என்று கூட யோசித்தேன்..? வழமையாகச் சாப்பிடும் போது அல்லது தண்ணீர் அருந்தும்
போது மட்டும் தான் வலித்தது. அந்த வலியைத்தாங்க முடியாமலே பிடுங்குவோம் என்ற மனநிலைக்கு
வந்தேன். மருத்துவர் பிடுங்கிய பல்லை என்னிடம் தரும்போது, அந்தப்பல் மிகவுறுதியாக இருந்தது..!
கொஞ்ச இடத்தில் மாத்திரம் சூத்தை இருந்தது..! அதில் அடைத்த பொருளில் கொஞ்சம் விழுந்துவிட்டது.
மற்றும்படி பல் நன்றாகவே இருந்தது..! தானாக இறக்க முதல், கொலைசெய்தது போன்ற உணர்வு
ஏற்பட்டது..! மருத்துவரும் ஏன் அவரசப்படுகின்றீர்கள்..?
உங்களது உடல் நிலமை தெரியாதுள்ளது..! சீனி,
இரத்த அழுத்தம், கொழுப்பு எல்லாம் எந்த அளவில் இருக்கின்றது எனத்தெரியவில்லை..? அது
தெரிந்தால் தான், பிடுங்கலாமா அல்லது பொறுக்கலாமா எனச்சொல்ல முடியும் என்றார். நான்
சொன்னேன் ” நான் உடற்பயிற்சி செய்வது வழக்கம்..! மருத்துவர்களிடம் செல்வது மிக மிகக்
குறைவு..! அண்மையில், எமது நிறுவனத்தில் இரத்ததான முகாம் வைக்கும்போது, நானும் இரத்தம்
கொடுக்கச் செல்ல, மருத்துவர் எனது உடலைப் பார்த்து, பின்னர் உடல் இரத்த அழுத்தத்தையும்
பார்த்துவிட்டு இரத்தம் கொடுக்க வேண்டாம் என்றார். அதனால் ஏதாவது சிக்கல்கள் இருக்கலாம்..! இப்போது
நான் 55 வயதைத் தாண்டிவிட்டேன். ஆனால் உடல் ஆரோக்கியமாக இருக்கின்றது என நம்புகின்றேன்.
ஆனால் உண்மை நிலைமை தெரியாது..? தற்போது வரும் செய்திகளைப் பார்ப்பதன் மூலம், பொதுவாக மருத்துவர்களிடம் எனக்கு நம்பிக்கை இல்லாமல்
போய்விட்டது..?
ஆரோக்கியமாக இருக்க, நாம் தான் உடலைக் கவனமாகப் பார்க்க வேண்டும்.
அதேநேரம், சரியான நம்பகமான மருத்துவர்கள் தெரிந்தால், அவர்களிடம் ஆலோசனைகளைப் பெறவேண்டும்.
இல்லாவிட்டால் இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், எதுவும் நடக்கலாம்..! இறப்பு என்பது
ஒரேயடியாக வருவது, இளமையில் தான்..! ஆனால் முதுமையில் வரும் இறப்பு என்பது பகுதி பகுதியாகவே
வரும்..! பார்வை மங்கும், முடி உதிரும், பற்கள்
விழும், முடி நரைக்கும், சின்னச்சின்ன உடலுபாதைகள் தொடர்ந்து வரும், உணவு கசக்கும்,
வாழ்வே வெறுக்கும், இறுதியில் ஆவி விலகும் அவ்வளவு தான்..! இது தான் மனித வாழ்க்கை.
யாரும் இதனைத் தாண்ட முடியாது..!
ஆ.கெ.கோகிலன்
06-10-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக