டிமாண்டிக்காலணி-2

 

 


வழமையாக அருள்நிதியின் படங்கள் வித்தியாசமாகவும், கால இடைவெளிவிட்டும் வருவதால் ரசிக்கக்கூடியதாக இருக்கும்..! இந்தப்படமும் அந்த வகையிலே இருக்கின்றது.

அடுத்து, பிரியா பாவணியின் நடிப்பு இந்தப்படத்தில் மிகச்சிறப்பாக இருந்தது. அந்த வகையில், பல வித முகபாவங்களைக்காட்டி ரசிகர்களைப் பயமுறுத்தினார்..!

குறிப்பாக ஆவிகளுடன் பேசும் காட்சியில், புத்தமத துறவிகளின் பூஜைகளும், ஆவிகளின் உலகமும், அங்கு ஆவிகளின் ராஜாவாக இருக்கும் ஒருவனும், அவனது செயற்பாடுகளும், அந்த ஆவிகளுக்கு இடையே பிரியா பாவணியின் ஆவி போகும் பாதையும், அதற்கு வழங்கப்பட்ட இசையும் வித்தியாசமாக, குறிப்பாக ஜப்பானிய அல்லது சீன மொழிப்படங்களில் பார்க்கும் காட்சிகள் போல் அமைந்திருந்தன..! அவை வித்தியாசமாக இருந்ததால், ரசிக்கும் படியாக இருந்தன.

குவாண்டம் பிசிக்ஸ் பற்றிய தன்மையைக்கூறி குறிப்பிட்ட இரட்டை நபர்களின் வாழ்க்கைப்போக்குப்பற்றி பாடம் நடாத்தியது உண்மையில் வேடிக்கையாக இருந்தது. இயற்கை இருவருக்கு மாத்திரமல்ல..! எல்லாருக்கும் ஏறக்குறைய ஒரே மாதியான தன்மையே கொடுத்துள்ளது. கண், காது, வாய்,  தலை, கால், மூக்கு என எல்லாருக்கும் ஒரு பொது வடிவத்திலேயே இருக்கின்றது..! அதிலும், சிலவற்றிற்கு இன்னும் பொருத்தங்கள் கூட இருக்கும்..! இந்து சமயத்திலே ஜாதகம் பார்ப்பதும் அவ்வாறான ஒரு தன்மையைச் சார்ந்ததேயாகும். எதற்கு, எது பொருத்தமாக இருக்கும் என்பதை இயற்கையே நிர்ணயிக்கும்..! அதைமீறினால், இயற்கை வழங்கும் தீர்ப்பை அவரவர் வாழ்க்கையில் பார்க்க முடியும்.

இந்தப்படத்தின் கதை என்று பார்த்தால், புற்றுநோயாளியான ஒருவரைக்காதலித்து கலியானம் முடிக்கும் பிரியா பாவணிக்கு, அவர் கணவர் நோயால் மரணமாகாமல், அதற்கு முதலே, தூக்குப்போட்டு இறந்தது பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. கணவனுக்கு புற்று நோய் இருப்பதை அறிந்து, அவரது விந்தணுக்கள் எடுத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது..! அதனூடாக, கணவன் இறந்தாலும், கணவனின் வாரிசைச் சுமக்க நினைத்த அவளுக்கு அது தடைப்படுவது ஆச்சரியத்தை அளிக்கின்றது..! ஒரு கட்டத்தில் இதன் பின்னால், ஏதோ ஆவிகளின் தொல்லை இருப்பதாக உணர்ந்து, புத்த மத துறவிகளின் உதவியோடு , கணவனின் விந்தணுவைப்பயன்படுத்திக் கர்ப்பமாவதே கதை என்றாலும் அதற்குள் பணப்பிரச்சனை, புத்தகத்தின்படி கொலை நடத்தல், எனப்பல கிளைக்கதைகள் எல்லாம் வைத்து படத்தை வித்தியாசமாக கொடுக்க முனைந்துள்ளார் அஜய் ஞானமுத்து..!

எல்லோரது நடிப்பும், தொழில்நுட்பங்களும் தரம். பல பூச்சுற்றல் காட்சிகளும் உண்டு. ஒளியியல் மாயங்களை நன்றாகப் பயன்படுத்தி, தலைவலிக்க வைத்துள்ளார்கள்..! சில இடங்களில் ரசிக்கவும் முடிகின்றது. சில இடங்களில் கணனி வரைகலை என்பது அப்பட்டமாகப் புரிகின்றது.

செயற்கை நெடியில், ஆவிகளின் அட்டகாசம் என படத்தின் போக்கை வர்ணிக்கலாம்..!

 


ஆ.கெ.கோகிலன்

08-10-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!