மழை பிடிக்காத மனிதன்..!
இசை அமைப்பாளர், நடிகர் விஜய் அன்ரனியின் படங்களை நான் விரும்பிப்
பார்ப்பது வழக்கம். காரணம் அவரின் கதைத் தேர்வு..! இந்தப்படத்தின் தலைப்பே வித்தியாசமாகத்
தான் இருந்தது.
கதையும் நாம் நினைத்தது போல் இருக்காது..! அது உண்மை. ஆனால்
படத்தில் பூச்சுத்தல்கள் அதிகம்..!
குறிப்பாக செத்தவன், சாகாமல் இருப்பது போல், பல இடங்களில்
செய்கின்றார்கள். இதைச் சூழ இருப்பவர்கள் நம்புகின்றார்கள். அதனை நம்ப வைப்பதாக சரத்குமார்,
சத்தியராஜ் கூட்டணி தொழிற்படுகின்றது.
இந்தப்படம் சலீம் படத்தின் தொடர்ச்சி என்றார்கள். ஆனால் இதில்
அவ்வாறான தொடர்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. அவரின் பெயர் மாத்திரம் “சலீம்” அவ்வளவு தான்.
படத்தில் கதை என்று பார்த்தால், பொய்யாகச் செத்தவன், உண்மையில்
சாகாமல் இருந்து பல நல்ல விடயங்களைச் செய்து, கெட்ட வில்லனையும், அவனது கூட்டத்தினரையும்
திருத்தி, பின்னர் திரும்பச் சாகிற மாதிரி நடிக்கின்றார்..!
அத்துடன் அடுத்த பகுதிக்கான முன்மொழிவை வைத்துவிட்டுச் செல்கின்றார்கள்.
பல நடிகர் நடிகைகள் நடித்திருந்தார்கள். காட்சிகளும் தெளிவாகக்
கவிதைபோல் இருந்தன..!
ஒவ்வொரு காட்சியின் வீரியத்தினை நல்ல தமிழ் வரிகளில் வெளிப்படுத்தியிருப்பது
எனக்கு பிடித்திருந்தது.
மேகா ஆகாஷ் கதாநாயகியாக வருவது போல் இருந்தாலும் பின்னர்
ஹீரோவின் தம்பி மாதிரி ஒருவரை மணக்க இருப்பதாகக்காட்டி,
அவளது மனத்தையும், எமது மனத்தையும் ஏமாற்றி, தம்பியின் பொறுப்பற்ற காதலுக்கு பச்சக்கொடி
காட்டி கதையை வேறுபாதையில் திருப்பிவிட்டார்கள்..! பிரதான வில்லனாகத் தனஞ்ஜெய் என்பவர்
நடித்திருந்தார். அதேபோல் பொலிஸாகவும், சற்று வில்லன் குணத்திலும் முரளி சர்மா நடித்திருந்தார்.
படத்தின் கதைப்படி ஹீரோவிற்கு கதாநாயகியே இல்லை. ஏதோவோர்
விபத்தில் இறந்திருக்க வேண்டும். அதுபற்றித் தெளிவுபடுத்தவில்லை.
இசை விஜய் அன்ரனியின் பாணியில் இருந்தது. அச்சு ராஜாமணி என்பவர்
இசையமைத்து இருந்தார். படத்தின் காட்சிகள் விறு விறுப்பாக இருந்தது.
குறிப்பாக ஒரு குட்டி நாயை வைத்து பல உணர்வுகளையும், சண்டைக்காட்சிகளையும்
நியாயப்படுத்தியது ரசிக்க வைத்தது.
விஜய் மில்டன் வித்தியாசமாக இயக்க முயற்சித்துள்ளார். ஆனால்
சில காட்சிகள் நம்ப முடியாமல் பூச்சுற்றுவதாக அமைந்துவிட்டன..!
ஆ.கெ.கோகிலன்
19-09-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக