அடுத்த தேர்தல்..!

 


 


அண்மையில் ஜனாதிபதி  தேர்தல் நடந்து, பல தமிழ் மக்கள் நினைத்துப்பார்க்காத ஒரு பெரிய மாற்றத்தை சிங்கள மக்கள் கொடுத்து இருந்தார்கள்..!

நான்  2024இல் திருகோணமலையில் வேலை செய்வதாலும், பல சிங்கள மக்களுடன் பழகுவதாலும் அவர்களது மன ஓட்டங்களை  முற்கூட்டியே என்னால் ஓரளவு   புரிந்துகொள்ள முடிந்தது..!

பெரும்பாண்மையான தமிழ் மக்கள் சஜித்தையும், சிலர் ரணிலையும் நம்பினார்கள்..! இதனை நான், என் உறவுகளின் விருப்பங்கள் ஊடாக் கண்டுகொண்டேன். இருந்தாலும் இவர்கள் இரண்டு பேரிலும் எனக்கு நம்பிக்கை வரவில்லை..! ரணில் மேல் ஒரு மரியாதை உண்டு. அது, நாடு பொருளாதாரத்தில் மிகச்சிக்கலான சூழலில் இருக்கும் போது, தன்னால் முடிந்தளவு செயற்பட்டு, மேலும் நாடு கீழே இறங்காது பார்த்துக்கொண்டது, பெரியவிடயமாகத் தான் நான் கருதுகின்றேன். இருந்தாலும், அவரின் வயது, தற்போதைய சூழல் போன்றவற்றைக் கருத்தில் எடுக்கும்போது, ரணிலை இந்த வளையத்திற்குள் கொண்டுவருவது எனக்கு விருப்பமில்லை.

 அதேபோல் சஜித் ஏழை எளிய மக்களின்  காப்பானாகப் பார்த்தாலும், அவர் ஒரு மறைந்த முன்னாள் ஜனாதிபதியின்  மகனாகவும்,  நிஜமான கஷ்டத்தை உணர்வதற்கான வாய்ப்பு அற்றவராகவுமே எனக்குத் தெரிந்தார்..! அதுமாத்திரமன்றி, ஒரு கட்சிக்குள் ஒற்றுமையாக இருக்க முடியாமல்  உடைத்து வெளியே வந்ததும்  எனக்கு அவர்மேல் மதிப்பை ஏற்படுத்தவில்லை..!

அதேநேரம் சிறந்த கல்வியாளர்களை கொண்ட அநுர ஜனாதிபதியானது ஒரு இயற்கை நிகழ்வாகவே என்னால் பார்க்க முடிகின்றது..! அதுமாத்திரமன்றி, இலங்கையில்  பெரிய முறைமை மாற்றம் ஏற்படுவது காலத்தின் தேவை என்பதும் புரிகின்றது.

இந்தநிலையில், புதிய ஜனாதிபதி எவ்வாறு  நாட்டை மீட்கப்போகின்றார் என்ற  ஆவலும் எனக்கு  தொடர்ந்து இருக்கின்றது.

அதேவேளை, எமது தமிழ் பகுதிகளில் என்றும் இல்லாதவாறு பலர் அரசியலில் நுழைகின்றார்கள்..! முன்பு இருந்தவர்கள்  இனி வேண்டாம், “ஒதுங்குங்கள்..” என்ற கோசங்கள் ஓங்கி ஒலிக்கத்தொடங்க, பல புதியவர்கள் போட்டியிடுவது எமது ஒற்றுமைக்கு பெரும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது..! ஒரு தமிழனை, இன்னொரு தமிழன் தலைவனாக ஏற்றுக்கொள்வதில் என்ன சூனியம் இருக்கின்றதோ தெரியவில்லை..! அந்தப்போட்டிநிலை இம்முறையும் தொடர்கின்றது..! ஏற்கனவே இருந்தவர்கள், சரியில்லை என்றால், குறைந்தது 5 வருடங்களுக்கு ஒதுங்கி, மற்றவர்கள் அமைக்கும் ஆட்சியைப் பாருங்கள்..!  நன்றாக இருந்தால், வாழ்த்திவிட்டு, நீங்களும் நிம்மதியாக இருங்கள்.  இல்லை என்றால், அடுத்த 5 வருடங்களில் உங்களுக்கான பாதை தெளிவாக  தெரியும்.  அதனைப் பயன்படுத்தி, உங்கள் சேவையைத்  தொடருங்கள்.

ஆனால் உண்மைநிலை என்னவென்றால், பல அரசியல் வாதிகளால் அவ்வாறு ஒதுங்க முடியாமல் இருக்கின்றது..! ஏன் என்றால்  அவர்கள் இது நாள்வரை பெற்ற அனைத்து சலுகைகளினையும்  இழக்க விருப்பமில்லை..! இது தான்,  அவர்களின் உண்மை நிலை என்பதை மறுபேச்சின்றி ஒத்துக்கொள்ளலாம்.



சாவகச்சேரி மருத்துவமனையில், மருத்துவ ஊழலுக்கு எதிராகக்  குரல்கொடுத்த மருத்துவர் அர்சுனாவும் இம்முறை அரசியலுக்கு வரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்..! அவர், அவரது தகுதிக்கானதை ஆசைப்படும் போது, அதற்கு  பல முட்டுக்கட்டைகளை அரசியல் வாதிகளும், அரச தலைவர்களும் போட்டு, தவறுகள் செய்தவர்களை காப்பாற்ற முனைந்ததால், இப்படித் தான் நிலைமைகள் மாறும்..!

பூனைகள் கூடப் புலிகளாக மாறும்..! சூழலும் அதற்கு வலுக்கொடுக்கும்..! இயற்கையின் அனுக்கிரகமும், தமிழர்களின் அன்பும் இருந்தால், இம்முறை தமிழனின் தலைவிதிகளும் முற்றாக மாற்றப்படலாம்..!

 பார்ப்போம் அவர்களின் அரசியல் பயணம் எவ்வளவு தூரம் மக்களைக் கவர்கின்றது என்றும், அவர்களால் எப்படியான ஆட்சியை தமிழ் மக்களுக்குக் கொண்டுவர முடியும் என்பதையும்,  போகப் போகப் எடுக்கும் அவர்களது நடவடிக்கைகளில் இருந்து காணலாம்.

மத்தியிலும், வடக்கிலும் நல்லாட்சி நடந்தால், தமிழர்களின் நிலை மீண்டும் உயரும். நாடும் முன்னேறும். உறவுகளும் நிம்மதி அடைவார்கள். போராட்ட வரலாறுகளுக்கு ஒரு மகுடம் கிடைக்கும்..!

பொறுத்திருந்து பார்ப்போம்.

ஒரு விடயம், என்னைப் பொறுத்தவரை அது, “எது நடந்தாலும், அது நன்மைக்குத் தான்..” என்று எடுத்துக்கொள்வேன்.

 


ஆ.கெ.கோகிலன்

22-10-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!